சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு – இது சில ஆண்டுகளாய் பல நிலைகளில்
விவாதிக்கப்பட்டு வேண்டாம் என பொது மக்களில் பெரும் பகுதியினர் கதறினாலும் வழக்கம்
போல காங்கிரசு அரசால் கண்டுகொள்ளப்படாமல் சட்டமாக்கப்ட்டுள்ளது.
சில்லறை வணிகத்தை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். ஒரு நிறுவனப் பொருட்களின்
சில்லறை வணிகம்(Single Brand Retail) (உதாரணம் – நோக்கியா
விற்பனையகம்) பல நிறுவனங்களின் சில்லறை வணிகம்(Multi-Brand Retail)(உதாரணம் – Univercel
Showrooms).
இன்று கொண்டுவரப்பட்டுள்ள சட்டமானது இந்த இரண்டு வகையான சில்லறை வணிகத்திலும்
அந்நிய முதலீடுகளின் அளவுகளை அதிகப் படுத்தியுள்ளது. ஒரு நிறுவன சில்லறை
வணிகத்தில் 51% முதல் 100% வரை அந்நிய முதலீட்டை அனுமதிக்கிறது புதிய சட்டம். பல
நிறுவன சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 51% வரை உயர்த்தியிருக்கிறது
இந்த சட்ட திருத்தம்.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம் இனி வால்மார்ட், டெஸ்கோ, பிளாக்பெர்ரி போன்ற
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்யும். இதன்மூலம் அந்நிய முதலீட்டை
இந்தியாவிற்குள் கொண்டு வருகிறோம், வேலை வாய்ப்பை அதிகப்படுத்துகிறோம்,
இடைத்தரகர்களை நீக்கி விவசாய பொருட்களுக்கு அதிக விலை கிடைக்க வழி செய்கிறோம்
போன்ற விஷயங்களை பெருமையாக கூவுகிறது காங்கிரஸ் அரசு.
விஷ்யத்திற்கு வருவோம். வழக்கம் போல் நான் இந்த கட்டுரையை சில்லறை வணிகத்தில்
நேரடி அந்நிய முதலீட்டை குறை கூறவே எழுதுகிறேன். அதற்கு முன் ஒரு சின்ன விஷயம்.
அந்நிய முதலீடு என்பதே ஒரு ஏமாற்று வேலை. 1000ரூபாயை முதலீடு செய்து அதன்
மூலம் வியாபாரம் செய்து வருடாவருடா வரும் நம் மக்களிடமிருந்து 10,000ரூபாயை
லாபமாக தன் நாட்டிற்கு எடுத்துச் செல்ல வழி வகுப்பதுதான் நான் அறிந்த அந்நிய
முதலீடு.
இதை இப்போது அடித்தட்டு வணிகமான சில்லறை வணிகத்தில் அனுமதித்திருப்பதன் மூலம்
நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் செயலாகவே இது தெரிகிறது. இதன்
மூலம் நாம் மளிகை பொருள் வாங்கும் அண்ணாச்சிக்கடைகளும் பெட்டிக்கடைகளும் காணாமல்
போய்விடும் அபாயம் இருக்கிறது. நம் மக்களின் வாங்கும் சக்தியிலிருந்து லாபம்
பார்த்த உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து பிடுங்கி அந்த லாபத்தை வெளிநாட்டு
நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கிறது இந்த சட்டம். முதலில் பணம் இந்தியாவில்
இருந்தது, இதில் இந்தியாவை விட்டு போய்விடும்.
இந்த
சில்லறை வணிக நிறுவனங்கள் பொருளாகவோ, உதிரி பாகங்களாகவோ 30% உள்ளுர்
கொருட்களை கொள்முதல் செய்யவேண்டும் என விதி இருக்கிறது. இதன் மூலம் உள்ளூர்
சிறுதொழில் வளரும் என விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் அதிலும் அந்நிய
நாட்டு
நிறுவனங்களுக்கு ஆதரவாக பல ஓட்டைகள். உயர் தொழில்நுட்பம் சம்பந்தட்ட
கொருட்களை
விற்கும் நிறுவனங்கள் இந்த விதியை கடைபிடிக்க வேண்டி இருக்காது.
உதாரணத்துக்கு
ப்ளாக்பெர்ரி மொபைல் உள்ளூரில் தயாரிக்கும் எதையும் பயன்படுத்த முடியாது.
