Wednesday, May 30, 2012

"ஏற்படக்கூடாததொரு முன்னேற்பாடு"



சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். கல்லூரி
முடிந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தோம். அரசு பேருந்துகளும் கல்லூரி பேருந்துகளும் சேர்ந்து ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் சிறு வாகன நெரிசலை உருவாக்கியிருந்தன. ஒரு அரசு பேருந்தின் பின் இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் காத்து கொண்டிருந்தனர். அப்பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு லாரி கட்டுபாடு இழந்து அந்த பேருந்து மீது மோதியதில் நடுவில் சிக்கி இருவரும்........

ஒருவர் உடலில் எந்த காயமும் இல்லாத போதிலும் தலையில் அடிபட்டு
உதிரம் வீணாகி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.(தலைகவசம் அணிந்திருந்தால் அவர் பிழைத்திருக்கலாம்.) இன்னொருவர் அதிர்ஷ்ட்டவசமாக பலத்த காயங்களோடு உயிர் தப்பினார். 
அவரை வாகனத்தின் இடிபாடுகளில் இருந்து விடுவித்து சாலை ஓரம் கிடத்தி உதிரப்போக்கு  நிற்க முதலுதவி செய்வது,
108க்கு அழைப்பது என நாங்கள் மும்முரமாக இருந்தோம். உண்டான வாகன நெரிசலால் அவசர ஊர்தி சாலையின் எதிர்ப்பக்கம் தான் வந்தது. அவரை தூக்கிக்கொண்டு சாலையை கடந்து அவசர ஊர்தியில் ஏறி அமர்ந்தபின் ஆசுவாசமடைந்து அவரிடம் வீட்டு தொலைபேசி எண் கேட்டால் அவருக்கு நினைவில் இல்லை. சட்டை பையில்  இருந்த சில காகிதங்கள் எதிலும் எந்த எண்ணும் இல்லை. அவரது அலைபேசி விபத்தின் தாக்கத்தில் எங்கோ சென்று விழுந்துள்ளது. அவரிடம் அவரது தொலைபேசி எண் வாங்கி அதற்கு அழைத்தோம். எடுத்தவர் தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். சரி இவரது இல்ல எண்னை  (செல்வின்னு பேர் போட்டு இருக்குங்க...) தெரிவிக்குமாறு கேட்டேன்.
இதோ பார்த்து சொல்லுவதாக கூறி அழைப்பை துண்டித்தார். பல நிமிட
காத்திருப்பின் பின்  திரும்ப அழைத்தால் அலைபேசி அணைத்து
வைக்கப்பட்டிருந்தது.  
இங்கு இவரோ அரை மயக்கத்தில்.. (பேச்சு கொடுத்து எண்னை நினைவுபடுத்த சொல்லிக்கேட்டால் தெரியாது/ நினைவில் இல்லை என்பதே பதிலாக இருந்தது. எதாவது சில எண்களையாவது  நினைவுகூற
முயற்சிக்கவுமென  வற்புறுத்தி, அவரை கூற வைத்தோம். அவர்
தோராயமாக கூறிய நான்கு ஐந்து எங்களுக்கு  அழைத்துப் பார்த்தோம், அனைத்தும் தவறான அழைபுகளாயின. பின்பு நினைவு வந்தவராக ஒருவரது எண்ணை கூறினார். அது அவரின் தம்பியின் நண்பனின் எண்ணாம். அவர் மூலம் தம்பி எண் வாங்கி விஷயம் தெரிவித்தோம்.
அவர்களது வீடு செங்கல்பட்டிலேயே இருந்ததால் நாங்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை போய் சேர்க்கையில் அவரது குடும்பதினரும் வந்து சேர்ந்திருந்தனர்.

நினைத்து பாருங்கள் அவருக்கு கடைசி வரைஅந்த எண் நியாபகம் வராமல் இருந்திருந்தால்.?? அல்லது அதிர்ச்சியில் நினைவு தப்பி இருந்தால்.??
(வாகனத்தின் பதிவு எண் கொண்டு கண்டுபிடித்திருக்கலாம் என பல வழிகள் காவல்துறையினருக்கு இருந்தாலும்...) எங்களால் என்ன செய்திருக்க இயலும்.???

நான் கூற வரும் விஷயங்கள்:


1)மொபைலில் தங்கள் உறவினர் எண்ணை உறவுமுறை சேர்த்து சேமித்து வையுங்கள்.
(ICE என சேமிக்கும் வழக்கம் பரவலாக வெளிநாட்டில் கடைபிடிக்க பட்டாலும் இந்தியாவில் அதை பற்றிய விழிப்புணர்வு  வெகு குறைவே, பார்க்க http://en.wikipedia.org/wiki/In_case_of_emergency)
2)சட்டைப் பையில்/கைப்பையில் ஒரு காகிதத்தில் முக்கியமான தொலைபேசி எண்ணை எழுதி வைத்திருக்கவும்.

