Wednesday, February 6, 2013

இடஒதுக்கீடு- தேய்க்கப்படாமலிருக்கும் அற்புதவிளக்கு!!

இடஒதுக்கீடு குறித்தான என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களும், அதற்கான தீர்வுகளாக நான் கருதும் விஷயங்களையும் பற்றித்தான் இந்த பதிவு .

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இட ஒதுக்கீடு எனக்கெல்லாம்
இல்லையேங்குற மனவருத்தம் ரொம்ப இருந்தது. என் சில நெருங்கிய தோழிகளுக்கு மட்டும் சில சலுகைகள் கிடைக்குதே.. நமக்கு எதுவுமே இல்லையே.. நாம என்ன தப்பு பண்னோம்? ன்னு ரொம்பவே அடிக்கடி நினைப்பு வரும். ஆனா வெளில யார்ட்டயும் பெருசா சொல்லி அலட்டிக்கிட்டதில்லை.
கல்லூரிக்கு போனபோதும் இதுபோலத்தான். ஸ்காலர்ஷிப் கேட்கும்போது நமக்கில்லையேன்னு ஒரு வருத்தம் இருந்தது.

ஓரிரு வருடங்களில் நட்புகளிடம் கேட்டு கேட்டு நாவல்கள் மட்டும்
படிக்க ஆரம்பிச்சேன். இரண்டு வருடம் முழு நேரமும் நாவல்கள் படிக்கிற வேலை மட்டும் தான் .இதில்(நாவல்கள் வாசிப்பில்) ஒன்னும் பெருசா சமூக
விழிப்புணர்வெல்லாம் ஏற்படல... கொஞ்சம் வரலாற்றுச்  செய்திகளும் மு.வ
எழுத்தின் மூலம் பொதுவா வாழ்க்கையில் நடக்குற விஷயங்களை கூர்ந்து
கவனிக்கும் பழக்கமும் ஏற்பட்டது.

நல்லா படிக்கிறேனோ இல்லையோ வகுப்பில் ஆசிரியர்கள் கிட்ட துருவித்துருவி கேள்வி கேட்டு தெரிஞ்சிக்கிற பழக்கம் இருந்தது. தெரியாத பல விஷயங்களை நான் அறிவாளிங்கன்னு நினைக்கிறவங்க கிட்ட கூச்சப்படாம கேட்டு தெரிஞ்சிக்கிற ஒரே ஒரு நல்ல பழக்கம் இருந்தது.. இன்னமும் இருக்கு. . 
அப்படி தெரிந்த நண்பர்ட்ட பின்னொரு நாளில், "இடஒதுக்கீடு மூலம் எனக்கெல்லாம் எதுவும் கிடைக்கவே இல்லை. அவுங்க மட்டும் என்ன ஒசத்தியா..திறமைக்கு எந்த அங்கிகாரமும் இல்லையா?"ன்னு கேட்டப்புறம் நண்பர் பல வருடங்களா நடந்துட்டு வந்த தீண்டாமை கொடுமைகளைப் பற்றி சொன்னார். கொஞ்சம் புரிந்துக்கொள்ளும் திறன் (அட நெசமாத்தான் நம்புங்க) இருந்ததால் பெருசா அவர் விளக்கம் சொல்லாமலே இருக்குற நிலைமை புரிஞ்சது. 
அவர் சொன்னதும் எனக்கு என்ன தோணிச்சுன்னா, இந்த மாதிரி வரலாற்று நிகழ்வுகளையும், சமூக பிரச்சனைகளையும் பள்ளிகளும், கல்லூரிகளும் சரியா மாணவர்களுக்கு கொண்டு போய் சேர்க்குதான்னுதான். 
இப்படி புரியாம வளரும் இளைஞர்கள் தாம் இன்னமும் சாதி, மத பேதத்தை
பெருசா நம்பிட்டு சமூகத்துக்கு தொல்லையா இருக்காங்க.
எனக்குத் தெரிந்த பலரும் இப்பவும் அடிக்கடி சிலாகித்து பேசுற இரண்டு
விஷயங்கள்- ஒன்னு நல்லா படிக்கிறவனுக்கும்,திறமைக்கும் முக்கியத்துவம்
கொடுக்கனும். இரண்டு இஸ்லாமியர்கள் நாடு இதுவா? அவங்களுக்கு தான்
பாகிஸ்தான் தனியா கொடுத்தாச்சேன்னு சிறுபிள்ளைத்தனமா பேசுறாங்க.
அதுவும் வயதாவனர்களே இப்படி பேசும்போது எதிர்த்து எதுவுமே பேச முடியறதில்லை.

