Tuesday, May 22, 2012

பொறியி(யலி)ல் சிக்கிய மா(ணவ)ன்





 இதை உள்ளிட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நான் முன்னாள் மாணவன் ஆகிவிட்டிருக்கிறேன்-”ஈ.சீ.ஈ 2012 பாஸ்டு அவுட்”. நான்கு வருட பொறியியல் படிப்பின் இறுதியில் எழுதப்படும் இக்கட்டுரையில் “கல்லூரி-கண்ணீர்-நட்பு-புனிதம்-பிரிவு” என்று நான் பிக்காலித்தனமாக எழுதப்போவதாக யாரேனும் எதிர்பார்ப்பீர்களேயானால், இரண்டொரு கிளிசரினை விழுங்கிவிட்டு ஏதாவது ரியாலிட்டி-ஷோவை பார்த்தபடி பிழியப்பிழிய அழுதுகொள்ளுங்கள். நான் அவன் இல்லை. அடுத்தடுத்த பத்திகளில் வரும் நிகழ்வுகள் யாவும் இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்கள் வாழ்விலும் ஏற்பட்டிருக்கலாம். இது ‘ஷேர்-ஆட்டோ’பிக்சன் எனும் வகையின் பாற்பட்டது. உலக அளவில் இம்முறையில் ஒருவர்தான் எழுதுகிறார். அந்த 'ஒருவர்' நான்தான் என்பதைக்கூட, நானே என் வாயால்  சொல்லவேண்டியிருப்பதுதான்  கொடும்  தமிழ்ச்சூழலின் அவலநிலை.

     
இன்றிலிருந்து சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் ‘எலக்ட்ரானிக்ஸே என் உயிர்மூச்சு’ முழக்கமிட்டுக்கொண்டு, நெஞ்சம் நிறைந்த கனவுகளுடன், “வக்காளி!அடிச்சு தொவைச்சிடணும்ல” -என்றவாறுதான் இந்த மாய எதார்த்த உலகிற்குள் நுழைந்தேன்

“இஞ்சினியரிங்” எனப்படும் பொறியியலின் பொறியில் சிக்கிய மாணவன் முதன்முதலில் எதிர்பார்த்து ஏமாறுவது ஆசிரியர்களிடம்தான். கந்துவட்டி கணக்கு எழுதப்படும் ஒரு பிரம்மாண்டமான பேரேடு போன்ற நோட்டை எடுத்துக்கொண்டு முதல்நாள் வகுப்பறை செல்வான் நம் ‘பொ.சி.மா’. அவன் அறியாத ஓர் உண்மை அங்கு உண்டு. அறிவுப் பசியில் நோட்ஸ் எடுக்க ஓடோடி வந்த மாணாக்கர்களை ஏமாற்றி, இருக்கும் ஐந்து பாடங்களையும் கற்பிக்காமல் தவிர்க்க ஐந்நூறு காவாளித்தனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதுதான் அது. அசைன்மெண்ட், செமினார், செல்ஃப்-ஸ்டடி, கேஸ்-ஸ்டடி(இது வேற கேஸ்) என பல்வகை முறைமைகள், எடுத்துச்சென்ற நோட்டை நிரந்தரமான வெள்ளைத்தாள்களாகவே வைத்திருக்கும். அப்படியே பாடம் எடுத்தாலும் அவை யாவும் சப்-டைட்டில் இல்லாத சைனாப்படங்கள் போலத்தான்-“வசனமே புரியாது”

இருந்தும் மனத்தை தேற்றிக்கொண்டு, தானே படித்துக்கொள்ள ஓரிரு தலையணைப் புத்தகங்களை எடுத்து வருவான் ‘பொ.சி.மா’. அதை எழுதிய வெளிநாட்டு நிபுணரின்(Foreign Author) பெயர் படித்தாலே வாய் சுளுக்கிக்கொள்ளும். உள்ளடக்கம் பற்றி சொல்லவே தேவையில்லை. தமிழ் அகராதி இன்றி ஓரணுவும் அசையாது. இந்த லட்சணத்தில் வாரமிரு தேர்வுகளும் இலவச இணைப்பாக ஆய்வகக்கூத்துகளும் வேறு. இவை யாவும் சேர்ந்து நம் பொ.சி.மா-வை அகோரிபாபாவாக ஆக்கியிருக்கும். யாருடைய குரல்வளையைக் கடிக்கலாம் என தேடிக்கொண்டிருக்கும்போதுதான் “லோக்கலாதர்” என்ற மீட்பர் அறிமுகமாவார்.
  