3)குறைந்தது ஒருவரின் எண்ணையாவது மனனம் செய்து கொள்ளவும், அவசர காலத்தில் பேப்பரில் இருக்கும் எண் கிடைக்காமல் போகலாம், மொபைல் தொலைந்து போகலாம். முக்கியமாக பெண்கள் அனைத்து உபகரணங்களையும் கைப்பையில் மட்டுமே வைப்பர், அவசரகாலத்தில் அதை தேடுவது சத்தியமல்லாதது. காணாமல்/தொலைந்து போக கூடிய வாய்ப்புகள் அதிகம்.

4)ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவத் தயங்காதீர்கள். மருத்துவமனையில் அனுமதித்தபின் அங்கிருந்த காவல் அதிகாரி, எங்களிடம் ஒரு படிவத்தை பூர்த்தி செய்யச் சொன்னார். எங்கள் விவரம் மற்றும் கையொப்பமும் பெற்றுக்கொண்டார். அவ்வளவுதான். இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லை. பொதுவாக கூறபடுவது போல் அலைகழிக்கபடும் அபாயம் எதுவும் இல்லை.ஆதலினால் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய தயங்காதீர்கள்.

5) கட்டாயம் தலைக்கவசம் அணியவும். கண்முன்னே ஒரு உயிர் கணநேரத்தில் பிரிந்தது தலைக்கவசம் அணியாத ஒரே காரணத்தால். (அவர் ஓட்டிக் கொண்டு வந்தது புத்தம் புது வண்டி என்பதை கண்டபொழுது, வாங்கி கொடுத்து வழி அனுப்பி வைத்த பெற்றோர் கண்முன் நின்றனர்)

6) கடைசியாக- முக்கியமாக விபத்தில் ஒருவர் அடிபட்டால்,
->எரிகிற வீட்டில் பிடிங்கினது லாபமென விபத்து நடந்த இடத்தில் களவாட முயற்சிக்காதீர்கள்.
->உதவி செய்ய மனமில்லாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதீர்கள்.
-->சுற்றி நின்று கூட்டம் கூட்டி வேடிக்கை பார்ப்பதை தவிர்க்கவும், கூட்ட நெரிச்சலால் வாகன நெரிசல் ஏற்ப்படும், உதவி ஊர்தி வந்து சேர தாமதமாகும்.

இந்தப் பதிவை படித்து, உங்கள் நண்பர்/ கணவர்/ தந்தை அல்லது உடனே உதவக்கூடிய ஒருவரின் எண்ணை தாங்கள் நினைவில் வைத்து கொண்டால் I WOULD BE HAPPY.!!

டிஸ்கி: வாசிப்பவரின் மன நிலையை பாதிக்க கூடாது என்பதற்காக விபத்தின் கோரத்தை அதிகமாக வர்ணிக்கவில்லை, ஆனால் அந்த கோரத்தின் தாக்கமே இந்த பதிவின் மூலம் உங்களை வற்புறுத்துவதன் காரணம்.

(108  அவசர ஊர்தி சேவையை பாராட்டியே ஆக வேண்டும்...முதல் அழைப்பிலேயே தேவையான விஷயங்களை கேட்டு தெளிவான தகவல் தந்தது..... 10  நிமிடங்களில்  ஊர்தி வந்து சேர்ந்தது..... வாகன நெரிசலில் தாமதமாகுமென மாற்று திசையில் வாகனங்களின் எதிர் திசையில் வந்தது...வந்த மருத்துவ சிப்பந்தியின் துரித  உதவி...அனுமதித்த பின் நாங்கள் அளித்த பணத்தை ஏற்க்க மறுத்தது என முழுதும் ஆச்சரியங்கள்!!)

அன்புடன்,
சந்தோஷ் @_santhu

Monday, May 28, 2012

அண்ணா நூலகத்தில் இரு அப்பாடக்கர்ஸ்


அண்ணா நூற்றாண்டு நூலகம்- ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்னரை வருட காலத்தில் போகவேண்டுமென பலமுறை திட்டமிட்டு சந்தர்ப்பம் சமையாமலேயே  இருந்தது. இந்த ஞாயிறு செல்லவேண்டுமென முடிவெடுத்தபின் முதலில் ஐந்துபேர் குழு செல்வதாக திட்டமிட்டு, முடிவில் வழக்கம்போல திட்டமிட்ட என்னையே திட்டிக்கொள்ள வேண்டியிருந்தது  -திட்டம் சொதப்பல். கட்சிப்பணிகளும், காதல் பணிகளும் பின்னால் அழைத்த காரணத்தால் மூவர் முன்கூட்டியே சொல்லிவிட்டு முன்வாங்கிவிட,  மிச்சமிருந்த இரு மனந்தளரா விக்கிரமாதித்தியர்களும் இலக்கியத் தண்ணீர் தேடி கடுந்தாகத்துடன் நூலகம் நாடிச்சென்ற கதையிது.! 

