( தலைப்பை பார்த்து ஏடாகூடமாக எதையும் கற்பனை செய்யாமல் பதிவை படிக்கவும்...)
"ஏன்யா! இந்த ஊர்லே எல்லாரும் "த்தா ..த்தா"ன்னு சொல்றானுகளே!! என்னத்தையா
தர சொல்லி கேக்கறானுக?" -சென்னை வந்திறங்கிய முதல் கால்மணி நேரத்தில்
அல்டாப்பு என்னை பார்த்து கேட்டது அது. அதன் அர்த்தத்தை சொல்லி அல்டாப்பின்
வெள்ளை மனதையும் வெற்றுமூளையையும் களங்கபடுத்த ஆர்வமில்லாததால் " இந்த
ஊர்லே யார் என்ன கேட்டாலும் கொடுத்துடாதே..முக்கியமா பணத்தை "என கூறி
சென்னையை அறிமுகம் செய்தேன்.
சென்னைக்கு என்ன வேலை விசயமாய் வந்துள்ளீர் என யார் கேட்டாலும் "வேலை
இருந்தா எதுக்குயா சென்னைக்கு வர்றோம்.?" என்பதே என் வழக்கமான பதில். ஆனால் இந்த தடவை சென்னையில் ஒரு சிறு வேலை நடக்க
வேண்டி உள்ளது . அண்ணா சமாதியையும் நடிகர்களின் வீட்டையும் பார்ப்பதே
வாழ்வின் லட்சியமாக கொண்டிருக்கும் லட்சகணக்கான தமிழர்களில் அல்டாப்பும்
ஒருத்தன் என்பதால் அவனையும் கூட்டி கொண்டு இந்த சென்னை பயணம்.
போன வாரம் சர்க்கரைவாசன் என்ற ஒரு தயாரிப்பாளர்
போனில் கதை சொல்ல வருமாறு அழைத்திருந்தார். நான் படம் எடுக்க ஒரு கதையோடு
அலைகிறேன் என கண்டுபிடிததற்க்கே அவருக்கு இந்த வருட சிறந்த
கண்டுபுடிப்பிற்க்கான நோபல் பரிசை தாரளமாக வழங்கலாம். இம்முறையாவது
வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற சிறு நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் தருவதே
சென்னை என் போன்றவர்க்கு அளிக்கும் வரம்.. அதே சமயம் சாபமும் கூட .
வழக்கம் போல சென்னை மதம் கொண்ட காட்டு மிருகத்தை போல
திக்கெட்டிலும் தறிகெட்டு ஓடி கொண்டிருந்தது . " எதுக்கய்யா எல்லாரும்
இவ்ளோ அவசரமா எங்கயோ போயிட்டு இருக்காங்க ??" என்ற அல்டாப்பிடம் " அவங்களை
நிறுத்தி கேட்டு பாரு... அவங்களுக்கே தெரியாது " என்றேன். அலுவலுகத்திற்கு
எவ்வளவு அவசரமாய் செல்கிறார்களோ அதே அவசரத்தோடு வீட்டிற்கும் திரும்பும்
விந்தையான மக்களை கொண்ட நகரம் சென்னை. காலை மனைவியிடம் தப்பிக்க ஆபிசுக்கு
ஓடி , மாலை மேனேஜரிடம் தப்பிக்க வீட்டுக்கு ஓடி... என்ன ஒரு இனிமையான நகர
வாழ்க்கை
சாலை
ஓரம் கூவி கூவி லோன் விற்கும் இளைஞர்கள் , சிக்னலில் கார் கண்ணாடியை
துடைக்கும் பிச்சைகாரகள் , அவர்களை கண்டு கொள்ளாமல் சிக்னலை
மட்டுமே வெறித்து நோக்கி அமர்ந்திருக்கும் காரோட்டிகள் உள்பட வாழ்நாளில்
தான் பார்த்தறியா கதாபாத்திரங்களை கண்டு வியந்தவாறே அல்டாப்பு உடன் வர ,
ஒரு வழியாய் தயாரிப்பாளர் இல்லம் வந்தடைந்தோம் .