இந்த லோக்கல் ஆதர்(Local Author) என்பவர் இப்படி ‘கல்விமுறையால் கைவிடப்பட்ட’ மாணவர்களை நம்பியே குடிசைத்தொழில் செய்பவர். எப்படிப்பட்ட புத்தகம் ஆயினும் கடின வார்த்தைகளை நீக்கிவிட்டு மிச்சமிருப்பவைகளை பட்லர் இங்கிலீஷில் எழுதிவிட்டால் தீர்ந்தது விஷயம். குரோன் ஹேக்கிங்க்ஸ், குமாரசாமியாக உருமாற்றம் பெற்றுவிடுவார். அதை உருப்போட்டு விடைத்தாளில் வாந்தியெடுத்துவிட வேண்டியதுதான். தேர்ச்சியடைந்து விடலாம். சரி!பாடத்தின் சாரம் பு .ரி .யு .மா? .. மூச். புரிவதற்கும் தேர்வதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை
  
இயல்பிலேயே வீரியமிக்கதோர் அமிலத்தை நீரூற்றி கரைசலாக்குவதுபோல், நம் நாட்டு கல்விமுறையும் அது தரும் ஆயாசமும் மாணவனின் தன்முனைப்பை நீர்த்துப்போகச்செய்கின்றன. தேர்வுகளை நினைத்து நித்தமும் நடுங்கிக்கொண்டிருந்த நம் பொ.சி.மா, நாளடைவில் “மச்சான் நாளைக்கு என்ன சப்ஜெக்டுடா?” என கேட்கும் நிலைக்கு ‘உயர்வான்’. இருக்கவே இருக்கிறார் நம்  குடிசைத்தொழில் குமாரசாமி. ஒருகட்டத்தில் சுய உந்துதல்கள் அனைத்தும் வடிந்து, பணம் கொடுத்துச்சேர்த்த பெற்றோர் ஆசைக்காக மட்டுமே படிப்பை முடிக்கவேண்டியிருக்கும். கல்லூரி தருகின்ற தொடர்ச்சியான அயர்ச்சியாலோ என்னவோ இலக்கியப் பரிச்சயமும் உன்னத சினிமா அறிமுகமும் ஏதுமற்ற ஓர் இளம் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.
  
இதற்கிடையில் நம் பொ.சி.மா-விடம் எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைக்க காதலின் தீபம் ஒன்று ஏற்றப்படும். செந்தமிழ்நாட்டில் ‘பொறியியல் மாணவிகள்’ எனுமோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமும் உண்டு. இன்றைய கல்லூரிகளில், எஸ்.ஏ.சி பட கதாநாயகிகளை விட கொடூரமாக கற்பழிக்கப்படும் வார்த்தை “காதல்” ஆகத்தான் இருக்கும். அதைப்பற்றி அதீத நுட்பம் ஏதுமின்றி எழுதினாலும் அநாயசமாக ஆறாயிரம் பக்கம் தொடும். தமிழகத்தின் அடுத்த மூன்று தலைமுறைகளுக்கும் ஒரே ஒரு ஜெயமோகன் போதுமானவர் என்பதாலும், போட்டியாக ‘குண்டுபுக்கு’ போட்டு அவர் குடி கெடுக்கும் உத்தேசம் எனக்கில்லை என்பதனாலும் இந்த தலைப்பை சாய்ஸில் விட்டுவிடுகிறேன்.
      
