Saturday, July 14, 2012

சென்னை அரசு பொது மருத்துவமனை- ஒரு சாதாரணனின் பார்வையில்..

கடந்த வியாழனன்று உறவின நண்பரொருவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனை பெறுவதற்காக சென்னை சென்ட்ரல் எதிரேயுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. காலை எட்டு மணியிலிருந்து மதியம் மூன்று மணிவரை அங்கிருந்த அத்தனை நேரம்  முழுக்கவே கசப்பான அனுபவங்கள்.

முதலில் இவ்வளவு பெரிய மருத்துவமனையில் வெளியூரிலிருந்தோ, உள்ளூரி
லிருந்தோ வரும் பார்வையாளர்கள்/ நோயாளிகளுக்கு சரியான தகவல்களைத் தந்து வழிகாட்ட அங்கு ஒருவருமே இல்லை. சிறுநீரகவியல் துறையை தேடிப்பிடிக்க பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. வாசலிளிருந்த காவலரிடம், "கிட்னி சம்பந்தமான டிப்பார்மென்ட் எங்கேருக்கு'ண்ணே.. யாரை பார்க்கணும்.?"  "மேல போயி பாருங்க.." 
மேலே சென்று குங்குமம்- புதுசு கண்ணா புதுசு படித்துக் கொண்டிருந்த ஒரு நர்சிடம்.. "எக்ஸ்க்யூஸ்மீ சிஸ்டர்.. இந்த நெஃப்ராலாஜி.." புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல், "அவங்களைப் போய் பாருங்க.." கை மட்டும் இடது புறம் காட்டியது. கைகாட்டிய திசையில் சென்று, "சிஸ்டர்..நெஃப்ராலாஜி டிபார்ட்மென்ட் எங்கேருக்கு.?"  "எனக்குத் தெரியாதுங்க.."  சுத்தம்.. 
வேறு ஒரு மருத்துவமனை ஊழியரை அண்ணே என வழிமறித்து திரும்பவும் அதே பல்லவி.. "நீங்க கீழ ஒ.பி. வார்டுல போயி பாருங்க சார்.." 
 

-யோசித்துப்பாருங்கள்.. வெறுமனே தகவல்கள் பெற வந்த எங்களுக்கே இந்த நிலைமையெனில், சிகிச்சைக்காக தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து தினமும் கிளம்பி வரும் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் கதி.??

ஒரு வழியாக ஒ.பி வார்டை கண்டறிந்து அங்கு சென்றால்....  அவுட் பேஷன்ட் அட்மிஷனுக்கு அனாயசமாக நூறு ரூபாய், டோக்கன் க்யூவில் முந்திச்செல்ல எல்லோர் முன்னிலையிலும் சிறிதும் வெட்கமின்றி ஐம்பது ரூபாய் லஞ்சம்.. அடடா.. எங்கெங்கிலும் லஞ்சம் தலை, கை,கால் என அனைத்தையும் விரித்தாடுகிறது. போததற்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு முந்திச்செல்ல அனுமதித்ததை கேட்ட ஒன்றிரண்டு பேரை திமிருடன், தரக்குறைவாக பேசிய கொடுமையும் நடந்தது.


மருத்துவர்களின் அலப்பறை அதற்கும் மேல். விசிட்டிங் ஹவர் 10 AM - 1 PM. பணிக்கு வந்ததே பதினோரு மணிக்கு. சரியாக ஒரு மணியானதும், இன்னமும் க்யூவில் காத்திருக்கும் பல நோயாளிகள் பற்றிய கிஞ்சித்தும் கவலையுறாமல் கடையை சாத்திவிட்டு கிளம்பி விட்டனர். 


