Monday, May 14, 2012

வந்தியத்தேவனும், நானும்!


பள்ளிப்பருவத்தில் தன் குழந்தைகளை நல்ல பள்ளிகளின் விடுதியில் சேர்த்தால் எந்த இடையூறுமின்றி நல்லா படிப்பாங்க,நல்ல வாழ்க்கை அமையுமென விழிகளுக்குள் கனவுகளைச் சுமக்கும் பெற்றோர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம். (என் அனுபவம் இது!)

பத்தாம் வகுப்புவரை துடுக்கான,அழுதறியாத, வாயாடிப் பெண்ணாக அப்பாவின் அதீத செல்லத்துடன் வளர்ந்தவள் நான். எல்லாமே என் விருப்பம்தான். அம்மா, அப்பா இருவருமே ஆசிரியர்கள், படிப்பிற்கு முக்கியத்துவமளிப்பவர்கள். எனவே என்னதான் விளையாட்டுத்தனமாகபொறுப்பின்றி திரிந்தாலும், படிப்பில் மட்டும்
சிறிதளவு கவனம் செலுத்திப் படித்தேன். படிப்பு விஷயத்தில் மட்டும் என்
போக்கில் என்னை விட்டுவிட்டனர் என் பெற்றோர். அவ்வளவு நம்பிக்கை. நானும் நல்ல மதிப்பெண்கள் பெற்று அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றினேன். பத்தாம் வகுப்பில் ஏற்கனவே என்னிடம் கூறியதைப்போல் நாமக்கலிலுள்ள ஒரு பிரபல மேனிலைப் பள்ளியில் என்னை சேர்த்தனர்.

எனக்கும் எதுவும் தோன்றவில்லை முதலில். படிப்பதற்காகத்தானே செல்கிறோம், முக்கியமாக என் சகோதரனின் அடிதடிசண்டைகளிலிருந்து தப்பிவிடலாமென்ற சின்னபிள்ளைத்தனமான காரணமும்ஒன்று.
முதல்நாள் என்னை பள்ளியில் சேர்த்துவிட்டு கிளம்புகையில் நான்
சிரித்தபடி கையசைத்து வழியனுப்பிய தருணம் அம்மா என்ன நினைத்தார்களோ தெரியவில்லை என்னை இறுக அணைத்துக்கொண்டு ரொம்பவே அழுதாங்க. என்னாலும் தாங்க முடியாமல் அழுதேன். (இப்போது நினைத்தாலும் கண்ணீர் வரவழைக்கும் நொடிகள்) பிரிய மனமில்லை.. ஆனாலும் பிரிந்துதானாக வேண்டும். அப்பா எங்களைச் சமாதானப்படுத்த முயன்று அழுகையை மறைக்க முற்பட்டபடி என்னிடம்
விடைபெற்றுக்கொண்டு அம்மாவை அழைத்துச் சென்றார்கள்.


அன்றிரவு புதுத்தோழிகளுடன் கதைத்தபடி உறங்க முற்பட்டேன். ஏதேதோ கனவுகள் கண்முன் உதித்தன. அம்மா, அப்பா, வீடு, என் சைக்கிள், தோழிகள்..... அழுகையை அடக்க முடியாமல் தேம்பித்தேம்பி அழுதேன் கனவிலும்,நிஜத்திலும்.. (அன்று ஆரம்பித்த அழுகைதான், இரண்டு வருடங்கள் நிழல்போல் என்னைப்பின் தொடர்ந்து வந்தது போலும்)
தினமும் கனவு வரும்.. அதைத்தொடர்ந்து அழுகை வரும். என்னைப்பார்த்து என் அறைத் தோழிகளும் அழ ஆரம்பித்துவிடுவர் அல்லது அவர்களைப் பார்த்து நான் அழ ஆரம்பிப்பேன். (ஒண்ணா சேர்ந்து உருப்படாம போயிட்டோம்;) )
 குறிப்பாக ஞாயிறு காலை உணவாக ப்ரட், ஜாம் பார்க்கும் போதெல்லாம் அழுவேன் (சுத்தமா பிடிக்காது :) இதற்கிடையே பாடங்களும் பயங்கரமா நடத்துவாங்க பள்ளியில். ஓய்வே கிடையாது.  காலை 6 மணிக்கே பள்ளி தொடங்கி மாலை 4 மணிக்கு முடியும். மீண்டும் மாலை 6 மணி முதல் இரவு 12மணி வரை படிப்பு நேரம். கண்டிப்பாக வகுப்பறையிலோ, மரத்தடியிலோஅமர்ந்து படிக்க வேண்டும் அல்லது படிப்பதைப்போல் நடிக்க வேண்டும். படிப்பு! படிப்பு! படிப்பு! ஆவ்வ்...