இறுதியாண்டுக்கு அடியெடுத்து வைக்கும்போது நம் பொ.சி.மா-வை “கேம்பஸ் இண்டர்வியூ தயாராக்கம்” எனும் அச்சுறுத்தல் தாக்கும். ஒரே வாரத்தில் பிள்ளை பெற்றுக்கொள்ள முயல்வது போல், ஆங்கிலம் கற்றுக்கொள்ள நாளிதழ்களையும், பேரகராதிகளையும் வாசிக்கும்படி பணிப்பர். ஆனால் ஆங்கில நாளிதழ் காட்டும் பல்மொழி நடிகைகளின் பல்வகைப்பட்ட ‘உள்ளாடை’களை அறிந்துகொண்டதுதான் ஒரே பயனாக இருக்கும். தனித்துவத்தை வளர்த்துக்கொள்ளாத நம் பொ.சி.மா, இறுதியாக மாநாட்டுக்கு ஆள்பிடிக்க வரும் மென்பொருள் மந்தை ஒன்றுக்கு வேலை கேட்டுச் செல்வான். அங்கு வீற்றிருக்கும் ‘முன்னாள் பொ.சி.மா’ ஒருவனால் தேர்ந்தெடுக்கப்பட்டும் விடுவான்.
  
இருத்தல் காரணங்களுக்காக மட்டுமே, மென்பொருள் அல்லாத துறையினன் அதில் வேலை செய்வதைப் போன்ற துரதிர்ஷ்டம் எதுவுமில்லை.குளத்தில் எறிந்த கல்லைப் போல், நம் கனவுகளும்  மனத்தின் அடியாழத்தில் சென்று நிசப்தத்தில் மூழ்கிக் கிடக்கும். அது உருவாக்கும் சிற்றலைகளை தலை சாய்ந்த ஒரு வறட்சியான புன்னகையுடன் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. (அடச்சே. . இப்படியெல்லாம் எழுதினால் பிரசுரிக்கமாட்டேன் என்று குணா எச்சரித்திருக்கிறார்.அப்ரோட்டாக நிறுத்திவிடுகிறேன்)

     இவ்வாறாக பொறியியல் படிப்பு முடித்து, ஞானம் ‘பார்த்த’ நித்தியைப் போல்.. மன்னிக்கவும் ஞானம் பெற்ற புத்தனைப் போல் உருமாறியிருக்கும் என் எதிரில் இன்று பவ்யமாக நின்றுகொண்டிருக்கிறான் "இவன்". அடுத்த மாதம் பொறியியல் சேரப்போகிறானாம். மின்னணுவியல்(ஈ.சி.ஈதான்) என்றால் பேரார்வமாம். ஆலோசனை கேட்கிறான். இவனுக்கு வயது குறைந்த அக்கா ஒருத்தியோ, வயதுக்கு வந்த தங்கை ஒருத்தியோ இருக்கலாம் என்ற நப்பாசையிலான என் கூற்று பின்வருமாறு அமைகிறது- “95 பர்சண்ட் எடுத்து கோர் ப்ளேஸ்மெண்ட் ஆகணும். இல்லாட்டி நீ எஞ்சினியரிங் படிக்கறதே வேஸ்ட்டு. பாடத்தை புரிஞ்சு படிக்கணும். எப்பேர்ப்பட்ட சந்தேகமா இருந்தாலும் என்னைக் கேளு.”

பின்குறிப்பு: இந்தக் கண்றாவி.. மன்னிக்கவும். இந்தக் கட்டுரை இந்த அளவிலேயே நிறைவுறுகிறது. என் மேதைமைதனை விதந்தோதியபடி சென்றுகொண்டிருந்த அந்த ‘வருங்கால பொ.சி.மா’ மீது, ”பாவம் யார் பெத்த புள்ளையோ” எனும் மெல்லிய பரிதாபம் என்னுள் விகசித்துக்கொண்டிருந்ததை நான் இங்கு எழுதப்போவதே இல்லை.! 

அளவிலா எரிச்சலுடன்,
வினோத்





42 comments:

  1. ஏற்கனவே சொல்ல வேண்டியதையெல்லாம் போன்லயே சொல்லியாச்சி.. இருந்தாலும் சபை மருவாதிக்காக -"தாறுமாறு..தக்காளிக்சோறு.."
    ரசித்துப்படித்தேன்... முதல் பதிவுன்னே சொல்லமுடியாத வகையில் அட்டகாசமான, இயல்பான நடை..
    நல்லா, சுவாரசியமா, நகைச்சுவை கலந்து எழுதற பயல் நீயி.. ஆனா எழுதக்கேட்டா ரொம்ப கூச்சப்பட்டுக்குற.. இத்தோட விட்டுடாம இன்னும் நிறைய எழுதணும் வினோ..