நோயாளிகளை அட்டென்ட் செய்வது இன்னும் கொடுமை. அங்கிருந்தது  ஒரு சீனியர். மூன்று இளம் மருத்துவர்கள் உட்பட மொத்தம் ஆறு மருத்துவர்கள். பொதுவாக அங்கிருந்த இளம் மருத்துவர்களிடம் நோயாளிகளை கனிவாக அணுகும் முறை சிறிதும் காணோம். ஒரு மருத்துவர் கடுவன் பூனை கணக்காக எல்லா நோயாளிகளிடம் முகத்தை காட்டிக்கொண்டிருந்தது கடும் எரிச்சலைத் தந்தது. போதாத குறைக்கு அந்த மருத்துவர் ஐயா அவ்வபோது மொபைலில் ஃபேஸ்புக் வேறு செக் செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பெண் மருத்துவர் ஒரு பேஷண்டை பார்த்து முடித்ததும், சமயங்களில் பேஷண்டை அட்டென்ட் செய்து கொண்டிருக்குக்கையிலேயும் மொபைலில் யாருடனோ கடலை. மேலும் அந்த அறையில் சிக்னலே  கிடைக்கவில்லையென சலிப்பு வேறு. இன்னொமொரு இளம் மருத்துவர் கொஞ்சம் துடிப்புடன் நோயாளிகளை அட்டென்ட் செய்து கொண்டிருந்தார். ஆனால் நாருடன் சேர்ந்து பூவும் நாறிய கதையாக சிறிது நேரத்திலேயே ஃபேஸ்புக் டாக்டர் மற்றும் செல்ஃபோன் டாக்டருடன் அரட்டை ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்.


ISO தரச்சான்றிதழ் பெற்ற மருத்துவமனையில் சுத்தமென்பது மருந்துக்கும் இல்லை; மாத்திரைக்கும் இல்லை. பொதுவாக நம்மவர்கள் ஆசியாவிலேயே அணைத்து வசதிகளுடனும் கூடிய பெரிய மருத்துவமனை, தெற்காசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம், ஆசியாவிலேயே பெரிய நூலகம் என கட்டிடங்கள் கட்டி முடிப்பதில் மட்டுமே திருப்தியடைந்து விடுகிறார்களோ எனத் தோன்றுகிறது. அதற்கப்புறமான பராமரிப்பு என்பதை பரணில் ஏறக்கட்டி விடுகிறார்கள். கட்டி முடித்ததும் எல்லாக் கட்டிடங்களுமே சுத்தமாக, பளபளவெனத்தானய்யா இருக்கும்..?அதற்கெதற்கு தரச்சான்றிதழ்.?? இந்த ISO-காரர்களின் கடமை தரச்சான்றிதழ் கொடுப்பதுடன் முடிந்து விடுமா.? அதற்கப்புறம் தரத்தை கண்காணிக்க மாட்டார்களா.? அவ்வாறு இல்லையெனில் கொடுக்கப்பட்ட தரச்சான்றிதழை திரும்ப பெற்றுக் கொள்வார்கலெனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழகத்தில் அதுபோல எதுவும் நடப்பதாக தெரியவில்லை.!!


சரி நல்ல விஷயங்களே இல்லையா.? துரதிஷ்ட்டவசமாக "இல்லை" என்பதே என் பதில். ஒரு பதிவு முழுக்கவே நெகட்டிவ் விஷயங்களை பட்டியலிட்டு எழுத எனக்கே சற்று சங்கடம்தான். ஆனாலும் வேறு வழியில்லை. ரொம்ப யோசித்துப் பார்த்தல் நோயாளிகள் சொல்வதை கனிவுடன் காது கொடுத்து கேட்ட மூத்த மருத்துவர் ஒருவர் மட்டுமே சிறிது ஆறுதல். அப்புறம் சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு, நண்பன் ஒருவனுக்கு ரத்த தானம் செய்ய சென்றிருந்தபோது, அவர்களின் அணுகுமுறையும், அவ்விடத்தின் பராமரிப்பும், அந்த சூழலும் உண்மையிலேயே நன்றாக இருந்தது.அதுவும்  இப்போது என்ன லட்சணத்தில் இருக்கிறதென தெரியவில்லை. 


