Monday, June 25, 2012

நிச்சயத்துக்கும், திருமணத்துக்கும் இடையே...


விரைவில் திருமணம் ஆகவிருக்கும் பேச்சிலர்களுக்கு அறிவுரையாக இதை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது எனக்கும் என் நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்களின் பகிர்தலாக இதை எடுத்துக் கொண்டாலும் சரி.

இன்றைய மொபைல் மற்றும் இணைய உலகில் திருமணம் நிச்சயக்கப்பட்ட அல்லது அதற்கு முன்பிருந்தேகூட உட்பீ என அழைக்கப்படும் மணப்பெண்ணிடம் கடலை வறுக்க ஆரம்பித்துவிடுகின்றனர் இன்றைய இளைஞர்கள். இன்னமும் இங்கு பெண்களுடன் பழகுவது ஆச்சர்யமாகவும், வரமாகவும், கிடைத்தற்கரிய ஒன்றாகவும் இருப்பதால் ஏதோ ஒரு லைசன்ஸ் கிடைத்துவிட்டது போலவே நினைத்து அவரப்படுகிறார்கள். நாசூக்காக அணுகாமல் உழுது புரண்டு அவசரப்படுவது அசிங்கமாய் வெளியே தெரிவதைப் பற்றியெல்லாம்கூட கவலை படாமல் கடலைகள் வறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படியெல்லாம் செய்துவிட்டு திருமணத்திற்கு பின் அந்த மோகம் முடிந்த பின் அப்பெண்ணின் மனதில் தொடரும் ஏக்கங்களை பற்றி புரிந்து கொள்ளாமல் காயப்படுத்தி விடுகிறார்கள்.!
சரி விஷயத்திற்கு வருகிறேன்.

திருமணம் நிச்சயமான ஆண்கள் என்னவெல்லாம் செய்யலாம். முக்கியமாக என்னவெல்லாம் செய்யக் கூடாது. இது இறுதியான விதியல்ல. பல விஷயங்களை கருத்தில் கொண்டு மாறலாம். பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல...

*எடுத்த உடனேயே அதிகம் பேசாதீர்கள். எடுத்த உடன் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்துவிடாதீர்கள். மொபைலில் அழைத்து பேசுவதாய் இருந்தாலும் சரி அல்லது நேரில் சென்று பார்ப்பதாய் இருந்தாலும் சரி தொடர்ந்து நீங்களே ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுக்காதீங்க. இருமுறை நீங்கள் அழைத்தால் ஒருமுறை அவர் அழைக்கும் வரை பொறுத்திருங்கள். எப்போது பார்த்தாலும் அவரே அழைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள்.

*எப்போது வேண்டுமானாலும் பேசலாம் என்ற பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். பேசுவதற்கு என குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அவசர விஷயமாக இருந்தால் இடையில் அழைக்கட்டும். வழக்கமான கடலைகளுக்கு அலுவலக நேரங்களை தவிர்த்திடுங்கள். நாளை திருமணத்திற்கு பின் எதேச்சையாக அலுவலக நேரத்தில் நீங்கள் அவரது ஃபோன்காலை தவிர்க்க நேர்ந்தால் அது பிரச்சனையாகும். ஆகவே ஆரம்பம் முதலே அலுவலக நேரத்தில் போன் கால்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவும்.

*உங்களை பற்றி சொல்லும் முன்னர் முதலில் பெண்ணை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள். அவரது சமூகசூழலை நன்கு அறிந்து அந்த அளவிற்கு உங்களை வைத்து பேசுங்கள்.வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் மாடர்ன் தாட்ஸ் இருப்பது போல காட்டிக் கொள்ள உங்களின் அலப்பறைகளை அவிழ்த்து விடாதீர்கள். உதாரணத்திற்கு, "நான் இன்னிக்கி ஃப்ரெண்ட்ஸொட சேர்ந்து தண்ணியடிச்சேன்.." , "என் கேர்ள் ஃப்ரெண்டுடன் சினிமாவிற்கு போனேன்..." என்பன போன்ற விஷயங்கள் திருமணத்திற்கு பின்னரோ ஏன் சில சமயங்களில் திருமணத்திற்கு முன்னரேகூட தன் சனீஸ்வர வேலைகளை காண்பிக்க ஆரம்பிக்கும். எதையெல்லாம் பேச வேண்டும். எந்த அளவு பேச வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

*உங்கள் எதிர்கால மனைவியின் உறவினர்கள் தோழிகள் பற்றி கமெண்டுவதை தவிர்ப்பதே சாலச்சிறந்தது. ஹாஸ்யம் என நினைத்து அவரது அப்பா, அம்மா, தம்பி, தங்கை பற்றி நீங்கள் இப்போது செய்யும் விமர்சனங்கள், முக்கியமாக அவர்களது உருவம் பற்றி செய்யும் கிண்டல்கள் பின்நாட்களில் வானவேடிக்கைகளாக வெடிக்கும் அபாயம் இருக்கிறது. உங்களின் எதிர்கால மனைவி எத்தனைதான் ஓபன் டைப்பாக இருந்தாலும், எக்காரணம் கொண்டும் அவரது அழகை யாருடனும் ஒப்பிடாதீர்கள். முக்கியமாக அவரது தோழிகள், உங்களது தோழிகள், உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் ஒப்பிடாதீர்கள். பிற பெண்களின் குணங்களை பற்றி உயர்த்தி அடிக்கடி அவரிடம் பேசாதீர்கள்.

*மிக முக்கியமான் விஷயம். உங்கள் நண்பர்களை பற்றி பேசாமல் இருப்பது நல்லது. அப்படியே பேசித்தான் ஆகவேண்டுமெனில் நல்ல விஷயங்களை பற்றி மட்டும் சொல்லுங்கள். உண்மையாக இருக்கிறேன் என நண்பர்களை பற்றிய உண்மைகளையெல்லாம் சொல்லிவிட்டு பின்னர் அவர் உங்கள் மனைவியான பின்னர் உங்கள் நண்பர்களை மதிக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.

*இது மட்டுமில்லாமல் அதிக செலவாளி என பெயர் வாங்கிவிடாதீர்கள். உங்களை பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமில்லாமல் உண்மை நிலவரங்களை ஓரளவு இலைமறை காயாகவாவது தெரிவியுங்கள். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை பற்றி தவறாகவோ அவர்கள்மேல் உங்களுக்கு இருக்கும் வெறுப்புகளையும் கண்டிப்பாக கூறாதீர்கள். உங்களுடைய அந்தரங்கங்கள் எல்லாவற்றையும் உடனேயே ஒப்புவிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

*மெதுவாக, நிதானமாக ஒரு புரிதலை ஆரம்பியுங்கள். செக்ஸ் பற்றியெல்லாம் பேசவும் அனுபவிக்கவும் நிறைய காலம் இருக்கு திருமணத்திற்கு பின்னர். ஏற்கெனவே முடிவு செய்த விஷயமென்றாலும் அதில் மெல்ல மெல்ல காதல் பூக்கச்செய்ய கிடைத்த கால அவகாசம்தான் நிச்சயத்திற்கும் திருமணத்திற்குமான இடைவெளி.