தினமும் ஏதேனுமொரு பாடத்தில் தேர்வு வைத்துக்கொண்டே இருப்பர். அதற்கும் படிக்கவேண்டும். கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களையும் செய்யவேண்டும். நம் விருப்பப்படி படிக்க முடியாது. படிக்கவே பிடிக்கவில்லை அந்நாட்களில்... வீட்டில் சொன்னால் அம்மா கவலைப்படுவார்களென்ற காரணத்தால் வேறு வழியின்றி அழுகைக்கும், வெறுப்பிற்கும், அம்மாவின் அன்பிற்கும் ஏங்கியபடி எப்போது வீட்டிற்கு செல்வோமென்று காலண்டரில் தேதிகளை அடித்தபடி
நகர்த்தினேன் நாட்களை. படிக்கவில்லை... சராசரியான மதிப்பெண்களே
பெற்றேன். குற்றவுணர்வுடன் பெற்றோரை சந்திக்க நேரும்போதெல்லாம் "12வதில்பாத்துகலாம் பப்பூ.. எங்களுக்கு உன்மேல் ஆழமான நம்பிக்கையுண்டு" -எனும் அப்பாவின் வார்த்தைகள் மேலும் குற்ற உணர்ச்சியைத் தரும். நம்பிக்கையின்றி சென்று கொண்டிருந்த அந்த நாட்களில் எனக்கிருந்த ஆறுதல் என் தோழிகளே!
அவ்வபோது பல சேட்டைகள் செய்து மகிழ்ந்தோம். எப்படியோ முடித்துவிட்டேன் பதினோராம் வகுப்பை!
பன்னிரெண்டாம் வகுப்பு! மலைப்பாக இருந்தது என்மேல் சுமத்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய பொறுப்பை நினைத்து! அங்கே நானிருக்கும் ஒவ்வொரு நொடியும் என் அப்பா, அம்மாவின் உழைப்பை ஃபீஸ் என்ற பெயரில் தின்று கொண்டிருந்தது! ஓர் நாள் கணித ஆசிரியரின் அருவை தாங்காமல் நானும் என் தோழிகள் சிலரும் முதல்முறையாக பள்ளி நூலகத்திற்குள் ஒளிந்துகொள்ள முற்பட்டபோதுதான் என்
கண்களுக்குத் தென்பட்டாள் பூங்குழலி, பொன்னியின் செல்வன் வாயிலாக
எனக்குக் கிடைத்த தேவதை :-) 
அம்மாவிற்கு அப்புத்தகத்தின் மேல் அலாதிப்
பிரியமுண்டு. ஏனோ படிக்க வேண்டுமென்று என் மனம் இயம்பிய மொழிகளுக்கு இசைந்து விடுதிக்கு எடுத்து வந்து படிக்கத் தொடங்கினேன்! வந்தியத்தேவனுடன் குதிரையில் நானும் பயணித்தேன்! மயங்கினேன் அவனது குறும்பிற்கு :-) உறக்கம் துறந்து படித்துத் திளைத்தேன். அடுத்தநாள் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்திடும்போதுகூட பெஞ்சிற்கு அடியில் ஒளித்து வைத்தபடி படித்தேன். (இன்றும் தொடர்கிறது இப்பழக்கம்) அப்போதுதான் பூங்குழலியின் கானத்திற்குச் செவிசாய்க்கத் தொடங்கினேன்!  வியந்தேன். இப்படியொரு பெண்ணா என? 
சுதந்திரப்பறவை! தைரியசாலி!புத்திசாலி! மனதை ஈர்த்தாள் பூங்குழலி.
தனிமையையும், வெறுமையையும் கண்டு அஞ்சாமல் தைரியமான பெண்ணாக இருக்க ஊக்குவித்தாள் என்னையவள்.