திறமை- அது வானத்துல இருந்து தானா குதிச்சி வருமா ?? ஒன்னு பரம்பரைப்
பரம்பரையா வரும். இல்லாட்டி திறமை வளர்த்துக்குற சூழல் ,வசதி ,நேரம்
இருந்தா வளர்த்துக்கலாம் .இப்போ ஒடுக்கப்பட்ட மக்கள் சூழ்நிலையை பற்றி
யோசிக்கலாம். பலநூறு வருஷமா மூணு வேளை சாப்பாட்டுக்கே போராடிட்டு
இருந்தவங்க (அப்படி போராடத் தள்ளப்பட்டவங்க ) உடலும், அவங்க மரபணுவும் எப்படி இருக்கும்?ஆரோக்கியமான மரபணு இருக்குமா?
(நான் ஒன்னும் ஜெனிட்டிக் இஞ்சினியர் இல்லை எனக்கே தோணுச்சு அவ்வ்வ்வ்)  இப்படி குறைந்தபட்ச உணவு கூட கிடைக்காமல் இருந்த மக்களுடைய சந்ததிகளுக்கு திறமை இயற்கையிலேயே
அமையுமா.? இல்லை பாலும்..தேனும்,நெய்யும்.. காய்கனிகளையும் சாப்பிட்டு இருந்த மக்களுடைய சந்ததிகள் திறமையா இருப்பாங்களா??