*மொபல் போன் இல்லாத காலகட்டத்தில் என் நண்பர் ஒருவர் STD பூத்தில் அக்கவுண்ட் வைத்து மாச சம்பளம் வந்ததும் 3000-4000 வரை செட்டில் செய்தார் அந்த நான்கு மாதமும்.

*அழைக்கும் போதெல்லாம் பேசிவிட்டு இப்போது வேலை இருக்கு அப்புறம் அழைக்கிறேன் என சொல்லும் நாளெல்லாம் வாங்கி கட்டிக்கொள்கிறேன் நான்.

*அவன் நல்லவனாக, ஹீரோவாக மாற எங்களை பற்றிய குறைகளை விளையாட்டாய் சொல்லி, திருமணத்திற்கு பின் ஏதேனும் உதவி என்றால்கூட எங்களை அழைக்க முடியாமல் தனியாகிவிட்ட நண்பன் ஒருவனும் இருக்கிறான்.

இப்படியாக பல இருக்கிறது. இது ஒரு டெஸ்டிங் பீரியட். இதை ஜாக்கிரதையாக கடக்க வேண்டும்.

இனிய திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துகள் நண்பர்களே....

அன்புடன்,
செந்தில் நாதன் @senthilchn

Saturday, June 23, 2012

அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -3)

மிரட்டல் அடி பார்ட் ஒன்னு, ரெண்டெல்லாம் முடிஞ்சி மூனாவதா வாத்திமார்கள் கதை..
 

இதுல என்னோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, பொதுவா ஒரு பள்ளிக்கூடத்துல ரொம்பவே சாதுப்பிராணிகளா சில வாத்தியார்கள் இருப்பாங்க இல்லையா.. அவங்களையே ஸ்கூல் கொள்ளாத அளவுக்கு மிரள வைத்து வாங்கிக் கட்டிக்கொள்வது என்னோட ஸ்டைல்.

வாத்திமார் கதை-1:


இது நான் ஏழாப்பு படிச்சிட்டு இருந்தப்போ நடந்த, நீதிபோதனை + வரலாறு வாத்தியார்கிட்ட வாங்குனதப் பத்தின வரலாற்று நிகழ்வு.
இவரப்பத்தி சொல்லனும்ன்னா, ஒரு கொசு அவரக் கடிச்சாக்கூட அத அடிக்காம தொரத்திதான் விடுவாரு.. அந்தளவுக்கு ஜீவகாருண்யரு..
அந்தநாள்..அதுவொரு அடித்து விளையாடுவதற்கு மிகவும் சாதகமான கிளியர் சன்னி டே..அந்தநாளின் கடைசி பீரியட் அது.

நம்ம சார் திபெத் பீடபூமியைப் பத்தி ஆத்து ஆத்துன்னு ஆத்திட்டுருந்தார் சொற்பொழிவ.. பாடத்தோட பாடமா "திபெத் பீடபூமிதான் உலகத்துலேயே பெரிய பீடபூமி.." அப்படின்னு ஒரு பொது அறிவுத்தகவலை அவரு சொல்லவும் "சார்..திபெத் பீடபூமி எங்க சார் இருக்கு..?" அப்படின்னு கூட்டத்திலிருந்து ஒரு இனிமையான கானக்குரல்..
ஆமாங்க.. யூ ஆர் அப்சலூட்லி கரெக்ட்..என்னோட குரல்தான்..
நான் என்னமோ தெரிஞ்சுக்கனுங்கற ஆர்வத்துலதான் கேட்டேன்..
ஆனா நான் கேட்ட டோன் பசங்களுக்கு எப்படி இருந்துச்சோ தெரியல..
ஹோல் கிளாசும் ஹோல்சேலா சிரிச்சுடுச்சி..

அதப்பாத்துட்டு அம்பி வாத்திக்குள்ள இருந்த அந்நியன் முழிச்சிக்கிட்டான்.. நம்மாளு என்னை தொவதொவன்னு தொவச்சி, காய வெச்சி, அயர்ன் பண்ற அளவுக்கெல்லாம் போயிட்டார்..
நல்லவேள, அந்த நேரம் பாத்து எவனோ ஒரு புண்ணியவான் கடைசி பெல்-ல அடிச்சான்..இல்லேன்னா, அன்னிக்கே அவரு என் வாழ்க்கைக்கு கடைசி பெல் அடிச்சிருப்பாரு..

இந்த கும்பிபாக கும்பாபிஷேகம் முடிஞ்சதும் பசங்ககிட்டே "எதுக்குடா அப்படி சிரிச்சீங்க.?"-ன்னு கேட்டா, "பின்ன.. நீயெல்லாம் டவுட்டு கேட்டா சிரிக்காம என்ன செய்யறதாம்.?"-ன்னு சிரிக்காம காமெடி பண்ணுனானுங்க.. சரி விட்ரா..விட்ரா சூனா பானா.. நீ சந்தேகம் கேட்டு, பிற்காலத்துல கலெக்ட்டரா வர்றது எவனுக்கும் புடிக்கலை போல'ன்னு எனக்கு நானே தாறுமாறா ஆறுதல் சொல்லிக்கிட்டு, புண்பட நெஞ்சை பண்படுத்தும் விதமா செட்டுக்காரண்ணன் கடைல நாலு தட்டுவடை செட்டு வாங்கி சாப்ட்டுக்கிட்டே வீட்டுக்கு போயிட்டேன்..



வாத்திமார் கதை-2:
நான் எட்டாவது படிச்சிட்டு இருந்தப்போ நடந்த வைபவம் இது..
இந்தமுறை கதையின் நாயகன் எங்க தமிழாசிரியர் பரமேஸ்வரன் ஐயா..
எல்லாப் பசங்களுக்கும் பிடித்த ஆசிரியர்..எனக்கும்..ரொம்ப..
மிக அருமையாக,நகைச்சுவை கலந்து தமிழ் சொல்லித்தருவார்.
மற்ற பாடவேளைகள் எப்படா முடியும் என நினைக்கும் நாங்கள், இவர் பாடவேளை மட்டும் எப்படா வரும் என காத்திருப்போம்..
அந்த காலத்திலேயே பொதிகை தொலைக்கட்சியில் பட்டிமன்றமெல்லாம் பேசியிருக்கிறார்.
இன்று வரைக்கும் நான் மதிக்கும் ஆசிரியர்களில் முதன்மையானவர்.
ஆனா..
நம்மோட ஜெகத்தலபிரதாபத்தை பார்த்து அசந்துபோய் இவரும் நமக்கு பரிசில் வழங்கியிருக்கிறார்.

