Monday, May 21, 2012

மனிதன் மாறிவிட்டான் !

எனது அருமை நண்பர்களே... நண்பிகளே...

சூலமங்கலம் ராவணன் மயில் வாகனன் என்ற நான், தஞ்சை தரணியில் பிறந்து (தவழ்ந்தது சென்னை மாநகரத்தில்-வாழ்ந்தது வடக்கிலும், மேற்கிலும்) இப்போது இறுதியில் முடங்க வந்திருப்பது தமிழகத்தில். அயிலு கட்டை சந்தனமும் நுரை அள்ளி பூச்சொறிகி, அழகான காவிரியாள் அலுங்காமல் ஓடிவரும் எங்கள் கிராமத்தில் முப்போகம் அறுவடை செய்யும் திருமாம்பழ கட்டு என்ற திருப்பெயர் கொண்ட எங்கள் நிலத்தில் நெல்மணியை பயிர் செய்த என் முப்பாட்டன், பாட்டன் எனக்கு விட்டு சென்றதென்னவோ ஆறடி நிலம் மட்டும் தான் . நாக்கை நம்பி வாழ்ந்த அவர்களுக்கு தின்னு கெட்ட குடும்பம் என்றும் ஒரு சிறப்பு பெயர் உண்டு . மேலே சொன்ன அனைத்தும் வெறும் கேள்விஞானமே.

கல்விக்கும் எனக்கும் காத தூரம் என்று எனக்கு புரியவைக்க என் சிறு வயதிலேயே தன் உயிர் ஈந்த தியாகி என் தந்தை.  கூடபிறந்தவர்களின் படிப்பிற்காக இச்சை இருந்தும் படிப்பை துச்சமென நினைத்து பணியில்  அமர்ந்து சிறிதளவே பாடுபட்டேன், பெரிதளவு அதிர்ஷ்டமும், கடுகளவு மூளையும் இருந்ததால், இலை அசையும் காற்றினிலே  நான் கோபுரத்தின் உச்சிக்கு போய்விட்டேன் . பின் என்ன பறந்து பறந்து பணம்தேடி பாவ குளத்தில் நீராடி, 50 வயதிற்குள்ளேயே அனைத்து வசதிகளும் அளவிற்கு அதிகமாய் பெற்று அனுபவித்து இப்போது வெறுத்துப்போய் கிளம்பிய இடத்திற்கே வந்துவிட்டேன்.

இடையிலே திருமணம் என்ற கண்டத்தில் சிக்கிக்கொண்டு ஒரு மகள் ஒரு மகன் என்ற இரண்டு வெடி குண்டுகளுக்கு தந்தையாகி சிவன் கழுத்தில் இருக்கும் பாம்புக்கு எவ்வளவு பாதுகாப்போ அதுபோல் சிவனே என்று இருப்பதே எனக்கும் பாதுகாப்பு என்ற முடிவில் என் இறுதி பயணத்திற்கும் முன் பதிவு செய்துவிட்டு சிறிது  மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன் - என்னை பற்றிய சிதம்பர ரகசியம் இன்று  போட்டுடைக்கபட்டது.

35 ஆண்டு மணவாழ்க்கையில் மனைவியை பிடித்தாலும் (பிடித்தே ஆகவேண்டும் வேறு வழியில்லை) அவள் கைப்பக்குவம் என் நாவினை அடக்கி ஆளவில்லை . யானை தன் தலையில் தானே மண்ணை போட்டுக்கொள்வதுபோல் நானே எனக்கு பிடித்ததை சமைத்து கடந்த பத்து ஆண்டுகளாக உண்டு உயிர் வாழ்ந்து வருகிறேன். நேற்று எனக்கு சனி உச்சம் என்று நினைக்கிறேன் . மாலை உணவு தயார் செய்யாமல் (சோம்பல் அல்ல சில நண்பர்கள் வந்து விட்டதால்) அவர்களுடன் ராஜபவன் என்ற ஹோட்டலிற்கு சென்றோம். பர்சில் பணம் அதிகம் இருந்தாலும் அடிக்கடி அதை தொட்டு பார்த்துகொண்டேன். முதலில் இடியாப்பம் குர்மா சாபிட்டோம். அது பறக்காமல் இருக்க அதன் மேல் சில சிறிய கோப்பைகளை வைத்து அதில் சில பதார்த்தங்களை வைத்து இருந்தனர்.

அடுத்து வெங்காய ஊத்தப்பம் வந்தது. ஊத்தப்பம் என்றால் அது ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில் கதவுகளை போல் தடியாக இருக்கும் என்று நினைப்பு எனக்கு. வந்ததோ வெங்காய சருகு சேலையில் சிறுது வெங்காயத்தை தூவியது போல் இருந்தது. நான் பரிமாறியவரை அழைத்து ஐயா நான் கேட்டது ஊத்தப்பம் நீங்கள் தந்ததோ தோசை என்றேன்.
அதற்கு அவரோ அலட்சியமாக அதுதான் சார் ஊத்தப்பம் என்று பதில் சொன்னார்

நான் விடவில்லை. கரகாட்டக்காரன் கௌண்டமணி பாணியில் ஐயா வெங்காயம் இங்கே இருக்கு , பச்சை மிளகாய் இருக்கு தோசை இருக்கு ஊத்தப்பம் எங்கே என்றேன்.