"தரணிஆளும் பவர்
ஸ்டார் சக்கரைவாசன் வாழ்க !!" , "அடுத்த அமெரிக்கா ஜனாதிபதி பவர் ஸ்டார்
வாழ்க!" என்ற பேனர்கள் எங்களை ஆர்ப்பாட்டமாய் வரவேற்றன . தமிழகத்தின்
பிரபல நடிகரின் வீட்டை பார்த்த அடங்காத மகிழ்ச்சியில் அல்டாப்பும்
,தலைவிதியின் நிலைமையை நொந்தவாறு நானும் உள்நுழைந்தோம்.
வழுக்கைதலையை தடவியவாறு வந்த ஹீரோ கம்
தயாரிப்பாளர் சக்கரைவாசனை கண்டு எனக்கு ஆச்சர்யம் எதுவுமில்லை ..
தமிழ்நாட்டில் அரசியலிலும் சினமாவிலும் நுழைய பணத்தை தவிர வேறெந்த
தகுதிகளும் தேவை இல்லைதானே ?.. வாயெல்லாம் பல்லை காட்டிக்கொண்டு கைகுலுக்கி
அல்டாப்பு தன் பரவசத்தை வெளிபடுத்திகொண்டான். இதயத்தின் ஒரு பக்கம்
ஓலமிட்டு அழ , மறுபக்கத்தை கல்லாக்கி கொண்டு பவர்ஸ்டார்க்கு கதையை சொல்லி
முடித்தேன்.
"கதை
ஓகே.. ஆனா வில்லேஜ் சப்ஜெக்டா இருக்கே. பவர்ஸ்டார்க்கு ஏத்த பவர்
இல்லையேப்பா ??" என்ற சக்கரைவாசனிடம் " இப்போ நம்ம ஊர்லே எல்லா
வில்லேஜ்ஜுமே பவர் இல்லாமேதான் சார் இருக்கு ". என அப்பாவியாய்
பதிலளித்தேன் . " எனக்கு ஏத்த மாதிரி நல்ல ஆக்சன் சுப்ஜக்டா ரெடி பண்ணிட்டு
வா அடுத்த மாசம்.." என்று பவர்ஸ்டார் எங்களிடம் விடைபெற்று கொண்டார். வெகு
ஞாபகமாய் அல்டாப்பு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி பத்திரபடுத்தி கொண்டான்.
உதாசீனங்கள்
பழகியவையே என்றாலும் தகுதி இல்லதாதவரிடமிருந்து கூட வந்த புறக்கணிப்பு
சற்று வலிக்கவே செய்தது .. தன் பிறவி பயன் பூர்த்தி அடைந்தது போல தனக்கு
தானே சிரித்து கொண்டு முகம் முழுக்க பெருமையோடு ஆட்டோகிராப்பை அடிக்கடி
பார்த்துகொண்டு குதூகலமாய் வந்த அல்டாப்பை பார்த்து
என்னுள் தொக்கி நின்ற கேள்வி " இப்போ நான் அழுவதா ? சிரிப்பதா..?"
-வினோத்குமார் நடராஜன் @altappu
வழக்கம்போல அல்டாப்பின் அதகளம்.. கலக்கீட்டீங்க சீன்ஸ்..
ReplyDeleteஅப்புறம் நெம்ப நாளா எனக்கு டவுட்டு.. ஆரு அது அல்டாப்பு.?
//உதாசீனங்கள் பழகியவையே என்றாலும் தகுதி இல்லதாதவரிடமிருந்து கூட வந்த புறக்கணிப்பு சற்று வலிக்கவே செய்தது//
ReplyDeleteSuper Mama
நல்லா இருக்கு. . . பவருக்கே பவரா கதசொல்றது கொஞ்சம் கஷ்டம்தான். :)
ReplyDelete//அலுவலுகத்திற்கு எவ்வளவு அவசரமாய் செல்கிறார்களோ அதே அவசரத்தோடு வீட்டிற்கும் திரும்பும் விந்தையான மக்களை கொண்ட நகரம் சென்னை// ரசித்த வரிகள். நன்று
ReplyDeletesuper
ReplyDelete//இப்போ நம்ம ஊர்லே எல்லா வில்லேஜ்ஜுமே பவர் இல்லாமேதான் சார் இருக்கு //
ReplyDeleteசத்தம்போட்டுச் சிரிச்சேன். :))
ஆல்- டாப்பு :))) ரேனிகுண்டாஸ் ஆல்வேஸ் டாப்பு !!! நல்லா இருக்குயா !
ReplyDelete