இனி, over to சம்பவம்.

அது ஒரு காலாண்டுத்தேர்வோ..இல்ல..அரையாண்டுத்தேர்வோ நடந்துட்டு இருந்த சமயம்.எங்க ஸ்கூல்-ல எப்படின்னா, முழு பரீட்சை தவிர மற்ற தேர்வுகளுக்கு, ஒரு நீள டெஸ்க்கில் மூன்று பேர் வீதம் அமர வைத்து தேர்வு நடக்கும். அதாவது டெஸ்கின் இரண்டு பக்கமும் ஒரே வகுப்பை சேர்ந்த மாணவர்கள்.நடுவில் வேறு ஒரு வகுப்பை சேர்ந்த மாணவன்.

சம்பவதன்னிக்கு, எனக்கு இரண்டு பக்கமும் +2 படிக்கும் அண்ணன்கள்.
நடுவில் நான். ஹால் சூப்பெர்வைசர் நம்ம கதை நாயகன்.
+2 பசங்க ரெண்டு பேரும் அவங்க கொஸ்டின் பேப்பேர்ல ஒன் வோர்ட் ஆன்சரெல்லாம் டிக் பண்ணி நடுவுல இருந்த என் மூலமா பாஸ் செஞ்சிட்டு இருந்தாங்க. எங்க ஸ்கூல்-ல இது மாதிரி வழக்கமா நடக்கறது தான்..
சின்ன கிளாஸ் படிக்கற பசங்க பெரிய கிளாஸ் அண்ணன்களுக்கு பயந்துட்டு இதை செய்வாங்க. நான் அப்போல்லாம் கொஞ்சம் பயந்த சுபாவன்.(இப்போ எப்படினெல்லாம் கேக்க கூடாது...)

மேலும் அடுத்தவங்களுக்கு உதவி செய்யனுங்கற நல்லெண்ணெய் ச்சை.. நல்லெண்ணம் அந்த சின்ன வயசுலேயே எனக்கு மேலோங்கி இருந்ததால அவங்க ரெண்டு பேருக்கும் என்னாலான சிறு உதவியை செஞ்சிட்டு இருந்தேன். அதுல பாருங்க.. என்னோட இந்த உதவி செய்யற குணம் நம்ம கதாநாயகனுக்குப் புடிக்கலை போல..
இதை நோட் பண்ணிட்டு என்கிட்ட வந்த அவர்,
டெஸ்குல இருந்து என்னை வெளியே இழுத்து மொதல்ல கன்னத்துல ரெண்டு அப்பு அப்பினார். அப்புறம் கொஞ்ச நேரம் முடியை புடிச்சு ஆட்டினார்.
அப்புறம் குனிய வைத்து முதுகுல ரெண்டு சாத்து சாத்தினார்.
அப்புறம் நிமிர வைத்து திரும்பவும் கன்னத்துல ரெண்டு அப்பு அப்பினார். அப்புறம்..
---
---
---
சரி விடுங்க.. என் சோகம் என்னோட போகட்டும்...

ஒரு பத்து நிமிஷம் ஆக்ஷன் பிளாக்குக்கு ஒதுக்கிட்டு அடுத்த காட்சிக்குப் போவோம்.அடுத்த காட்சி என்னன்னா, நம்மாளு இன்னும் கோபம் அடங்காம, "வெளிய போய் நின்னுட்டே எழுதுடா..அப்போதான் உனக்கு புத்தி வரும்.." அப்படின்னு வெளியே அனுப்பிட்டார்.
நானும் "இனிமே வீட்டுப்பாடம், பால் கணக்கு, லவ் லெட்டர் இப்படி எதா இருந்தாலும் வீட்டுக்கு வெளியே தான் நின்னு எழுதணும்..அப்போதான் நெறையா புத்தி வரும்..." -ன்னு மனசுல நெனைச்சிட்டே வெளியே போய் நின்னுட்டு எழுதறேன்..
புத்தியும் வரல..புண்ணாக்கும் வரல..
எழுத்துதான் கோணல் கோணலா வந்தது...

அதுக்கு அடுத்து வந்தது செண்டிமெண்ட் பிளாக்.
நான் பாவமா நின்னுட்டே எழுதறத பார்த்த நம்ம கதாநாயகன், என் பக்கத்துல வந்து, என்னோட கலைஞ்ச தலையெல்லாம் சரியா ஒதுக்கி விட்டுட்டு "இனிமே இப்படியெல்லாம் பண்ணக்கூடாது..சரியா..?"அப்படின்னு சொல்லி உள்ள போய் உக்கார்ந்து எழுத சொல்லிட்டார்.
குற்றம் செஞ்ச என்னை விட, குற்றம் செய்ய தூண்டுன அந்த +2 பசங்களை அவர் ஒண்ணுமே சொல்லலைன்னு ஒரு சிறு வருத்தம் இருந்தாலும், நான் மதிக்கும் அவரிடம் கெட்டபேர் வாங்கினது இன்னிக்கு வரைக்கும் என்னோட மனசை உறுத்திட்டே இருக்கற ஒரு விஷயம். 

இதன் கடைசி பாகமான வாத்திமார் கதை-3 இன்னும் சில தினங்களில்...

முந்தைய பாகங்கள்:
அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -1)
அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -2)


ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))


 தொடரும்...



 

Wednesday, June 20, 2012

அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -2)

முதல் பாகத்துல அம்மாக்கிட்ட வாங்கிக்கட்டிக்கிட்டதை படிச்சி சந்தோஷமா இருந்திருப்பீங்க.. அடுத்து அப்பா.  எதுக்குமே கோவப்பட மாட்டார்; பெரிசா அலட்டிக்க மாட்டார்.. கிட்டத்தட்ட என் காரக்டரும் அதான். நான் கொயந்தயா இருக்கறச்சே.. வுட்வர்ஸ் க்ரைப் வாட்டர்..ச்சை. பழக்க தோஷம்.. நான் கொயந்தயா இருக்கறச்சே ஒருநாள் எங்கப்பா என்னை கொஞ்சுறேன் பேர்வழி'ன்னு எக்குத்தப்பா தூக்கினதுல என் ஒரு கைய்யே ஒடஞ்சு போச்சாம்.. அந்தளவுக்கு டெர்ரரான பாசக்காரரு.. ஆனா, அவர்கிட்டையும் தொரத்தி தொரத்தி அடி வாங்கியிருக்கேன்னா, என்னோட புஜபல பராக்கிரமத்தை நீங்க புரிஞ்சிக்கணும்..   எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு முறைதான் இவர்ட்ட அடி வாங்கிருக்கேன்..ஆனா ரெண்டு சம்பவத்தின்போதும் சும்மா பின்னு பின்னுன்னு பின்னி, ஜடை போட்டு, பூ,பொட்டெல்லாம் வெக்கற ரேஞ்சுக்கு போய்ட்டார்...