எல்லாத்துக்கும் மேல அப்பா அம்மா மற்றும் பரம்பரை பரம்பரையா படிப்பறிவு
உள்ளவர்கள் எப்படியோ தன் பிள்ளைகளுக்கு ஒரு வழி காட்டிக்கொடுத்துட்றாங்க. ஆனா ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன தெரியும்.? அவன் எப்படி தன் பிள்ளைக்கு படிக்க சொல்லி கொடுப்பான்? இல்ல ஒரு நல்ல வழியை காட்டிக் கொடுப்பான்?
வறுமையும் பசியையும் பற்றி மட்டுமே கவலைப்படவே 24 மணிநேரம் அவர்களுக்கு போதுமானதாய் இருந்திருக்காது. 
இதுல பெண்களுடைய (ஹிஹிஹி எப்படி பெண் தலைப்புக்கு வந்தோம்ல) நிலை எப்படி இருக்கும்ன்னு யோசிக்கவே முடியல. படித்த மேல் தட்டு மக்கள் வீட்டு பெண்களுக்கே முழு சுதந்திரம் இன்னமும் எட்டாக்கனிதான்.
இதுல பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டா உடனே ஒரு கும்பல்
திறமைக்கே மதிப்பு கொடுக்கனும்ன்னும் பெண்கள் இட ஒதுக்கீட்டின் மூலம்
உயர்சாதி பெண்கள் மட்டுமே சலுகைகள் அனுபவிப்பாங்கன்னும்
சொல்றாங்க. என்னளவில் நம்ம நாட்டைப் பொருத்தவரை எல்லா பெண்களும் ஒடுக்கப்பட்டவர்கள்தான். (இதுக்கு எவ்ளோ பேர் முட்டைத் தக்காளியோட வருவாங்களோ ஏசப்பா) அப்படியே இதை ஒழுங்கு படுத்தனும்ன்னா இதுலயும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு தனியா இடஒதுக்கீடு கொடுக்கட்டுமே.
சரி இப்படி சக நண்பர்களே குருட்டுத்தனமா இட ஒதுக்கீடு தேவை இல்லைன்னு சொல்லும்போது எப்படி சமூகத்துல இடஒதுக்கீடு மூலம் பயனடைந்த மக்கள் வெளில சொல்லிக்குவாங்க.? இல்லை வெளியில் சொன்னாலும் ஏளனமா, "ரிசர்வேஷன்ல வந்தவனா.. அதான் சீக்கிரம் சீட்டு/வேலை கிடச்சிருச்சு"ன்னு பேசுவாங்க. இவங்கள்ல
எவ்வளவு பேர் வாழ்க்கை பூரா தான் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன்
என்பதை மறைச்சிட்டு வாழறாங்க???
சக ஜனங்களுக்குஇட ஒதுக்கீட்டின் அவசியம் புரியாதவரை என்னதான்
படித்து வசதி ஏற்பட்டாலும் ஏளனபார்வை இவர்கள் மீதிருந்து அகலாது.
இடஒதுக்கீட்டின் அவசியம் குறிந்து ஏன் பெருசா பள்ளி பாடத்துல சேர்க்காம
இருக்காங்கன்னு புரியவே இல்லை. தீண்டாமை பாவம் தவறுன்னு சொன்னா
போதுமா? தீண்டாமை தப்புன்னு தெரிந்த எவ்வளவு பேருக்கு இடஒதுக்கீடு எதுக்கு ஏற்படுத்தினாங்க.. அதற்கான அவசியம் என்னன்னு தெரியும்?
இப்பவே இட ஒதுக்கீட்டின் அவசியம் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படலைன்னா இன்னமும் குழப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும். ஏன் ஒரு கட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வெறுப்பு கூட ஏற்ப்பட வாய்ப்புண்டு . இது சென்சிடிவ் டாப்பிக் அப்படிங்கறதால இதன் அவசியம் தெரிந்தவர்கள் கூட அவ்வளவா இத பத்தி பேசுறதில்லை. இதை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து தீவிரமா அரசு பரிசீலிக்கனும்.

அடுத்து இஸ்லாமிய நண்பர்கள் பற்றி சொல்லப்படும் விஷயங்கள்-
அதாவது அவங்க நாடு இதுவான்னு கேக்குறது. அப்போ நேபால் கூடத்தான் ஹிந்துதத்துவ நாடு . ஹிந்துக்கள் எல்லாம் அங்க போக வேண்டியதுதானேன்னு சொல்ல முடியுமா?
இந்தியா ஓர் மதச்சார்பின்மையான நாடு என்ற ஒரு சின்ன விஷயம் கூட தெரியாம எவ்வளவு மக்கள் இருக்காங்க?
இப்படிப்பட்ட சமூக பிரச்சனைகளும் வரலாற்று நிகழ்வுகளும் தெரியாம
கோபப்படுற மக்களால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுது? இவங்களை மாற்ற
முடியும்னெல்லாம் துளி கூட எனக்கு நம்பிக்கை இல்லை .இனி வரும்
தலைமுறையினராவது இப்படி வளரக்கூடாதுன்னு தான் தோணுது. பள்ளிகளும், கல்லூரிகளும், பெற்றோரும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும்  நினைத்தால் கொஞ்சம் சீக்கிரம் சாதிக்கலாம்.
-இயலாமையுடன் சோனியா  @rajakumaari

23 comments:

  1. உங்கள் பதிவில் அத்தனை கேள்விக்குறிகளிட்டு இப்பின்னூட்டத்தில் ஆச்சர்யக்குறிகளிடுவதற்காக நிறைவான இடஒதுக்கீடு வழங்கியுள்ளீர்கள்.

    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    சிறப்பான பதிவு!
    தொடர்ந்து எழுந்துங்கள்!
    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அட பாராட்டே பதிவு போல இருக்கே??(திரும்பவும் கேள்வியாவே அமஞ்சிருச்சு) :))) நன்றிப்பா !!