இருவரில் ஒருவர் பிரபல அப்பாடக்கர் கீச்சர் கவிதைப்போராளி கருப்பையா; மற்றவர் உப அப்பாடக்கர் கீச்சராகிய நான்.. 

முதலில் ஒன்பது தளங்களுடன் ஒய்யாரமான ஐந்து நட்சத்திர ஓட்டலையொத்த பிரம்மாண்டமானதொரு நூலாக கட்டிடத்தை பார்த்த மாத்திரத்திலேயே மனதுக்குள் வியப்பு கலந்த சிலிர்ப்போடியது உண்மை. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாம். நாங்கள் வலதுகாலை முதலில் எடுத்துவைத்து உள்நுழைய,  மங்களகரமாய் மஞ்சள் சுடி தரித்ததொரு மங்கை உள்ளிருந்து வெளியேற, ஆகாகா.. நல்ல சகுனமென கருப்பு கன்னத்தில் போட்டுக்கொள்ள (அஃப்கோர்ஸ்..அவன் கன்னத்தில்தான்)- எந்தஒரு இந்தியசினிமா  இயக்குனரும் மறுகேள்வி கேட்காமல் அங்கொரு கனவுப்பாடலை வைப்பதற்கான அற்புதமான சிச்சுவேஷன் அது. நான்கூட வெனிஸ் + சுவிசில் விதவிதமான லொக்கேஷனில், வகைவகையான காஸ்ட்யூமில் டூயட்டெல்லாம் பாட ஆயத்தமாகிவிட்டேன். சட்டென என் மண்டைக்கும் இலக்கிய கண்டக்டர் ஒருவர் விசிலடிக்க, எங்களது வண்டியை இலக்கியம் நோக்கி யூ-டர்னினோம்.

ஒருவழியாக கொண்டுவந்திருந்த பேகி'ற்கான டோக்கனை பெற்றுக்கொண்டு,  உள்லேறியதும் ஆரம்பத்திலேர்ப்பட்ட எனது வியப்பினளவு வியக்கதகுமளவுக்கு கூடிக்கொண்டே சென்றது.!  
முழுக்கவும் குளிர்ச்சாதன வசதியிடப்பட தளங்கள்,அமர்ந்து படிப்பதற்கு நல்ல காற்றோட்டமான, விஸ்தாரமான, வெளிச்சமான இடவசதி, சுகமான குஷன் இருக்கைகள்.. -அடடா.. என் போன்ற புத்தக  ஜந்துகளுக்கு பூலோக சொர்கமய்யா...

அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எக்கச்ச்ச்ச்ச்ச்சக்கமான (தோராயமாக ஐந்து லட்சம் "ச்"-கள் போட்டுக் கொள்ளலாம்-அவ்வளவு புத்தகங்களாம்.) புத்தகங்களை பார்க்கையில் நானெல்லாம் எவ்வளவு சிறியவன் என்கிற எண்ணம் லட்சதியோராவது முறையாக வந்ததுபோனது.நெறைய்ய்ய்ய வளரனும் கொமாரு நீ.. 

உள்ளே கணிசமான அளவுக்கு கூட்டத்தை பார்த்தது கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சி; அன்று ஞாயிறு + கோடை விடுமுறை என்கிற வகையில் அது மிகமிக கணிசமான கூட்டம்தான் என்பதில் நிறைய வருத்தம். குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்திருந்த பெற்றோர்களை பார்க்கையில் உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது. தரைத்தளத்திலுள்ள உணவகத்தில் வழக்கம்போல  கூட்டம் அம்மியது #தமிழேன்டா.

முதல் தளத்தில் பருவ இதழ்கள் என்கிற பிரிவைப் பார்த்ததும் ஓடோடிச்சென்று பருவம், மருதம், குயிலி முதலிய இதழ்களைத் தேடினோம். அவ்வ்வ்வ்..  வார, மாத இதழ்களுக்கான பிரிவாம்.. ச்சே..வட போச்சே-என நொந்துக்கொண்டு அடுத்த தளத்திற்குள் நுழைந்தோம்.