கொசுவத்திசுருள்-1:


அப்போ நான் எட்டாவதும், என் தம்பி ஆறாவதும் படிசிட்டுருந்தோம்..
ஒருநாள் நாங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுப்பக்கத்துல இருந்த ஒரு பேர் தெரியாத மரத்துமேல (அது ஒரு நன்றிமறந்த கருங்காலி மரம்'ன்னு அப்புறமாதான் தெரிய வந்திச்சி) ஏறி ஒக்காந்துகிட்டு, அவங்கவங்க கிளாஸ்-ல யாரெல்லாம் சூப்பர் பிகர்..யாரெல்லாம் மொக்கை பிகர்-ன்னு ரொம்ப தீவிரமா ஃபிகராயணம் பத்தி டிஸ்கஸ் செய்துட்டு இருந்தோம்..
அப்போ அந்த பக்கமா வந்த எங்கப்பா,எங்களோட "அழகு"ப்பேச்சுவார்த்தையை முழுசும் ஒட்டுக் கேட்டுட்டார் போல..
மரத்துலேர்ந்து எறங்கச்சொல்லி மொதல்ல எனக்கு விட்டார் பாருங்க ஒருஅறை.. ஆககா..என்னா அடி.???
காதுல ச்சும்மா ங்ங்கொய்ய்ய்யுன்னு மணியடிக்குது..
கண்ணுல ச்சும்மா ஞ்ஞ்ஜொய்ய்யுன்னு பூச்சி பறக்குது..
 நாட்டாமை கவுண்டர் கணக்கா என் காதுக்குள்ள குருவி கத்துற சவுண்டெல்லாம் கேக்குது..
  அத்தோட விட்டாரா..? "மொளச்சி மூணு எலை விடல.. அதுக்குள்ளே பெரியமனுசத்தனம் வந்துருச்சா ஒங்களுக்கு.?" -அப்படின்னு சொல்லிக்கிட்டே, நாங்க உக்காந்திருந்த மரத்துலேர்ந்தே ஒரு குச்சிய ஒடச்சு (தட்ஸ் வொய் ஐ கால்டு தட் மரம் யேஸ் கருங்காலி மரம்..அவ்வ்வ்வ்.. :-/ ) அடிக்க ஆரம்பிச்சவர்தான்..
அந்த இடத்துலருந்து எங்க வீடு வரைக்கும் சுமார் ஒரு அரை கிலோமீட்டர் தூரம் நாங்க ஓட..அவர் துரத்த.. அவர் துரத்த..நாங்க ஓட..நாங்க ஓட..அவர் துரத்த..... -இந்த மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை ஜபித்து முடிப்பதற்குள் ஒருவழியா வீடு வந்துடுச்சி..ஹப்பாடா..

இந்த ரணகளத்துளேயும் ஒரு கிளுகிளுப்பு என்னன்னா, எங்கள அவரு தொரத்தி தொரத்தி அடிச்சத பாத்த எங்க தாத்தா, பாட்டி, பக்கத்து வீட்டுக்காரங்க எல்லோரும் "ஏம்பா இந்த பச்சமண்ணுங்கள(!) போட்டு இந்த அடி அடிக்குற"ன்னு கேட்டும் அவரு ஒன்னும் சொல்லாம, எங்க இமேஜ் மேற்கொண்டு டேமேஜ் ஆகாம காப்பாத்திட்டார்.
எங்கம்மாட்ட கூட அடுத்தநாள் தான் சொன்னாரு.. ஸ்வீட் டாடி.. 
 




கொசுவத்திசுருள்-2:
ஒருநாள் சாயங்காலம் எங்கம்மா, சமையலுக்கு எண்ணெய் வாங்கிட்டுவர என்னையும், எங்க அண்ணனையும்(பெரியப்பா பையன்) பக்கத்துல இருக்க கடைக்கு அனுப்புனாங்க..
அந்த கடை எங்க வீட்டுலேர்ந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமிருக்கும்.. அப்போல்லாம் எங்க வீட்டுல டி.வி இல்ல..
கடைக்கு போயிட்டு வர்ற வழியில, ஒரு வீட்டுல டி.வி.யும் வெச்சு, அதுல கேபிள் கனெக்சனும் கொடுத்து, அதை பொதுஜனங்கள் பார்வைக்கும் திறந்து விட்டுருந்தாங்க..
என்ன இருந்தாலும் நாங்களும் இரு பொதுஜனம்'ங்கற முறையில ரெண்டு பேரும் அந்த விழாவ இருந்து சிறப்பிக்க அங்க போய்ட்டோம்...
அதுல ஏதோ ஒரு சுவாரசியமான மொக்க நிகழ்ச்சி போய்டிருந்தது..
அதையே நாங்க உள்ள இருக்க குடலு, குந்தாணியெல்லாம் தெரியற அளவுக்கு வாயை பொளந்துட்டு  பாத்துட்டுருந்ததால டைம் போனதே தெரியல..
திடீர்னு எனக்கு வீட்டப்பத்தின ஞானோதயம் வந்து அவன கூப்பிட ஆரம்பிச்சேன்.. ஆனா அவன் டி.வி கடல்ல ஓவரா மூழ்கி முத்தெடுக்கவே ஆரம்பிச்சுட்டான் கடப்பார நீச்சல்கூட தெரியாத அந்த கடங்கார பயபுள்ள..
இதுல "நீ வேணும்னா போ..நா அப்புறமா வர்றேன்" அப்படின்னு தெனாவெட்டா வேற சொல்றான்.. நா சுத்தீலும் பாக்கறேன்.. இருட்டுவேற கட்டிடுச்சு.. எனக்கு தனியா போகவும் பயம்.. அவன கெஞ்சி கூத்தாடி கூட்டிட்டு போறதுக்குள்ள ஜஸ்ட் ஒரு மூனே மூணு மணிநேரம் லேட்டாயிடுச்சி.. வீட்ட நெருங்க நெருங்க அம்மாட்ட இன்னைக்கு நெறைஞ்ச மண்டலபூஜை உண்டுங்கற பயத்துல எனக்கு கண்கள் பனிக்கவும், இதயம் தாறுமாறா துடிக்கவும் ஆரம்பிச்சுடுச்சி...
ஆனா, வீட்டு வாசல்ல பாத்தா..
---
---
---
---
---