பூங்குழலியைப்போல் எதற்கும் அஞ்சாமல், தனிமையை விரும்பிடும் பெண்ணாக நானும் மாற விரும்பினேன். என்னை மாற்றிக்கொள்ள முயன்றேன். சோர்வாய்இருக்கும் போதெல்லாம் வாசித்தேன் பொன்னியின் செல்வனை!மீண்டும்..மீண்டும்.. வாழ்வின்மீது சிறு பிடிப்பும், நம்பிக்கையும்
உண்டானது! என் ஆருயிர்த் தோழியானாள் பூங்குழலி. என் முதல்
காதலாய், கற்பனைக் காதலனாய் எனை ஆட்கொண்டான் வந்தியத்தேவன் (எப்போதுமே:-))!
உற்சாகம் தொற்றிக்கொண்டது! மீண்டும் நானாய் மீண்டு வந்தேன். அழுகின்ற
நிமிடங்கள் குறைந்தன! படிக்கத் தொடங்கினேன்! என் பெற்றோர் எதிர்பார்த்த
அளவு மதிப்பெண்கள் பெறாவிடினும் நான் படித்ததற்கேற்ப மதிப்பெண்கள்
பெற்றேன்! என்னைப்போல் விடுதியில் தங்கிப் படித்த எல்லா
பள்ளிக்குழந்தைகளின் வாழ்விலும் உற்சாகம் குறைந்திருக்கும் என்பது
மட்டும் உண்மை! அதேசமயம் வீட்டை மறந்து வெறித்தனமாகப் படிக்கும்
குழந்தைகளுமுண்டு (லூசுங்க!அவ்வ் )
அப்பள்ளியில் சில ப்ளஸ்,மைனஸ்கள் உண்டு
ப்ளஸ்கள்:
1.சாப்பாடு சூப்பரா இருக்கும்.வாரத்தில 4 நாள் ஐஸ்க்ரீம் தருவாங்க அங்கே..
வெள்ளிக்கிழமை செய்யும் பருப்பு சாதத்தின் சுவைக்கு நான் அடிமை.
2.இரண்டு வாரங்களுக்கொரு முறை பெரிய திரை கட்டி புதுப்படம் போடுவாங்க
சனிக்கிழமைகளில். அழகிய தருணங்கள்.!
3.ரொம்ப நல்லா பாத்துப்பாங்க ஆசிரியர்களும்,வார்டன்களும். ப்ரெண்ட்லி அப்ரோச் தான்.

மைனஸ்கள்:
1.படிப்பை சொல்லித்தரும் முறை சரியில்லை.
2.மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து தரம்பிரித்து அடிக்கடி வகுப்புகளை மாற்றுவாங்க.
3.பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வின்போது ஆசிரியர்களே
மாணவர்களுக்கு பிட் எழுதித் தருவாங்க {ரொம்ப மோசம்}
என்னதான் என்னை அழ வைத்து, தனிமைக்கு ஆளாக்கி, புலம்ப வைத்திருந்தாலும் இனிய தோழிகளையும், கற்பனைக் காதலனையும், பூங்குழலியையும் எனக்களித்த பள்ளி அது! கடைசிநாள் உருண்டு புரண்டு அழுதேன் தோழிகளுடன். 
6 மாதமாகபுத்தகத்தை return பண்ணாததால் 1500Rs ஃபைன் கட்டினதுக்கும் சேர்த்துஅழுதேன்! அவ்வ் :(
இதனால் நான் சொல்ல விளைவது யாதெனில்,பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க விடுதியில் சேர்க்க வேண்டுமென்ற அவசியமில்லை! உங்களின் அன்பு, அரவணைப்பு, அருகாமை, வழிகாட்டுதல் போதும்! அவ்வளவுதான்.
பி.கு:
நானெல்லாம் என் குழந்தைகளுக்கு ஹாஸ்டல் எனும் வார்த்தையைக்கூட
சொல்லிக்கொடுக்க மாட்டேன் எதிர்காலத்தில்.ஆமென் :-)
வழக்கம்போலவே, புலம்பல்களுடன், ஸ்ரீவித்யா.R @im_sri
டிஸ்கி: இதை படித்துவிட்டு கொலைவெறியாவோர் சோனியா அக்காவைக் கொல்லவும். இதை நான் எழுத ஊக்குவித்தது அக்காதான்
அக்கா இல்லையெனில் இப்படி பதிவெழுதும் எண்ணமே வந்திருக்காது எனக்கு. நன்றிகள் அக்கா மற்றும் தோழமைகள் அனைவருக்கும் நன்றி.!!