இரண்டாம் தளம்- தமிழ்த் தளம். அதனுள் கவிதை அடுக்கை பார்த்ததும் கருப்புவுக்கு கவுஜைவெறி அதிகமாகி கார்பெட்டை பிராண்ட ஆரம்பித்தான். உடனே பக்கத்து ரேக்கிலிருந்த ஜீரோ டிகிரியை எடுத்து முகத்துக்கு மூணு இன்ச் க்ளோஸ்-அப்பில் காட்டி, பைய்யனை நார்மல் மோடுக்கு கொண்டு வந்தேன்..அவ்வ்வ்வ்..
அங்கனதான் நம்ம விதி பகவான் என்ட்ரி.. எங்கள் பின்னாலேயே வந்தவர், நேராக ஹாலின் சனி மூலைக்கு சென்று அமர்ந்துகொண்டு எங்களைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தார். விதியாரின் திருவிளையாடலின் ஆரம்பமாக சாருவாரின் "எக்சிஸ்டென்ஷிலியசமும், ஃபேன்சி பனியனும்" நாவல் என் கண்ணில் பட்டுத்தொலைக்க- "மாப்பி.. ஒரு அரைமணி நேரம் இங்க சுத்திப் பாத்துட்டு இருக்கியா.. நான் அதுக்குள்ளே இந்த புக்கை முடிச்சிடுறேன்.?" -எங்க அப்புச்சி சத்தியமா எப்பயும்போல சாருவை கலாய்க்க, ஒரு காமெடிக்குத்தான்யா கேட்டேன். பயபுள்ள நம்ம கருப்புவுக்கு ஞாயிறன்று சனி உச்சத்துல இருந்துருப்பான் போல -"இருங்க மாம்ஸ்..நானும் வர்றேன்.. சேர்ந்து படிக்கலாம்" சனியாரும், விதியாரும் விலையில்லா வலைய விரிக்குறாய்ங்க சாருவார் ரூபத்துல..

நூத்தினாலு பக்கமே உடைய சின்ன புத்தகம், ரொம்பநேரமா நடந்த டயர்ட்நெஸ், கால்வலி, கொஞ்சநேரம் ஒக்கார்ந்தா தேவலை போன்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் உப காரணங்களும் சேர்ந்து கொள்ள, இப்போது விதியாரின் நமட்டுச்சிரிப்பு கொடூர வில்லச்சிரிப்பாக உருமாறிக்கொண்டிருந்தது. முடிவு பண்ணி ஒக்காந்துட்டோம். சேம் சனிமூலை.. விதியாருக்கு பக்கத்துபக்கத்து இருக்கை. 
"மிஸ்ட்டர் விதியார்.. யுவர் மிஷன் அக்கம்ப்ளிஷுடு..போயி வேற எவனாச்சும் அப்பாவியை புடி.. கெட் லாஸ்ட் யூ ட்ரோலு"-ன்னு அந்தாளு மூஞ்சில காறித் துப்பிட்டு ஆரம்பிச்சோம்...படிச்சோம்.. 
அப்பப்போ நீதாண்டா இதுக்கு காரணம்'ங்கற தொணில ரெண்டுபேரும் மொறச்சி பாத்துக்கிட்டோம் .. அப்புறம் திரும்ப படிச்சோம்..அப்புறம் திரும்ப மொறச்சோம்..திரும்ப படிச்சோம்.திரும்ப... சரி விடுங்க எங்க கஷ்டம் எங்களோட போகட்டும்.. இடையில பப்ளிக்கா பத்துபேர் பாத்துட்டுருக்காங்க'ங்கற பிரக்ஞை துளிகூட இல்லாமல் நித்திராதேவி என்னைத் தழுவியதால் என்னையுமறியாமல் கண்ணயர்ந்த இரண்டு நிமிடங்களையும் சேர்த்து, ரெண்டுமணி நேரத்துல படிச்சி முடிச்சேன். என்னத்தை சொல்ல..? என் வாழ்வில் வீணடித்த பலநூறு இரண்டுமணி நேரங்களில் மிகக் கொடூரமான இரண்டு மணி நேரங்கள்..ஆஆவ்வ்வ்வ்.. 

கருப்பு முடிக்கிற வரைக்கும் கவிதை செக்ஷன்'ல பராக்கு பாத்துட்டுருந்தேன். குட்டி ரேவதி புக்கெல்லாம் இருந்துச்சி. அதுல நான்  எதிர்பார்த்த(!) புக்கு இல்லாததால, திரும்ப அந்தத்தளம் முழுசும் இன்னொருமுறை பராக்கிங்.
பத்து நிமிஷத்துல கண்ணுல மரண பீதி தெரிய கருப்ஸ் வந்தான்..எனக்கும் அதே பீதிதான்..சோ,"சேம் சுவீட்டு மாப்பி"-ன்னு சொல்லி வெளீல கூட்டிட்டு வந்தேன். முள்ள முள்ளால்தான் எடுக்கணும்'ன்னு அன்னிக்கு காலைல தேதி கிழிக்கும் போது படிச்ச தத்துவம் சட்டுன்னு ஞாபகம் வர, கீழ இருக்க கேண்டீனுக்கு போனோம். சனியார்+விதியார்+ சாருவார் -இவர்களின் கூட்டுச்சதிநீர் திட்ட இலக்கியநீரை குடித்ததானலான கசப்புணர்வை போக்க டிகாஷன் தூக்கலாக, கடுங்ககசப்பான காப்பி ஆர்டர் பண்ணி குடிச்சிட்டு அடுத்த ரவுண்டுக்கு கெளம்பினோம் (அஃப்கோர்ஸ்..காசு குடுத்துட்டுத்தான்.!)  
இதற்கிடையே ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாக, உணவகத்தில் பார்த்ததொரு பெண்ணைப்பற்றி கருப்பு வர்ணிக்க ஆரம்பித்திருந்தான். சிலபல கவுஜைகள் வரலாம் என்பதை அவதானித்து "வேற ப்ளோர் போலாம்டா.." -என பேச்சை மாற்றி இழுத்து வந்தேன். பிறவிக்கவிஞனுங்க கூட சகவாசம் வெச்சிக்கிட்டா இதான்யா பெருந்தொல்லை. ஆன்னா..ஊன்னா கவுஜை சொல்ல ஆராம்பிச்சிடுறாய்ங்க.. பேடு ஃபில்லோஸ்...