அங்கதான் திரைக்கதைலயே ஒரு ட்விஸ்ட்..
எங்கப்பா ஒரு பெரிய குச்சியோட வாசல்லையே நிக்கறார் எங்கள வரவேற்க..
"ஏன்டா.. இங்க இருக்க பாய் கடைக்கு போயிடு வரை இவ்ளோ நேரமா..?" அப்படின்னு அவர் கேக்க, நானும் அம்மாட்ட இருந்து தப்பிச்ச குதூகலத்தோட "சைக்கிள் பஞ்சர் ஆகிடிச்சுப்பா.." -ன்னு ஒரு மொக்க ரீசன் சொன்னேன் பாருங்க..
அடுத்த அரைமணி நேரத்துக்கு அங்க ஒரு அற்புதமான அடிமழை..
சும்மா அடைமழை மாதிரி பொழிஞ்சு தள்ளிட்டார்..
குச்சி ஓடிஞ்சும் கூட அவர் விடலியே.. இதுல கிளைமாக்ஸ் திருப்பமாக வேற குச்சியை அவர் தேட போனப்போ.."என்னது மறுபடியும் மொதல்லேர்ந்தா..?" அப்படின்னு எங்கம்மாவே ஜெர்க் ஆகி, அவங்களே எங்களுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுடாங்கன்னா பாத்துக்கோங்க..

பி.கு.: மேற்படி சம்பவத்த பத்தி ரொம்பநாளா எனக்கு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்துச்சு..
அது என்னன்னா.. எங்கப்பா ஒரு அரைமணி நேரத்துக்கு சாத்து சாத்துன்னு சாத்தியும் இவ்ளோ நேரமா ரெண்டு பேரும் எங்க போயிருந்திங்கன்னு ஒண்ணுமே கேக்கல.. ஆனா பிளாஷ்-பேக்குல என்ன நடந்ததுன்னு எனக்கு அப்புறமா தான் தெரியவந்தது..
டீ.வி. பாக்குற இடத்துல பொதுஜனத்தோட பொதுஜனமா எங்களோட நலம்விரும்பி ஒருத்தரும் அங்க இருந்திருப்பார் போல.. அவரு டீ.வி. பாத்து முடிச்சிட்டு வீட்டுக்கு போற வழியில, ஏதோ நல்லெண்ண தூதுவர் ரேஞ்சுக்கு அவரப்பத்தி அவரே கற்பனை பண்ணிக்கிட்டு, மெனக்கெட்டு எங்க வீட்டுக்குப்போய் மேற்படி விஷயத்த ரொம்ப சீரும் சிறப்புமா கொளுத்திப் போட்டுட்டு போய்ட்டாரு.. அதுக்கப்புறம்தான் எங்கப்பா எங்க கொளுத்திட்டார்...

மாதா, பிதா முடிஞ்சி குரு-வுக்கு போறதுக்கு முந்தி இடைச்செருகலா
என் உடன்பிறப்பு..


தம்பி- பொதுவா தம்பியுடையான் படைக்கு அஞ்சான்-ன்னு சொல்லுவாங்க.. இவன பொருத்த வரைக்கும் தம்பியுடையான் அடிக்கு அஞ்சான்-ன்னு சொல்லலாம்..
அந்தளவுக்கு எங்க ரெண்டு பேருக்கும் எக்கச்சக்க கொடுக்கல்-வாங்கல்  நடந்துருக்கு..
ஆனா..இவன்கிட்ட சண்டை போடுறது தெருவுல போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுறதுக்கு சமம்..
ரெண்டுபேருக்கும் சண்டை வரும்போது என்கிட்டே எந்தளவுக்கு வாங்குறனோ அதுக்கு சரிக்குசமமா திருப்பிக் கொடுத்ததோட மட்டுமில்லாம , வீட்ல அம்மாட்ட போய் அவனோட ஆக்ஷன் பிளாக்-க்க மட்டும் சென்சார் பண்ணிட்டு, என்னோட புஜபல பராக்கிரமங்களை  மட்டும் DTS எபக்டோட, எடிட்டிங் எல்லாம் பண்ணி பக்காவா பத்த வெச்சுடுவான் பாசக்கார பய..
அப்புறமென்ன... அடுத்து வருவது நெக்ஸ்ட்டு ரவுண்டு டண்.டணா..டண்..



அடுத்தடுத்த பாகங்களில் வாத்திமார்கள் கதை..

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் ஒரு எட்டு இதையும் படிச்சிட்டு வந்துருங்க:  அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -1)


ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))



தொடரும்...



Monday, June 18, 2012

அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -1)

முஸ்கி: இது ஆர்குட்'ல "தமிழ் குடும்பம்" குழுமத்துல அடிவாங்குறதை பத்தின பேச்சு வந்தப்போ அங்க ஒரு இழைல நான் எழுதின அடி'களார் புராணம்.. மாதா, பிதா, குரு இவங்ககிட்டல்லாம் வாங்கிக்கட்டின அனுபவத்தை வரிசையா எழுதினேன்.. அதையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து உங்களின் பார்வைக்காக இங்கேயும்..





நான் முதன்முதலா யார்கிட்ட அடிவாங்குனேன்னு இப்போ ஞாபகம் இல்லேன்னாலும், அந்த வரலாற்று சிறப்புமிக்க வைபவத்த பிள்ளையார் சுழி போட்டு மங்களகரமா தொடங்கி வெச்சது என் அம்மாவாதான் இருக்கனுங்கறது என்னோட அவதானிப்பு.

அம்மா.. இவங்க எப்ப அடிப்பாங்க.. எப்படி அடிப்பாங்கன்னே தெரியாது.. ஆனா அடிக்க வேண்டாத நேரத்துல கரெக்டா அடிச்சுடுவாங்க ;-(((
சரியா சாப்டறது இல்ல..சொல்ற வேலையை செய்யறதில்ல.. கடைக்கு போயிட்டு லேட்டா வர்றது .. தம்பிக்கிட்டே சண்டை போடறது.. போன்ற அத்யாவசிய காரணங்கள் தொடங்கி, ஒழுங்கா படிக்கறதில்ல.. பரிட்சையில மார்க் கம்மியா வாங்கறது.. பொறுப்பில்லாம ஊர் சுத்தறது..போன்ற அச்சுபிச்சு காரணங்கள் வரை ஐயா ஆல்-ஏரியாவுலயும் ச்சும்மா கில்லி மாதிரி அடி வாங்கியிருக்கேன்..
 

அடிக்கறதுக்கான காரணங்கள் டிசைன் டிசைனா இருக்கறது மாதிரி, அடிக்கிறதுக்கான ஆயுதங்களும் டிசைன் டிசைனா இருக்கும்..
கரண்டி,தோசைக்கரண்டி, தயிர் கடையும் மத்து போன்ற பேரழிவு ஆயுதங்கள்..
குச்சி, மாடு கட்டும் தாம்புக்கயிறு போன்ற சிற்றழிவு ஆயுதங்கள் ..
இதுபோக அப்பப்போ டைம்-பாஸ் ஆவதற்காக தலையில் குட்டுவது..கிள்ளி வைப்பது..புறங்கையால் அடிப்பது போன்ற ஸ்பெஷல் அயிட்டங்களும் உண்டு..