16 comments:

  1. நல்ல எழுத்து நடை.. செண்டிமென்டலான, அழுகாச்சி விஷயங்களைக்கூட சுவாரசியமா சொல்றீங்க..
    வாழ்த்துக்கள்.!! தொடர்ந்து எழுதுங்க :-)))

    ReplyDelete
  2. பள்ளி விடுதியின் அனுபவம் மட்டுமல்லாமல், புத்தகத்தின் அறிமுகம் கிடைத்து அதற்கு ரசிகையானதையும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். இன்னும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நல்ல எழுத்து நடை..நல்லா வருவிங்க..நமக்கெலாம் சுட்டு போட்டாலும் படிப்பு வராது.. இதுக்கு இப்படி ஒரு பிட்டா?? ஹி ஹி..

    ReplyDelete
  4. பூவு என்கிற சிறீவித்யாவுக்குள்ளே பதுக்கி வைக்கப்படிருந்த பள்ளி நாட்களையும் ,அவை கற்றுக்கொடுத்த பாடங்களையும் எளிய நடையில் சொல்லி இருகிறாயம்மா.. ஒவ்வொருத்தருக்கும் பாடசாலை வாழ்க்கை என்பது ஏதோ ஒரு கல்வெட்டை விட்டுப்போவது உண்மை,அதில் உனக்கு வந்தியத்தேவனையும் பூங்குழலியையும் கனவு வாழ்க்கையாக செதுக்கி போய்யிருக்கிறது,பதிவுமுயற்சி வரவேற்கத்தக்கது..கொஞ்சம் செதுக்கி எழுதினால் இன்னும் மிக அருமைக பலரை அடிமையாக்க வைக்கும் உனது எழுத்து ,வாழ்த்துக்கள் வித்யா முயற்சிகளை விடாது தொடரவும் ..

    ReplyDelete
  5. இந்த பதிவில் நீங்க சொல்லாமல் சொல்லிய விடயம்,மனதிற்கு பிடித்ததை செய்யும் போது,மனதிற்கு ஒவ்வாத விடயங்கள் கூட அதன் முக்கியத்துவம் கருதி,ஒரு ஒழுங்குக்குள் வந்து விடுகிறதென்பது.

    பதிவெழுத தொடங்கும் போது என்ன எழுத வேண்டுமென்று எந்த முன் முடிவுமற்று தொடங்கியிருக்கிறீர்கள். சோர்வடையா நடை,கொஞ்சம் கவணம் செலுத்தி எழுதினால் தமிழ் எழுத்துலகில் மேலும் ஒரு பெண் எழுத்தாளர் பிறந்தவிடுவார்.

    கற்பனை பாத்திரமான பூங்குழலி இன்றும் பலரின் வாழ்வில் தாக்கமேற்படுத்திக் கொண்டிருக்கிறாள். -தொடரட்டும்

    ReplyDelete
  6. இந்த பதிவு எழுத காரணமாக இருந்தது நிச்சயம் கல்கி அவர்கள்தான்,எவ்வளவு அருமையான படைப்பு பொன்னியின் செல்வன்,அவரை புகழும் அளவுக்கு தகுதி இல்லை தான் ஆனால் அவரை கொண்டாட உரிமை இருக்கு . .
    இந்த பதிவை படித்ததும் பிரமிப்பாக இருந்தது .என் பதிவை நான் ரொம்ப குஷ்ட்டப் பட்டு எழுதினேன் . வித்யா சர்வ சாதாரணமாக எழுதி தள்ளிட்டா :)) பாராட்டுகள் தங்கோம் !!
    இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன் .