யோவ் அதுதான்யா ஊத்தப்பம். நீ குடுக்கிற காசிற்கு இவ்வளவு தான் இதற்கு மேல் பேசினால் நமக்கு தான் அவமானம் என்று நினைத்து 1200 / ருபாய் அழுது விட்டு (ஆறு பேருக்கு) வீட்டிற்கு வந்து ஒரு லிட்டர் மாங்கோ மில்க் ஷேக் குடித்து விட்டு தூக்கம் வராமல் ஒரு தூக்கமாத்திரையை விழுங்கிவிட்டு இனி பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை ஹோட்டலிற்கு போவதில்லை என்று முடிவு செய்து இந்த பாடலை எழுதினேன்.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை
ஹோட்டல் மாறவில்லை
இட்லியும் தோசையும்
வடையும் பூரியும்
எதுவும் மாறவில்லை
சைஸை (Size) குறைத்து விட்டான்
ப்ரைஸை (Price) ஏற்றிவிட்டான்
ஹோ ஹோஹோ ஹோ ஹோஹோ

அரிசியை கண்டான்
இட்லியை படைத்தான்
கோதுமை மாவில்
ரொட்டியை சுட்டான்
எதனை கண்டான்
ரவா உப்புமாவை படைத்தான்
ஹோட்டல் மாறவில்லை
சைஸை (Size) குறைத்து விட்டான்
ப்ரைஸை (Price) ஏற்றிவிட்டான்
ஹோ ஹோஹோ ஹோஹோ

பிரியாணி என்பான் அது
கோந்தாய் ஒட்டும்
பரோட்டா என்பான் அது
பட்டுன்னு உடையும்
குலோபு ஜாமுனில்
கொலைவெறி வாசம்
குஸ்கா முழுவதும்
கூவத்தின் நாத்தம்
போதும் போதும் வேண்டவே வேண்டாம்
பொருத்தது போதும் பொங்கி எழு

எழுதியவர் : ராவணன் மயில் வாகனன்
ட்விட்டர் ஐடி : @ravan181

16 comments:

  1. ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;-))

    ReplyDelete
  2. எழுத்தில் இன்னமும் வாலிப மனசு தெரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள் அய்யா :-)))

    ReplyDelete
  3. ரொம்ப ரசிச்சேன்... ரேனுகுண்டா கூட்டத்தின் தலைவராகும் அத்தனை தகுதியும் உண்டு உங்களுக்கு!


    பசங்களா பதவிய குடுத்து இவர உக்கார வைங்க !

    ReplyDelete
  4. Ravan Sir,

    தல கலக்கல் ரகம்... நிறைய எதிர்பார்க்கிறேன் தல உங்களிடம் இருந்து...

    ReplyDelete
  5. ராவண் சார் ஒரு வெங்காயத்தோசைக்க்கு இந்த அக்கப்போரா என்றூ நினைத்தாலும்,சில ஹோட்டல்களில் நாம் எதிர்பார்த்து ஆர்டர் பண்ணிய உணவு எமக்கு வராவிட்டால் எமக்கும் கோபம் வரும்தான்.அதுவும் இந்த வயதில் இன்னும் கோபம் அதிகமாகும்,அழகாக உங்கள் வாழ்வின் ஆரம்ப படிந்நிலையை சிலேடையாக எம்மிடம் தந்துள்ளீர்கள் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  6. ஒரு சின்ன பதிவில் ஒரு பெரிய படத்தோட ட்ரையிலற ஓட்டி, அந்த சன் பிக்சஸ்ர்க்கே சவால் விட்ட தலைவர் ராவண் வாழ்க.!
    காமெடியா சொன்னாலும் , நீங்க படிக்க முடியாத சுச்சுவேஷன் சோகம் நெஞ்ச தாக்குது.! அப்டி இருந்தும் ‘தி ஹிந்து’வுக்கே
    கரெக்‌ஷன் குடுக்குற அளவுக்கு உங்களுக்கு ஆங்கில ஞானம் இருந்துச்சுன்னு தெரியும் போது நாமல்லாம் வெறும் அப்பாடக்கர் ட்விட்டர்தான்ங்குறது
    நெஞ்சுல அறையுது.! ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போய் பல்பு வாங்கின கதை அநேகமா எல்லாருக்கும் இருக்கும். அதை அட்டகாசமா ஒரு பாட்டோட
    எழுதி அந்த ஹோட்டல் ஓனருக்கு இனிமா குடுத்தீங்க பாருங்க..செம கலக்கல்!! இனி வாரம் ஒரு பதிவு எதிர் பாக்குறோம். # சிஷ்யகோடி - செமகேடி - கட்டதொர.!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் தங்களை போன்ற நல்ல நட்பு உள்ளங்கள் கொடுத்த ஊக்கம் தான் . வாரம் ஒருமுறை புதிய பதிவு ஒன்றை எழுத முயற்சிக்கிறேன் . நான் வட மொழியை கற்றவன் . தமிழ் எனக்கு விருப்பபாடம் தான் . ஆகவே எழுத்துகுற்றம் இருக்க கூடும் , கருத்துகுற்றம் இருக்காது . நீங்கள் அதை திருத்தி செம்மை படுத்தி போடவும். விரைவில் சந்திப்போம்

      Delete
  7. An open blog, literally. Personal information could have been in 'about'. Hotel experience and 'oothappam' song super! You could have left that on the roof of the hotel like Pattinathaar! "தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும்"

    ReplyDelete