பொதுவா எல்லா ஏரியாவுலயும் எக்கச்சமா, ஏகபோகமா அடி வாங்கியிருந்தாலும் இப்போ நெனச்சிப் பாத்தா ஒரு சம்பவம்கூட ஞாபகம் வர மாட்டேங்குது. (எப்பவாச்சும் வாங்குனா ஞாபகம் இருக்கும்.. எப்பவுமே வாங்கிக்கட்டிக்கிடா எத்தனைன்னு ஞாபகம் வெச்சிக்கறது.?)
இருந்தாலும் ஞாபக அடுக்குகள்ல கூகிள் சர்ச் பண்ணி ரெண்டு சம்பவங்களை மட்டும் சொல்றேன்..

துன்பியல் சம்பவம்-1:
நான் அஞ்சாவது வரைக்கும் சேலத்துல எங்க பாட்டி வீட்ல இருந்துதான் படிச்சேன். அப்பப்போ அப்பா, அம்மா வந்து பாத்துட்டு போவாங்க.. 


அப்போ நான் நாலாப்போ..இல்ல அஞ்சாப்போ படிச்சிட்டுருந்த சமயம். ஒருநாள் பை நிறைய கடலைக்கா, பனங்கிழங்கு, நவ்வாப்பழம் இதெல்லாம் எடுத்துக்கிட்டு அம்மா மட்டும் என்னை பாக்க வந்திருந்தாங்க. போக, பெட்-பாக்கெட் ப்ரூட்டி வேற.. அப்போ டிவி விளம்பரத்துல வர்ற ப்ரூட்டி ரொம்ப ஃபேமஸ்.. நானும் மொதோ மொதலா டிவி விளம்பரத்துல வர்ற வஸ்துவை குடிக்குறோம்'ங்குற குதூகலத்தோட அதை குடிச்சிட்டுருக்க, பேச்சுவாக்குல அப்போ முடிஞ்ச காலாண்டுதேர்வோ, அரையாண்டுத்தேர்வோ.. அந்த எழவுல என்ன மார்க்குன்னு அம்மா கேட்டாங்க. நம்ம மதிப்பெண்கள் அவ்வளவா மதிக்கும்படி இல்லாட்டாலும், காறித்துப்பற வகையில் இருந்துச்சி.. 
ஒக்கே ஒக்க அறை. அவங்க எய்ம் பண்ணது என்னவோ கன்னத்தை நோக்கித்தான். ஆனா நான் சின்னாத்தாளைக் கண்ட புதூ டுவீட்டர் கணக்கா பம்மி பீதியாகி, எசகுபிசகா மூஞ்சியைத் திருப்ப, எய்ம் மிஸ்ஸாகி ஒதட்டுல எறங்கிடுச்சி. லேசா..லேசா ஒதடு கிழிஞ்சி கொஞ்சமே கொஞ்சம் ரத்தம். 

ஒதட்டு ஓரத்துல ரத்தத்தை பாத்த ஒடனே எம்ஜியாருக்கு வீரம் பொங்குறா மாதிரி, எங்கம்மாக்கு பாசம் பொங்கிடுச்சி. அதுக்கப்புறம் பைய்யனை கொஞ்சோ கொஞ்சுன்னு ஒரே கொஞ்சல்ஸ்.. அப்புறமா, அறுகோண வடிவிலாலான இருபது பைசா காசு- நாலு காசுங்களை என் கைல வெச்சி அழுத்தி, எதுனா வாங்கி சாப்ட்டுக்கோ'ன்னு சொன்னாங்க. (அப்பல்லாம் அது பெரிய தொகை- ஆஹா இதுக்காவே அப்பப்போ ரத்தக்காவு கொடுக்கலாம் போலருக்கே-ன்னு நெனச்சிக்கிட்டேன்.. அவ்வ்வ்.. காரியத்துல கண்ணா இருக்கோணும் கொமாரு :P). அதுக்கப்புறம் அந்தக் காசுல என்ன வாங்கி சாப்டேன்'ன்னு ஞாபகம் இல்லேன்னாலும், இப்பவும் எங்காவது இருபது பைசா காசைப் பாத்தா எங்கம்மாவோட ரத்தப்(!)பாசம் மனசுக்குள்ள வந்து குறுக்காலயும், நெடுக்காலயும் வாக்கிங் போகும்.


  துன்பியல் சம்பவம்-2

அடியேன் வெற்றிக்கரமா அஞ்சாப்பு முடிச்சதும், ஆறாவது எங்க ஊர்லையே கொண்டுவந்து சேத்துட்டாங்க. நானும் காலை எழுந்தவுடன் கோலி, பின் மாலை முழுவதும் பட்டம், விடுமுறை தினங்களில் பம்பரம் கில்லி-தாண்டில், கிரிக்கெட் என தீராத விளையாட்டுப் பிள்ளையா சுத்தீட்டு இருந்தேன். அதுபோக, அப்பப்போ தங்கச்சி, தம்பியுடன் சண்டை..  சமாதானம், அப்புறம் மீண்டும் சண்டை.. திரும்ப சமாதானம் என அவ்வளவு அழகோ அழகான நாட்கள். 

நான் சந்தோஷமா இருந்தாத்தான் நம்ம விதி பகவானுக்குப் பிடிக்காதே.? குழந்தைகளின் சந்தோஷத்தை கெடுக்க ஆண்டவன் அருளிய அற்புதம்- பரீட்சைகள். இன்னொரு எழவு காலாண்டுத்தேர்வு வந்தது. வழக்கம்போலவே என்னோட மதிப்பெண்கள் சிலாகிக்கும்படி இல்லாம சில்லரைத்தனமா இருந்துச்சி. (நெஜமாவே சில்லரைத்தனந்தான்- ரெண்டு சப்ஜெக்ட்டுல சிங்கிள் டிஜிட்). என்னோட மார்க்கை நானே என் வாயால சொல்ல முடியாத நாக்கறு நிலைக்குத் தள்ளப்பட்டேன். போக, இப்போ மாதிரியே அப்போவும் எனக்கு தற்புகழ்ச்சி துளியும் பிடிக்காத காரணத்தால், என் பெருமையை நானே எப்படி என் வாயால சொல்றதுன்னும் தெரியல. 