    ReplyDelete
  7. //6 மாதமாகபுத்தகத்தை return பண்ணாததால் 1500Rs ஃபைன் கட்டினதுக்கும் சேர்த்துஅழுதேன்! அவ்வ் :(//
    இதே மாதிரி எனக்கும் நடந்தது ஆனா வேற புக்கு :)
    நல்ல எழுத்து நடை.
    தலைப்பை "அழுகையும் நானும்" என்று வைத்திருக்கலாமோ என யோசித்தவர்களில் நானும் ஒருவன்.

    ReplyDelete
  8. இந்த பதிவில் உங்கள் கற்பனையை படிக்கிறபொழுது படிக்கிறபோது சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் என்கிற ஆதவன் சிறுகதை தான் நினைவுக்குவருகிறது.சொல்லவந்த கருத்து அருமை.# சுவாரஸ்யமாக படிக்க வைக்கும் நல்ல எழுத்துநடை உங்களுக்கு வருகிறது வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  9. Nice post. வாழ்த்துகள்.
    என்னுடைய உயிர்த்தோழி 11th,12th. ஹாஸ்டல் பள்ளியில் சேர்ந்த போது இரு வருடங்களும் கடிதங்களும்,Missing you கார்டுகளுடனேயே பொழுதுகளை கழித்ததாக கூறுவாள்.நானும் வாரமொருமுறை அவளோடு பேசும் 5நிமடத்திற்க்காக அவள் வீட்டில் அவள் பெற்றோருடன் ஒருமணிநேரமாக மாறிமாறி அவள் ஹாஸ்டல் போனுக்கு முயற்சி செய்தது நினைவு வந்தது.
    பூங்குழலி யாக மாற வாழ்த்துகள் :))))) @shanthhi

    ReplyDelete
  10. போலீஸ் புடிங்க போலீஸ். புடிச்சு உள்ள போடுங்க. பிளாக் எழுத சொன்னா இங்க வந்தும் அழுவாய்ங்கலாம். அவ்வ்

    குட் கீப் இட் அப் தங்கச்சி :)))

    ReplyDelete
  11. ஹாஸ்டலில் படிக்கும் உள்ளங்களீன் குமுறல்கள் மிக யதார்த்தமாக சொல்லப்படிடிருக்கிறது.. நல்ல நடை..

    ReplyDelete
  12. உங்களின் நினைவுக் குறிப்புகளை அடுக்கடுக்காக எழுதி இருக்கிறீர்கள் ,அத்தோடு விட்டிருக்கலாம் இந்தப் பதிவை ,இடையில் அறிவுரை என்ற பதத்தை நுழைத்து பதிவை பஸ்மமாக்கி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  13. இதே போல் விடுதி அனுபவங்கள் எனக்கும் உண்டு.. முதல் முறையாக அம்மா-அப்பாவை பிரிவதொடு மட்டும் அல்லாமல் படிக்கவும் செய்ய வேண்டும் என்பது பெரிய சுமை தான்.

    வித்யா உன் புலம்பல்கள் ஆழமானதாக இருக்கு.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வருங்காலத்துல என்னை மாதிரி பெரிய எழுத்தாளினியா வருவ பாப்பூ நீ ! வாழ்த்துகள்

    ReplyDelete
  15. இதுக்குத்தாங்க இஸ்கூலு பக்கம் போகவே கூடாதுன்னு முதலாம் சுட்டபழம் முன்னூறு வருஷத்துக்கு முன்னமே சொல்லியிருக்காரு ....

    ReplyDelete
  16. அட்டகாசமான பதிவு.வாழ்த்துக்கள்!

    ReplyDelete