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:12 PM

      எமோஷனா பேசினா நம்ம ரெண்டு பேருக்குமே பிடிக்காது .அதனால எளிமையா ஒண்ணு சொல்றேன் "நீங்க இல்லாவிட்டால் 'இது' எதுவுமே இல்லை " டாட்

      Delete
    2. ஏ தம்பி.. பிச்சு பிச்சு வீசிட்டடா.. என் மனக்குமுறல்கள் எல்லாம் மேல கலாய்த்தமிழா கெடக்கு.. அதுலயும் சாரு-வ சைலன்ட் ஆ கலாச்சது எனக்கு ஆன்ம பலத்த அளிக்குது.. ஏன் மூஞ்சிபுக்ல உன் "punch" எல்லாத்தையும் ctrl+v பண்ணிருக்கேன்.. அவிங்க படிக்க இல்ல.. என் மே.கோ. க்கு.. அதுலயும் 'குடிசைத்தொழில்'.. சேகரு செத்துருப்பாப்ள.. என் இனமடா.. - @catchvp

      Delete
  2. இந்த பதிவுலேயே எனக்கு ரொம்ப புடிச்சது காதல் பத்தின பத்திதான்.. #அல்டிமேட் ரோபஃல் மேக்ஸ் ;-)))

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:18 PM

      உயிரை உருக்கி , உணர்ச்சிகரமான ஒரு காவியம் படைச்சா அது "அல்டிமேட் ரோபல் மேக்ஸ்"ஸாம். பாருங்கள் தமிழ் எழுத்தாளனின் தலைஎழுத்தை! :-)

      Delete
  3. அருமை வினோத்..நிறைய யதார்த்தம், நல்ல ஃப்ளோ..லோக்கல் ஆத்தர் பத்தி மிகவும் ரசித்தேன்..”மச்சி, வெள்ளக்காரனுக்கு அவன் ஃபாரின் ஆத்தர் தானே” என லாஜிக் சொல்லிக்கொண்டு பாலகுருசாமியில் ஆரம்பித்து ராமச்சந்திரன் வரை வாங்குவோம்..இல்லாட்டி நான்லாம் DSP பாஸ் செய்திருக்க மாட்டேன்..
    தொடருங்கள் தம்பி..:)

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:23 PM

      எனக்கென்னவோ Foreigh Author சைமன் சில்பர்ச்காட்ஸ்ஸே , ஹார்வர்ட்ல படிச்சப்போ நம்ம ஊர் குமாரசாமிய படிச்சுத்தான் பாஸ் பண்ணிருப்பார்னு தோணுது. :-))) ரசனைக்காரனாகிய உங்கள் ஆதரவுக்கு சிறப்பு நன்றிகள் அண்ணே

      Delete
    2. //னக்கென்னவோ Foreigh Author சைமன் சில்பர்ச்காட்ஸ்ஸே , ஹார்வர்ட்ல படிச்சப்போ நம்ம ஊர் குமாரசாமிய படிச்சுத்தான் பாஸ் பண்ணிருப்பார்னு தோணுது. :-)))// :)

      Delete
  4. Super vinoth..warm welcome. :-)

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:24 PM

      Thank you Maams :-)

      Delete
  5. வாசிப்பின் அனுபவம் தெறிக்கிறது மச்சி! ரொம்ப ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:27 PM

      எல்லாம் தங்களிடம் குடித்த யா(ஞா)னப்பால் மன்னா !!! ஊக்கத்திற்கு நன்றிகள் :-)

      Delete
    2. புத்தகப்புழுMay 24, 2012 at 1:46 PM

      பை தி வே, எனக்கொரு சந்தேகம். எச்சில் தெறிக்கிறது தெரியும்.அது என்னய்யா வாசிப்பு அனுபவம் தெறிக்கிறது?

      Delete
  6. //சப்-டைட்டில் இல்லாத சைனாப்படங்கள் போலத்தான்-“வசனமே புரியாது”//
    //புரிவதற்கும் தேர்வதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை//

    பிடிச்ச வரிகள். . .

    நல்லா இருக்கு.