அதனால நான் என்ன பண்ணேன்- சிங்கிள் டிஜிட் சப்ஜெக்ட் பேப்பர்களை மட்டும் நீள வாக்குல மடிச்சி, பேக்'லயும் நீள வாக்குலயே வெச்சிக்கிட்டேன். அதாவது, பேகை பார்த்த ஒடனே, அவங்களே கண்டுபுடிச்சி, பேப்பரை எடுத்து பாக்கணும். இதான் ப்ளான். (வாட் அன் ஐடியா ஷிர்ஜி!?!!!) என் ஐடியா நல்லாவே வொர்க்-அவுட் ஆச்சி. (ஆககா.. ராஜதந்திரங்களை கரைத்துக் குடித்திருக்கிராயடா நீ..) அம்மா எடுத்துப் பாத்துட்டாங்க..  அதற்க்கப்புறம் நடந்ததெல்லாம் வரலாற்றின் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய சம்பவங்கள். தங்கம் இப்போ விக்குற வெலைக்கு பொன்னெழுத்தில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வெண்கல எழுத்திலாவது பொறிக்கப்பட வேண்டும்.. அவ்வ்வ்.. என்னா அடி.?
 

 பக்கத்தில் கிடந்ததொரு பருத்திக்குச்சி. அதை எடுத்து செம்ம மாத்து. அடிக்கும் போது ஊடால தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்குற மாதிரி ஒரு வாக்கியம் சொன்னாங்க பாருங்க- "பெரிய நூத்துக்கு நூறு மார்க்கு வாங்குனவனாட்டம் பேப்பரை திமிரா மடிச்சி வெச்சிருக்க.. அவ்ளோ தெனாவெட்டா ஒனக்கு.?" அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது, நான் மார்க் கம்மியா வாங்குனதை விட, பேப்பரை அப்டி வெச்சிக்கிட்டு வந்ததுதான் அவங்க கோவத்தை ஹெவியா கெளறி விட்ருக்குன்னு.  (அவ்வ்வ்வ்.. என் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய் போய்விட்டனவே.? )
 


 இவ்ளோ அடி அடிச்சாலும் அவங்ககிட்ட இருக்க ஒரு நல்ல பழக்கம், கை..கால், முதுகு..போன்ற எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ஏரியாவுல மட்டுந்தான் அடிப்பாங்க..நான் அந்த வயசுலேயே நெம்ம்ம்ப பெர்சனாலிட்டியா(!) இருந்ததால, அதுக்கு குந்தகம் விளைவிக்கற வகையில் மூஞ்சியில மட்டும் அடிக்கவே மாட்டாங்க..
 

டிஸ்கி-1: ஒரு ஒன்னுந்தெரியாத அப்பாவிப்பைய்யனை போட்டு இந்த அடி அடிச்சதுனால, சிஎம் மம்மி மாதிரி எங்க மம்மியையும் லேடி ஹிட்லர் அப்படின்னு நெனைச்சுடாதீங்க மக்களே..
மை அம்மா இஸ் பெஸ்ட் அம்மா இன் திஸ் வேர்ல்ட்..
அவங்களப்பத்தி சொல்லனும்னா புதுசா
ஒரு ட்விட்லாங்கர் போட்டு, அதுல ஆயிரத்தைநூறு பக்கத்துக்கு எழுதலாம்.. அவ்ளோ நல்ல விஷயமிருக்கு..
 

டிஸ்கி-2: இந்த போஸ்ட்டுக்கு "எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே.. இவன் ரொம்ப நல்லவன்டா..", "ஆயிரம் அடி வாங்கிய அபூர்வ சிகாமணி.." போன்ற கமெண்ட்டுகள் வரவேற்க்கப்படுகின்றன.!!

மாதா-வைத் தொடர்ந்து அடுத்த
போஸ்ட்டில் பிதாவின் வீரப்பிரதாபங்கள்..

 ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))
 

தொடரும்..

Friday, June 15, 2012

சாம்பார் – ஒரு கலக்கல் ரெசீபி


சாம்பார் – ஒரு கலக்கல் ரெசீபி
(சாப்டு வயித்தக் கலக்கினா நான் பொறுப்பல்ல.)

எத்தினி நாள்தான் வெறும் சோறு, தயிருன்னு சாப்ட? சாம்பார் வைப்போம்னு
களத்துல குதிச்சோம். நேரா ரிலையன்ஸ் ஃபிரெஷ் போயி கெடைச்ச காய்கறி
எல்லாத்தையும் வாங்கி கூடைக்குள்ள போட்டோம். இந்த திடீர், பகீர்
முயற்சியின் பலனாக சாம்பார் செய்யக் கற்றுக்கொண்டோம். தங்களின்
  உபயோகத்திற்காக இங்கே பகிர்கிறேன்.

இது முற்றிலும் ஆண் பேச்சிலர்களுக்கு மட்டுமான பதிவு. பெண்கள் காபி
அடிக்க வேண்டாம்.

தேவையான (எனக்குத் தெரிந்த) பொருட்கள்:
1.      து.பருப்பு*             -       100கி
2.      பா.பருப்பு**            -       50கி
3.      உ.உ.பருப்பு***  -       கொஞ்சூண்டு
4.      கடுகு                   -       கொஞ்சூண்டு
5.      சீரகம்          -       கொஞ்சூண்டு
6.      வெந்தயம்                -       மிகக் கொஞ்சூண்டு
7.      புளி                    -       ஒரு நெல்லிக்கா சைஸ் தண்ணில ஊறப்                                         போடணும்.
8.      கறிவேப்பிலை     -       கொசுரு
9.      மல்லி இலை       -       கொசுரு
10.     காஞ்ச மிளகாய்   -       4
11.     சிறு உள்ளி      -       10
12.     பெரு உள்ளி      -       1
13.     கத்திரிக்கா, மாங்கா, உருளைக்கிழங்கு, முருங்கக்கா, தடியங்கா, சௌசௌ,முள்ளங்கி, வெண்டக்கா
(any one or any two or combinational as your wish – inki pinki ponki)
14.     மஞ்சப் பொடி     -       1 டீஸ் ஸ்பூன்
15.     மிளகாய்ப் பொடி  -       1 டீஸ் ஸ்பூன்
16.     சாம்பார் பொடி   -       தெர்ல மக்கா, கலர் வர்ற அளவு போட்டுக்கோ.