தமிழகத்தின் பிரதான தலைமை பொது மருத்துவமனையின் லட்சணமே இதுவெனில், கிராமப்புறங்களில் உள்ள மருத்துமனைகளின் தரத்தை நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது..

மீண்டும் நோயாளிகளின் மீதான அணுகுமுறைக்கே வருவோம். ஒரு மருத்துவர், நோயாளிக்கு என்ன பிரச்சனை என்பதை வாஞ்சையுடன் காது கொடுத்து கேட்டு, ஆறுதலாக, நம்பிக்கையளிக்கும் விதமாக பேசினாலே பாதி நோய் குணமாகி விடுமென கேள்விப்பட்டிருக்கிறேன்; அது உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையும் கூட. ஆனால் அங்கிருந்த இளம் மருத்துவர்கள் நோயாளிகளை பேசவே விடவில்லை; பேச எத்தனித்த ஒரு மூதாட்டியை கடுமையாக எச்சரித்து வாயை அடக்கிய ஃபேஸ்புக் டாக்டரின் செயல்பாடுகள் அராஜகத்தின் உச்சம். ஊக்குகளை விழுங்கி, அது சிறுநீரகத்தில் சிக்கிக்கொண்டு ஆலோசிக்க வந்திருந்த சுமார் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவனை அழைத்து வந்திருந்த ஒரு தாய்க்கும் இதே அணுகுமுறைதான். ஒரு கணம் ஷங்கர் பட நாயகனாய் மாறி, அவரை வதம் செய்யும் வெறிகூட வந்ததெனக்கு...


அங்கிருந்த பெரும்பாலான மருத்துவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஏதோ உலகத்தை ரட்சிக்க வந்த இரட்சகரின் அமர்த்தலான தொனியைக் கொண்டிருந்தது. அதே சமயம்- மருத்துவர்களை கடவுள்களாகக் கருதும் நம் மக்களின் கண்ணோட்டமும் இதற்கொரு காரணம் என்பதையும் மறுக்க முடியாது.. நாமும் கொஞ்சம் மாற வேண்டும்.


இனி வரும் காலங்களில்,  மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு முதலில் மருத்துவத்தை சொல்லித்தருவதைக் காட்டிலும் நோயாளிகளை அணுகும் முறை குறித்து சொல்லித்தருவதே சாலச்சிறந்ததாக இருக்குமென கருதுகிறேன்.!!



ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன்

3 comments:

  1. ஆரம்பம் முதல் இறுதிவரை சொல்லவந்த விசயத்தை கொட்டி தீர்த்தது மிகச்சரி. சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் விசிட் செய்தார் என செய்திகளில் மட்டும் வருகிறது. நிலைமை ரொம்ப மோசம். சுகாதாரத்துறையை பொறுத்தவரை நாம் எட்டவேண்டிய உயரம் வெகுதூரம். கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல மருத்துவர்கள் இருந்தும் மருத்துவ உபகரணங்கள் இன்மை கொடுமையிலும் கொடுமை. இப்பதிவை படிக்கும்போதே கண்கூடாக நோயாளிகள் கஷ்டப்பட்ட / கஷ்டப்படும் காட்சி கண்முன் வந்து செல்கிறது.

    ReplyDelete
  2. அரசு எந்திரத்தின் பல சக்கரங்களும் பழுது பார்க்கப்பட வேண்டும் என்பது எல்லோரது ஆதங்கமுமே.. குறிப்பாக உயிர் காக்கும் துறையான மருத்துவத்துறை.. ஆனால் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் மற்ற மாநகராட்சிகளின் அரசு மருத்துவமனைகளின் நிலைமை இதற்கும் கீழே... அப்படியானால் கிராம மருத்துவமனைகளின் நிலைமை நீங்கள் சொல்லியிருப்பது போல இன்னும் கவலைக்கிடமே.

    ReplyDelete
  3. ஒன்றும் சொல்வதற்கு இல்லை அண்ணா. ஒவ்வொருவர்குள்ளும் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும். @Gnanasekar89

    ReplyDelete