ஆகவே
எல்லாவற்றையும் தருவித்துக் கொள்ளலாம். இதை பயன்படுத்தி அனைத்து
நிறுவனங்களும் 30%
உள்ளூர் கொள்முதல் என்ற விதியை கடைபிடிக்கப் போவதில்லை. மேலும் இந்த 30%
கொள்முதல்
செய்ய தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களின் ஆரம்பகால மூலதனம் 1 மில்லியனாக
இருந்திருக்க வேண்டுமாம். அதாவது சுமார் 6கோடி ரூபாய்கள். இவைதான்
சிறுதொழில்
நிறுவனகளாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய நிறுவனங்கள் முக்கால்வாசி
மிகப்பெரிய நிறுவனங்களின் துணை நிறுவனங்களாகவே இருக்கும் என்பதுதான் உண்மை
நிலவரம்.
அடுத்தது
விவசாய பொருட்களுக்கு அதிக விலை. இதைப்போல ஒரு ஏமாற்றுவேலை எங்கும் இருக்க
முடியாது. அரசாங்கத்தின் விவசாயப்பொருள் கொள்முதல் செய்யும் கமிட்டிகளில்
அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலைக்கு விவசாயிகளிடம் வாங்கும்
வியாபாரிகளே தங்களுக்குள் பேசிவைத்துக் கொண்டு அநியாயமாக அடி மாட்டு
விலைக்கு
பொருட்களை வாங்குகிறார்கள். பன்னாட்டு பெரிய முதலாளிகள் இதை மேலும்
அடாவடியாகத்தான் செய்வார்கள். மேலும் இடைத்தரகர்கள் நீக்கப்படுவார்கள்
என்பதும்
பொய்யே. அந்த இடைத்தரகர்களின் வேலையைத்தானே இவர்களின் பர்ச்சேஸ் துறை(Purchase Dept) அதிகாரிகள் செய்கிறார்கள்.
அவர்களின் சம்பளம் என்பது யாரிடமிருந்து எடுத்து வழங்கப்படும்.? கரும்பு என்பது
சர்க்கரை ஆலைகளின் நேரடி கொள்முதல்தான். ஆனாலும் விவசாயிகளுக்கு எந்த விதத்திலும்
லாபம் அளிக்கவில்லை. மேலும் முதலில் சந்தைக்குள் நுழைய அதிக பணம் கொடுத்தாலும்
பின்னர் விவசாயிகளை அவர்கள் சொல்படி ஆட்டி வைக்கும் வேலைதான் நடக்கும். அமெரிக்கா
போன்ற நாடுகளிலேயே இவ்வாறு கட்டுப்படியாகாத விலையால் விவசாயிகளுக்கு மானியம்
வழங்கி சமாதானம் செய்கிறது அங்கத்திய அரசு.
அடுத்தது அதிக வேலை வாய்ப்பு என்பதுதான் மிகப் பெரிய பொய். வால்மார்ட்,
டெஸ்கோ போற நிறுவனங்கள் தம்தம் ஊரில் ஆட்குறைப்பு செய்கின்றன. இடைத்தரகர்கள் என்
அழைக்கப்படும் மொத்த வியாபாரி, கொள்முதல் செய்யும் வியாபாரி, சில்லறை வியாபாரி,
கடைக்காரர், கடையில் வேலை செய்பவர்கள் என எல்லோரையும் வேலையாட்களாக கணக்கில்
எடுத்துக் கொண்டு பார்த்தால் புரியும். இது புது வேலைவாய்ப்புக்களை உருவாக்குமா
அல்லது இருக்கிற வேலை வாய்ப்புகளை குறைக்குமா என.
மேலும் பல குளறுபடிகள் இருக்கிறது இந்த சில்லறை வனிகத்தில் நேரடி அந்நிய
முதலீடு என்பதில். ஆக மொத்தம் இந்தியாவை கூறுபோட்டு விற்றுவிட்டுதான் காங்கிரஸ்
அரசு ஓயும் என்பது உறுதியாகிறது. மீண்டும் ஒரு வகையான காலணிவாத ஆதிக்கத்திற்கு
நம்மை நாமே விரும்பியே ஆட்படுத்துகிறோம்.
இந்த சில்லறை வணிகத்தை கூட்டுறவு முறைப்படி விவசாயத்தையும் அதில் முழுதாய்
இணைத்து சரியாய் திட்டம் தீட்டி செயல்படுத்த ஏன் இந்த அரசாங்கம் முன்வரவில்லை.
செம்மையாய் செயல்பட்டுவந்த அரசாங்க ஊழியர்களின்/இராணுவ வீர்ர்களின் கூட்டுறவு சில்லறை
விற்பனையகங்கள் ஏன் விரிவாக்கவில்லை அதை.?
-செந்தில்நாதன் @senthilchn