அடுத்தடுத்த தளங்களில் குழந்தைகள், மருத்துவம், அரசியல், பொருளாதாரம், உளவியல், தத்துவம், பொறியியல், கணிதம்,புள்ளியியல், மொழியியல், வரலாறு, விளையாட்டு, புகைப்படக்கலை என்ன எண்ணற்ற தலைப்புகளில் எக்கச்சக்க புத்தகங்கள்  நிறைந்திருக்கின்றன.. பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள்.. அங்கெல்லாம் சும்மா போய் ஒரு விசிட் மட்டும் பாத்துட்டு வந்துட்டோம்.
ஏழாம் தளத்தில், ஏதோ ஒரு புத்தகத்தை கருப்பு வெறித்தனமாக புரட்டிக்கொண்டிருக்க, அந்தப் பிரிவின் தலைப்பைப் பார்த்து நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன் -"Pornography"  என்னாது..? இதுக்கெல்லாம் தனீ பிரிவான்னு குதூகலத்தோட கிட்டக்கப்போயி பாத்தா அது "Photography"-யாம். 
பசி கூட்டல் தூக்க மப்புல என் கண்ணு அந்த லட்சணத்துல தெரிஞ்சிருக்கு. திரும்ப ஒருமுறை வட போச்சேன்னு நொந்துகிட்டே கீழ எறங்கிவந்தோம்.

ஆரம்பிக்கும் போது ஐந்து லட்சம் புத்தகங்களுடன் ஆரம்பித்த நூலகம், கூடிய விரைவிலேயே பனிரெண்டு லட்சம் புத்தகங்களை எட்ட இலக்காம்.
அதேபோல் அசத்தலான வடிவமைப்பில் ஒரு திறந்தவெளி அரங்கமும் கட்டப்பட்டு வருகிறது. இரண்டுக்குமே ஆத்தா மனசு வைக்க வேண்டும்..ஹ்ம்ம்..பார்ப்போம்..

கூட்டல்கள்:

* படிப்பதற்கான அட்டகாசமான சூழல்.
* விஸ்தாரமான இடவசதி- படிப்பதற்கும், வாகன நிறுத்தத்திற்கும்..
* வெளியிலிருந்து நமது சொந்த புத்தகங்களையும் உள்ளே எடுத்துவந்து   படித்துக்கொள்வததற்கான ஏற்ப்பாடு. சொந்த மடிக்கணினிகளை உள்ளே பயன்படுதுவதர்க்கான அனுமதி. இரண்டுமே மிகச்சிறப்பான முயற்சிகள்.
* பார்வையற்றோருக்கான தனி ப்ரேயிலி செக்ஷன்.
* நல்ல விஸ்தாரமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய குழந்தைகளுக்கான பகுதி. இதுவும் ஒரு அருமையான முன்னேற்ப்பாடு. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான சூழலின் மூலம் அவர்களை கவர்ந்து, பின்னாட்களில் அவர்கள் வளர்ந்தபின்னரும் நூலகம் தொடர்ந்து வர வைப்பதற்கான நல்ல முயற்சி.
* படிப்பறை முதல் கழிவறை எங்கேயும்..எப்போதும் தென்படும் சுத்தம். ஒரு ஸ்டார் ஹோட்டல், ஹாஸ்பிட்டல் போல எல்லா தளங்களிலும் பணியாளர்கள் நிறையப்பேர் அவ்வபோது சுத்தம் செய்துகொண்டே இருக்கின்றனர்.
* கணினி தொடுதிரை மூலம் நமக்கான புத்தகங்களை எந்த தளத்தில், எந்த வரிசையில் உள்ளது போன்ற தகவல்களை பெறுவதற்கான வசதி.
*மற்ற அரசு அலுவலகங்களை போலல்லாமல் எல்லா பணியாளர்களும் மக்களுடன் இணக்கமாக, ஏதேனும் தகவல் கேட்டால் சலித்துக்கொள்ளாமல்  புன்சிரிப்புடன் நமக்கு உதவுகிறார்கள்.
*புத்தகங்கள் கலைந்திருந்தாலோ, அல்லது மேசையில் கிடந்தாலோ உடனேயே ஒரு சிப்பந்தி வந்து அலமாரியில் சரியாக அடுக்கி வைக்கிறார். 
*ஒவ்வொரு புத்தகத்திற்கு குறைந்தபட்சம் நான்கு காப்பிகள் உள்ளன.நமக்குத் தேவையான புத்தகம் வேறொருவர் வைத்திருந்தாலும் அவர் முடிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை.