    நீயெல்லாம் நல்லா வரணும் டா :)

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:30 PM

      //புரிவதற்கும் தேர்வதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை//
      எனக்குப் பிடிச்ச வரியும் அதுதான்
      // நீயெல்லாம் நல்லா வரணும் டா //
      எங்கே வரணும்னு சொல்லுங்க.ஷார்ப்பா வந்திடுறேன் # அப்கோர்ஸ் மொக்கை :-))

      Delete
  7. எழுத்து சரளாவா? ச்சீ சரலமா வருது. அப்படியே புடி. எழுதிகிட்டே இரு. சுஜாதா டெய்லி ரெண்டு பக்கம் படிக்கச் சொல்லி இருக்காரு. அதுல ஒரு பக்கத்த நீயே எழுதி படி. மேல மேல போலம். அப்புறம் உலகம் ரொம்பவே பெரிசு, வேலையில புகுந்து புறப்பட்டு தமிழ தாங்கி பிடி. வாழ்த்துகள்.

    லௌ ஆல்...கார்தீக்

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:32 PM

      வேறென்ன சொல்ல? நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா :-)

      Delete
  8. Your writting style is very nice. Very creative. :)))

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:33 PM

      Creative? Well. . its a news to me :-) Thank you Madam

      Delete
  9. நானும் ECE இஞ்ஜினியர் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்பிகிறேன்,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:35 PM

      உங்களுக்கான என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இங்கு பதிவு செய்கிறேன் . . .

      Delete
  10. அருமையான எழுத்துநடை, வாசிப்பனுபவம் நிரம்ப பெற்றவர் என்பது தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:49 PM

      நன்றி . . இன்னும் என்னென்னலாம் தெரியுதோ உங்களுக்கு :-)

      Delete
  11. நல்லா ஏழுதி இருக்கிங்க .இறுதியில் போலி தனம் கலக்காத உங்க அட்வைஸ் சூப்பர். வாழ்த்துகள் .இன்னும் நிறைய எழுதுவிங்க என்று எதிர் பார்க்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:42 PM

      தங்களின் நேரம் ஒதுக்கி படித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் மேடம்

      Delete
  12. அருமை வினோத்..நிறைய யதார்த்தம், நல்ல ஃப்ளோ..லோக்கல் ஆத்தர் பத்தி மிகவும் ரசித்தேன்..
    வாசிப்பின் அனுபவம் தெறிக்கிறது மச்சி! ரொம்ப ரசித்தேன்!

    Superu machi! semaiyaa irukku

    @snj_no1

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:45 PM

      ரொம்ப நன்றி மாம்ஸ். . உனக்கு பெரிய மனசு :-)

      Delete
  13. Replies
    1. புத்தகப்புழுMay 24, 2012 at 1:47 PM

      // Standing ovation //
      இதுல ஏதும் உள்குத்து இல்லையே? :-))

      Delete
  14. எழுத்து நடை பிரமாதம், ஆனா கலைஞர் வசனம் எழுதுன படம் பார்த்துட்டு அப்புறமா எழுதி இருப்பீங்க போல! காமெடி ஈசியா வருது வெல்டன் :)

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 25, 2012 at 6:40 PM

      காமெடிக்கு "சென்னியார் வாயால் வெல்டன்"
      தன்யனானேன்! நன்றிகள் பல
      BTW கலைஞர்ன்னா யாரு? ஏதாவது தெலுங்குப்பட ஹீரோவா :-)

      Delete
  15. >>குளத்தில் எறிந்த கல்லைப் போல், நம் கனவுகளும் மனத்தின் அடியாழத்தில் சென்று நிசப்தத்தில் மூழ்கிக் கிடக்கும். அது உருவாக்கும் சிற்றலைகளை தலை சாய்ந்த ஒரு வறட்சியான புன்னகையுடன் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

    லா ச ராமாமிர்தம் ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. புத்தகப்புழுMay 25, 2012 at 6:42 PM

      அதே வரிகள்
      அதே ஹி ஹி
      ஆனா 'அது' லா ச ரா இல்ல . . . எஸ்.ரா(மகிருஷ்ணன்)
      பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
      ஹி ஹி ஹி :-))

      Delete
  16. தலைப்புல இருந்து ஒவ்வெரு வரியும் அட்டகாசம் டே! முதல் ஆலோசனை, இந்த ப்ளாக்ல இனி எழுதாத, சொந்தமா கடை தொறந்திடு!