செய்முறை:

•       முதல்ல நாலு நாளா கழுவாம இருக்குற பாத்திரத்த எல்லாம் கழுவிக்கோங்க.
•       காய்கறி எல்லாம் நறுக்கி வச்சுக்கோங்க.
•       முதல்ல அடுப்ப பத்த வைங்க.
•       து.ப.வோ, பா.ப.வோ இல்ல ரெண்டும் சேர்ந்தோ காம்பினேசன்ல குத்து மதிப்பா எடுத்துக்கோங்க.
•       பருப்பக் கழுவனும். நோ சோம்பேறித்தனம். இல்ல பங்கஸ், ஆல்கா, புழு
எல்லாம் வயித்துக்குள்ள போவும். அப்புறம் நான்தான் சாம்பார் செய்ய சொல்லித்தந்தேன்.. என்னாலதான்  ஃபுட்-பாய்சன் ஆயிருச்சுன்னு கம்பிளைண்ட் பண்ணப்பிடாது.
•       காய்கறியையும், நறுக்கின வெங்காயத்தையும் கழுவி குக்கர்ல, பருப்போட போடுங்க.
•       தண்ணிய வேணுங்குற அளவு (அந்த வேணுங்குற அளவு எனக்கும் தெர்ல) தோராயமா ஊத்திக்கோங்க.
•       அடுப்பப் பத்த வச்சு, குக்கர் வாய மூடி அதுல வைங்க.
•       பிரஷர், டென்சிட்டி, வெலாசிட்டி மெஷர் பண்ணி குக்கர் வெயிட்டப்
போடணும். வெரி இம்பார்டண்ட்.
•       கொஞ்ச நேரங்கழிச்சு குக்கர் விசில் போடும். எண்ணணும் ஒன்னு, ரெண்டு, மூனுன்னு, . . .
•       கருகின வாட வர்றதுக்கு முன்னாடியே குக்கர எடுத்துறணும். அவ்ளோதான்.
•       எப்பக் கருகும்ன்னு சொல்ல மிடியாது. இதுக்குதான் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்.
•       அப்புறம் ஒரு கடாய்ய அடுப்புல வைக்கணும்.
•       ஜோ நல்லெண்ணெய் கொஞ்சம் (அவ்வ் லிஸ்ட்ல மறந்துட்டேன்) ஊத்தணும்.
•       இங்கதான் டைமிங் முக்கியம்.
•       கடுக எண்ணெய் காஞ்சதும் போடணும். எண்ணெய் எப்ப காயும்ன்னு கைய்ய விட்டுப் பாக்க வேணாம்.
•       கொஞ்சம் சீரகம், ரொம்ப கொஞ்சமா வெந்தயம் அதுல போடுங்க.
•       கடுகு வெடிக்கணும். ( அது எப்பிடின்னா கடுகு டொப்பு, டொப்புன்னு வெடிக்கும்.)
•       காஞ்ச மிளகாயையும், கருவேப்பிலையும் அதுல போடுங்க.
•       அப்புறம் அப்புறம் புளியக் கரைச்சு அதுல ஊத்துங்க.
•       இங்கதான் சேஃப்டி ப்ரிகாஷன் முக்கியம். தண்ணிக்கும், எண்ணெய்க்கும்
ஆவாது. பர்ணால் பக்கத்துல வச்சுக்குறது நல்லது.
•       கொஞ்சம் மஞ்சப் பொடி, அளவா மிளகாய்ப் பொடி போட்டு கலக்குங்க.
•       தென் சாம்பார் பொடி போடணும். (இஃப் இண்டெர்ரெஸ்டேட் இன் ரெட் கலர் ஆட் மோர். மறுநாள் பின்னாடி ரெட் லைட் எரிஞ்சா கம்பெனி பொறுப்பல்ல.)
•       அதுல வெந்த பருப்பு, காய்கறியப் போடுங்க.
•       எல்லாத்தையும் சேர்த்து ஒரு கலக்கு கலக்குங்க.
•       உப்பு ஒரு ரெண்டு,மூனு ஸ்பூன் போட்டுக்கோங்க.
•       சாம்பாரக் கொதிக்க விடணும். (முக்கியமா, நீங்க இப்ப வச்சத சாம்பார்ன்னு நம்பணும்.
நம்பினாத்தான் ரெசீபி சக்ஸஸ்).
•       மல்லி இலைய துண்டு துண்டா நறுக்கி சாம்பார் மேலத் தூவி மேக்கப் பண்ணனும்.
•       அட சட்டிய அடுப்புலருந்து இறக்கிருங்க. இதுக்கு மேல அத ஒன்னும் பண்ண முடியாது. விதி விட்ட வழி.

எச்சா தகவல்கள்:
•       *து.பருப்பு – துவரம் பருப்பு; **பா.பருப்பு – பாசிப் பருப்பு;
***உ.உ.பருப்பு – உடைத்த உளுத்தம் பருப்பு.
•       சாம்பார் தண்ணி ஆயிருச்சுன்னா கவல வேண்டாம். மேலாப்ல ஊத்தினா ரசம் எனக்
கொள்க. கலக்கி ஊத்தினா சாம்பார் எனக்கொள்க. சிம்பிள்.
•       எந்த காய்கறி அதிகமா போடுறீங்களோ அதுதான் அந்த சாம்பார் பேரு.
•       கத்திரிக்கா போட்டா கத்திரிக்கா சாம்பார். முருங்கக்கா போட்டா
முருங்கக்கா சாம்பார். சாம்பாருக்கு பேரு வைக்குறது ரொம்ப ஈஸி.


 பின் குறிப்பு:
•       இங்கு படித்தது, பார்த்தது எல்லாம் பல செயல்முறைக்களுக்கு
உட்படுத்தப்பட்டு பல வெற்றி, தோல்விகளைக் கடந்து பல ஆராய்ச்சிகளின்
முடிவில் இப்பதிவு இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
•       தங்களின் இம்முயற்சிகள் தங்களின் சுயசிந்தனையிலும், துணிச்சலிலும்
எடுக்கப் பட்டவை.
•       தங்களின் சாம்பாரால் தங்களுக்கு எந்த உடல் உபாதை ஏற்படினும் தங்கள்
ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் இது கவர் ஆகுமா என உறுதி செய்து கொள்க.
•       தாங்கள் சாம்பார் செய்ய எந்த விதத்திலும் கம்பேனியால் வற்புறுத்தப் படவில்லை.
•       “யாம் பெற்ற இன்பம்” என்ற நல்லெண்ணைய்லேயே ச்சே நல்லெண்ணத்திலேயே
இப்பதிவு வெளியிடப் பட்டது.
•       இது சாம்பார் வைக்கத் தெரியாத எந்த பெண் ட்விட்டர்களையும் கலாய்க்கும்
நோக்குடன் எழுதப் படவில்லை.
•       தங்களுக்கு எந்த வித “பின்”விளைவுகள் ஏற்பட்டாலும் கம்பேனி பொறுப்பல்ல.
•       தங்கள் செய்முறை தோல்வியடைந்தால் கம்பேனி வாசல்ல வந்து துப்பக் கூடாது.
•       சாம்பார் சரியில்லேன்னா ஆறு அடி குழி தோண்டி புதச்சிருங்க. நாயி, பூன
ஏதும் மோந்து பாத்து செத்துறாம.
•       தப்பித் தவறி சாம்பார் நல்லா வந்துருச்சுன்னா அதன் ராயல்டி கம்பேனியை
மட்டுமே சாரும்.

தங்களன்புள்ள,
ஜெகன் ஜீவா