*இரண்டாவது தளம் வரை எஸ்கலேட்டர் வசதி. எல்லா தளங்களுக்கும் லிப்ட் வசதி.

கழித்தல்கள்:

*இவ்வளவு பெரிய இடத்திற்கு உணவகம் மிகச்சிறியது. சிலவகை உணவுகள் மட்டுமே உள்ளன. இன்னமும் நிறைய வகைகள் சேர்த்து பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.
*ஒவ்வொரு தளத்திலும் சில பகுதிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக பழங்கால ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் பிரிவை காண ஆவலுடன் சென்றோம். அனுமதி இல்லையாம்.
*எல்லா தளங்களிலும் உள்ள அறிவிப்பு பதாகைகள் தமிழில் மட்டுமே உள்ளன. ஆங்கிலத்திலும் இருக்கலாம். முழுக்கவே ஆங்கில புத்தகங்கள் நிரம்பிய தளங்களில் அறிவிப்புப் பதாகை தமிழில் மட்டுமே இருப்பது சற்றே அபத்தமாக பட்டது எனக்கு.
*போலவே இன்னுமொரு அபத்தம் Rest room -என்பதற்கு "ஒப்பனை அறை" என்றவாறான முழி'பெயர்ப்பு.. பார்த்த மாத்திரத்தில் சிரிப்பு தாளவில்லை.

உண்மையில் இந்த நூலகம் குறித்து இந்த தலைமுறை தமிழர்களும், வரும் தலைமுறை தமிழர்களும் இது எங்கள் பெருமையென சர்வ நிச்சயமாக கூறிக்கொள்ளலாம். இதை மாற்றியே ஆகவேண்டுமென அடம்பிடிக்கும் அம்மையாருக்கு எனது ஒரே வேண்டுகோள் இதுதான். தயவு செய்து இங்கு ஒருமுறை வந்து பார்த்து விட்டு முடிவெடுங்கள்.
அதற்கப்புறமும், மருத்துவமனையாக மாற்றித்தான் தீருவேனென சொன்னால், ஒரே வழிதானிருக்கிறது. இதனை முழுக்கவே மனநல மருத்துவமனையாக மாற்றிவிட்டு, பச்சை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த கையோடு தானே முதல் பேஷண்டாக சென்று அங்கே படுத்துக்கொள்ளலாம்.!

ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன்
:-)))


நூலகம் பற்றி மேலதிக விவரங்களுக்கு:

http://annanootrandunoolagam.blogspot.in/
http://www.annacentenarylibrary.blogspot.in/

Saturday, May 26, 2012

அல்டாப்பின் முதல் அனுபவம்







( தலைப்பை பார்த்து ஏடாகூடமாக எதையும் கற்பனை செய்யாமல் பதிவை படிக்கவும்...)

"ஏன்யா! இந்த ஊர்லே எல்லாரும் "த்தா ..த்தா"ன்னு சொல்றானுகளே!!என்னத்தையா தர சொல்லி கேக்கறானுக?" -சென்னை வந்திறங்கிய முதல் கால்மணி நேரத்தில் அல்டாப்பு என்னை பார்த்து கேட்டது அது. அதன் அர்த்தத்தை சொல்லி அல்டாப்பின் வெள்ளை மனதையும் வெற்றுமூளையையும் களங்கபடுத்த ஆர்வமில்லாததால் " இந்த ஊர்லே யார் என்ன கேட்டாலும் கொடுத்துடாதே..முக்கியமா பணத்தை "என கூறி சென்னையை அறிமுகம் செய்தேன்.

சென்னைக்கு என்ன வேலை விசயமாய் வந்துள்ளீர் என யார் கேட்டாலும் "வேலை இருந்தா எதுக்குயா சென்னைக்கு வர்றோம்.?" என்பதே என் வழக்கமான பதில். ஆனால் இந்த தடவை சென்னையில் ஒரு சிறு வேலை நடக்க வேண்டி உள்ளது . அண்ணா சமாதியையும் நடிகர்களின் வீட்டையும்  பார்ப்பதே வாழ்வின் லட்சியமாக கொண்டிருக்கும் லட்சகணக்கான தமிழர்களில் அல்டாப்பும் ஒருத்தன் என்பதால் அவனையும் கூட்டி கொண்டு இந்த சென்னை பயணம்.