    பேருக்கு ஏத்த மாதிரி நிறைய படிச்சதை இங்க எழுதியிருக்க, சில இடங்கள்ள அப்புடியே தெரியுது. நீ படிச்சதைவிட நீ எப்படி புரிஞ்சிகிட்ட என எழுதுனா இன்னும் சிறப்பா இருக்கும்.

    அந்த நான்காண்டு வாழ்வு அப்புடியே கண் முன் வந்துபோச்சு. எந்த முக்கியநிகல்வும் விட்டுபோகல!

    அதிகமாக கற்பழிக்கப்படும் வார்த்தை "காதல்" - எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு, ஆனா உண்மை.இங்கு பயன் படுத்தியது சாலத்தகும்.

    நல்லயிருக்கு!

    //குணாவின் கெடுபிடிகள், ரேனுகுன்டாவை கட்டுரை.காம் க்கு போட்டியாக நிறுவும் வரை தொடரும்// அதுனால அதா பத்தி கவலை படாத

    ReplyDelete
  17. அங்கதம் தெறிக்கும் சரளமான நடை, நன்று. ஆனா ஒரு ஆசிரியனாக என்னால் சிலவற்றை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. உங்கள் அளவிற்கு என்னால் எழுத ஏலாது. மிக விரும்பி நான் ஏற்ற ஆசிரியப்பணியில் எனக்கு ஏமாற்றமே. கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆயிடுச்சு.

    ReplyDelete
  18. கலக்கலா இருக்கு வினோத், வாழ்த்துகள் :)

    ReplyDelete
  19. //எஸ்.ஏ.சி பட கதாநாயகிகளை விட கொடூரமாக கற்பழிக்கப்படும் வார்த்தை “காதல்” ஆகத்தான் இருக்கும். அதைப்பற்றி அதீத நுட்பம் ஏதுமின்றி எழுதினாலும் அநாயசமாக ஆறாயிரம் பக்கம் தொடும். தமிழகத்தின் அடுத்த மூன்று தலைமுறைகளுக்கும் ஒரே ஒரு ஜெயமோகன் போதுமானவர் என்பதாலும், போட்டியாக ‘குண்டுபுக்கு’ போட்டு அவர் குடி கெடுக்கும் உத்தேசம் எனக்கில்லை என்பதனாலும் இந்த தலைப்பை சாய்ஸில் விட்டுவிடுகிறேன்.//

    :)))))))))))))))))

    Awesome

    ReplyDelete
  20. நீங்க என்ன எழுதி தள்ளினாலும் அது எல்லோராலும் விரும்பி படிக்கும்படியாகத்தான் அமையும். ஏனென்றால் நகைச்சுவை இயல்பாகவே உங்களிடம் உள்ளது. ஜமாயுங்க. சொல்ல வந்ததை பாதை விலகாமல் சொல்லியுள்ளீர்கள். இன்னும் கொஞ்சம் அளவு சிறிதாக இருந்தால், இந்த அவசர உலகத்தில் உபயோகமா இருக்கும். அல்லது பாகம் ஒன்று இரண்டு என்று போடுங்கள். வாழ்க வளர்க.

    ReplyDelete
  21. @puthagappuzhu அருமை புத்தகப்புழு

    ReplyDelete
  22. அவேசம் என்ற ஒரு வார்த்தையைத் தாண்டி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. வேண்டுமானால் "அவேசமாதி அவேசம்" என்று சொல்லலாம். இது "ஷேர் ஆட்டோ பிக்ஷன்" என்பதைத் தாண்டி "திருநெல்வேலி ஜங்ஷன்" என்ற வகையிலும் பகுக்கப்படும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்துக்குத்து...

    செம flow .. செம humour ... தொடர்ந்து கலக்குங்கள்... :))

    ReplyDelete
  23. காதலுக்கு அருமையான வார்த்தை. எல்லாம் உண்மை. நம்மூர் கல்லூரி படிப்பை முடிக்கும் 99 சதவிதம் பேர், 12 ஆம் வகுப்பில் தாங்கள் பெற்ற கொஞ்ச அறிவையும் அழித்துவிடுகிறது. @Gnanasekar89

    ReplyDelete