      Delete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பதிவின் கருப்பொருள், எழுத்துநடை, விடயம் விட்டுப்பாயாத்தன்மை, வாசகனையும் சம்பந்தப்பட்டவனாய்க் கொண்டுவரும் நடை எல்லாமே பிரமாதம், ஒரே வரில சொல்லணும்னா supperbbbb.....

    ReplyDelete
  5. well done sis nice thought !! keep it up ka.. -@ravichelvan

    ReplyDelete
  6. எழுதியவர் குணா யோகச்செல்வன் னு இருக்கு, நாங்கூட ஒரு நிமிஷம் மெர்சல் ஆய்ட்டன் @rajakumaariகுள்ள என்னமோ இருக்கு பாரேன்னு..

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்.. தளத்தின் அட்மின்களில் ஒருவன் என்கிற முறையில் அவங்க எழுதி கொடுத்ததை போஸ்ட் செய்தது மட்டுமே நானு.. மற்றபடி எல்லாப்புகழும் ராஜகுமாரிக்கே!!

      Delete
    2. இயலாமையுடன் சோனியான்னு தானே முடிஞ்சிருக்கு :)))

      Delete
  7. மிக நல்ல பதிவு...தெளிவான சிந்தனை...தொடர்ந்து எழுதுங்கள் மேடம் @ஸ்வீட்சுதா1

    ReplyDelete
    Replies
    1. ஊக்குவித்தலுக்கு நன்றி மேடம் :)))

      Delete
  8. அருமையான பகிர்வு தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.தொடர முயற்சிக்கிறேன் :))

      Delete
  9. //இதுல பெண்களுடைய (ஹிஹிஹி எப்படி பெண் தலைப்புக்கு வந்தோம்ல) நிலை எப்படி இருக்கும்ன்னு யோசிக்கவே முடியல. படித்த மேல் தட்டு மக்கள் வீட்டு பெண்களுக்கே முழு சுதந்திரம் இன்னமும் எட்டாக்கனிதான்.// .....................@ரேணிகுண்டா 'பாய்ஸ்' தளத்தில எழுதிட்டு இதென்ன கேள்வி!? ஏன்!! சொந்தமா பிளாக் ஆரம்பிச்சு எழுதிறது தானே!? #ரேணிகுண்டா 'கேர்ள்ஸ்'ன்னு ;-))

    ReplyDelete
  10. நல்ல பொறுப்பான பதிவு.. நீங்க உங்க பையனுக்கு சொல்லிகுடுங்க...நான் வருங்காலத்துல என் குழந்தைக்கு சொல்லிக்கொடுக்குறேன்.. கொஞ்சமாவது மாறும் :)

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் அவனுக்கு கொண்டு போய் சேர்க்காமையா :)) நன்றி தம்பி

      Delete
  11. some people says reservation must be given for one time per family only bcoz the benefited generations not allowing the marginalised of their own community. you missed this latest view in your post

    ReplyDelete
  12. பதிவின் தொனிக்கு தான் என் முதல் ஷொட்டு. மிக இயல்பாக, கருத்தை திணிக்காத வகையில்..குட ஜாப் சோனியா..

    ReplyDelete
  13. நீங்க சொல்லுற மிகவும் சரி தான்... ஆனால் பள்ளிகளில் குழந்தையை சேர்க்கும் போதே அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு என்ற ஒரு உணர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.. அதுவே பிறகு ஜாதியை பற்றிய உணர்வாக மாறவும் வாய்ப்பு உள்ளது.. ஏனா நான் ஸ்கூல் படிக்கிறப்ப நான் ஏன் இதை(OC,BC,MBC,SC/ST) select பண்ணனும்.. இது என்னன்னு என்னோட பெற்றோரிடம் கேட்டிருக்கிறேன்.. குழந்தைகளிடமே இதை வளர்ப்பது போல் உள்ளது இந்த முறை... <>

    ReplyDelete