போன வாரம் சர்க்கரைவாசன் என்ற ஒரு தயாரிப்பாளர் போனில் கதை சொல்ல வருமாறு அழைத்திருந்தார். நான் படம் எடுக்க ஒரு கதையோடு அலைகிறேன் என கண்டுபிடிததற்க்கே அவருக்கு இந்த வருட சிறந்த கண்டுபுடிப்பிற்க்கான நோபல் பரிசை தாரளமாக வழங்கலாம். இம்முறையாவது வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற சிறு நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் தருவதே சென்னை என் போன்றவர்க்கு அளிக்கும் வரம்..  அதே சமயம் சாபமும் கூட .

வழக்கம் போல சென்னை மதம் கொண்ட காட்டு மிருகத்தை போல திக்கெட்டிலும் தறிகெட்டு ஓடி கொண்டிருந்தது . " எதுக்கய்யா எல்லாரும் இவ்ளோ அவசரமா எங்கயோ போயிட்டு இருக்காங்க ??" என்ற அல்டாப்பிடம் " அவங்களை நிறுத்தி கேட்டு பாரு... அவங்களுக்கே தெரியாது " என்றேன்.  அலுவலுகத்திற்கு எவ்வளவு அவசரமாய் செல்கிறார்களோ அதே அவசரத்தோடு வீட்டிற்கும் திரும்பும் விந்தையான மக்களை கொண்ட நகரம் சென்னை. காலை மனைவியிடம் தப்பிக்க  ஆபிசுக்கு ஓடி , மாலை மேனேஜரிடம் தப்பிக்க வீட்டுக்கு ஓடி... என்ன ஒரு இனிமையான நகர வாழ்க்கை 

சாலை ஓரம் கூவி கூவி லோன் விற்கும் இளைஞர்கள் , சிக்னலில் கார் கண்ணாடியை துடைக்கும் பிச்சைகாரகள் , அவர்களை கண்டு கொள்ளாமல் சிக்னலை மட்டுமே வெறித்து நோக்கி அமர்ந்திருக்கும் காரோட்டிகள் உள்பட வாழ்நாளில் தான் பார்த்தறியா கதாபாத்திரங்களை கண்டு வியந்தவாறே அல்டாப்பு உடன் வர , ஒரு வழியாய் தயாரிப்பாளர் இல்லம் வந்தடைந்தோம் .

"தரணிஆளும் பவர் ஸ்டார் சக்கரைவாசன் வாழ்க !!" , "அடுத்த அமெரிக்கா ஜனாதிபதி பவர் ஸ்டார் வாழ்க!" என்ற பேனர்கள் எங்களை  ஆர்ப்பாட்டமாய்  வரவேற்றன . தமிழகத்தின் பிரபல நடிகரின் வீட்டை பார்த்த அடங்காத மகிழ்ச்சியில் அல்டாப்பும் ,தலைவிதியின் நிலைமையை நொந்தவாறு நானும் உள்நுழைந்தோம்.

வழுக்கைதலையை தடவியவாறு வந்த ஹீரோ கம் தயாரிப்பாளர் சக்கரைவாசனை கண்டு எனக்கு ஆச்சர்யம் எதுவுமில்லை .. தமிழ்நாட்டில் அரசியலிலும் சினமாவிலும் நுழைய பணத்தை தவிர வேறெந்த தகுதிகளும் தேவை இல்லைதானே ?.. வாயெல்லாம் பல்லை காட்டிக்கொண்டு கைகுலுக்கி அல்டாப்பு தன் பரவசத்தை வெளிபடுத்திகொண்டான். இதயத்தின் ஒரு பக்கம் ஓலமிட்டு அழ , மறுபக்கத்தை கல்லாக்கி கொண்டு பவர்ஸ்டார்க்கு கதையை சொல்லி முடித்தேன்.

"கதை ஓகே.. ஆனா வில்லேஜ் சப்ஜெக்டா இருக்கே. பவர்ஸ்டார்க்கு ஏத்த பவர்  இல்லையேப்பா ??" என்ற சக்கரைவாசனிடம் " இப்போ நம்ம ஊர்லே எல்லா வில்லேஜ்ஜுமே பவர் இல்லாமேதான் சார் இருக்கு ". என அப்பாவியாய் பதிலளித்தேன் . " எனக்கு ஏத்த மாதிரி நல்ல ஆக்சன் சுப்ஜக்டா ரெடி பண்ணிட்டு வா அடுத்த மாசம்.." என்று பவர்ஸ்டார் எங்களிடம் விடைபெற்று கொண்டார்.  வெகு ஞாபகமாய் அல்டாப்பு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி பத்திரபடுத்தி கொண்டான்.

உதாசீனங்கள் பழகியவையே என்றாலும் தகுதி இல்லதாதவரிடமிருந்து கூட வந்த புறக்கணிப்பு சற்று வலிக்கவே செய்தது .. தன் பிறவி பயன் பூர்த்தி அடைந்தது போல தனக்கு தானே சிரித்து கொண்டு முகம் முழுக்க பெருமையோடு ஆட்டோகிராப்பை அடிக்கடி பார்த்துகொண்டு குதூகலமாய் வந்த அல்டாப்பை பார்த்து 
என்னுள் தொக்கி நின்ற கேள்வி " இப்போ நான் அழுவதா ? சிரிப்பதா..?"

-வினோத்குமார் நடராஜன் @altappu

Thursday, May 24, 2012

பெருநகர லொம்பலங்கள்



      மெட்ரோபொலிட்டன் சிட்டில வேலை கிடச்சு வந்துட்டா இங்க என்னமோ நாங்க ரெக்க கட்டிப் பறந்துகிட்டு இருக்கிறமாதிரி நம்பும் அப்பாவி அம்மாக்களே, அப்பாக்களே, இன்ஜினியரிங், ஆர்ட்ஸ் மற்றும் இதர படிப்புகள் படித்துக் கொண்டிருக்கும், படிக்காமல் ஏதோ பண்ணிக் கொண்டிருக்கும் உடன்பிறப்புக்களே உங்களுக்காக ஒரு பெருநகர அடிமையின் உண்மை வாக்குமூலம்.  
     
எதையோ படிக்கிறோம்...படிச்ச படிப்புக்கு வேலை தேடுறோமே தவிர பிடிச்ச வேலைய தேடிக்கிறதில்ல. சொல்லப்போனா எந்த திக்கு திசையும் தெரியாம அக்கரைக்கு இக்கரை பச்சையா (அட இங்க பச்சப் பெயிண்ட் அடிச்சா சுவருதாங்க இருக்கு) இருக்குன்னு அடுத்த பஸ் ஏறி பெங்களூரோ, சென்னைக்கோ வந்துர்றோம். இங்க நாங்க லொம்பலப்படுவது கடவுளுக்குத்தான் வெளிச்சம். இந்த அடிமை குப்ப கொட்டுமிடம் பெங்களூரு. 

சில அனுபவ பகிர்வுகள்.. இதையும் கொஞ்சம் கேட்டுட்டுப் போங்க...
   
1.   இங்க பேச்சிலர்ன்னா தெருநாய் கூட மதிக்காது. ஹவுஸ் ஓனர் மட்டும் மதிப்பானா.? வீடு கிடைக்காது..அப்டியே கிடைச்சாலும் ஹவுஸ் ஒனர்ஸ் பண்ற அலும்பு இருக்கே.. சொல்லி மாளாது.

2.   ஊர்ல ஒடுற தண்ணில குளிச்சவன் இங்க குடிக்கிற தண்ணிக்கு காசு குடுத்து கேன்ல அடைச்சி வாங்கணும்.

3.   நீங்க குளிக்கும் போது பாதில தண்ணி நின்னு போகலாம். துண்டக் கட்டிட்டு ஹவுஸ்ஒனர்ட்ட, காவேரி தண்ணிய கர்நாடகாவுட்டருந்து வாங்குற தமிழகம் மாதிரி கெஞ்சிக் கூத்தாடி வாங்கி மீதிக் குளியலப் போடணும்.

4.   வீட்லருந்து நாலு பேரு நம்மளப் பாக்க வந்தா ஹவுஸ் ஒனர்ட்ட ரெஸ்பெக்டெட் ஸார்ன்னு ஆரம்பிச்சு ஒரு பெர்மிஸன் லெட்டர் வாங்கணும். இல்லேன்னா பொசுக்குன்னு வீட்லருந்து வந்தவைங்களோட சேர்ந்து நம்மளையும் வீட்டக் காலி பண்ண சொல்லிருவாய்ங்க.

5.   மொழி - பெங்களூர் வந்துட்டா “திரைகடல் ஓடித் திரவியம் தேடித்தான் ஆகணும்.” இல்லைன்னா பல இடங்களில் நீங்க ஏமாற வேண்டியிருக்கும்.

6.   ட்ராஃபிக்- நம்ம ஊர்ல பீக் ஹவர்ஸ்லதான் ட்ராஃபிக். இங்க நடு ராத்திரி மட்டும்தான் டிராபிக் இருக்காது.

7.   யாராச்சும் தெரிஞ்சவங்க பெங்களூர்ல இருக்காங்கன்னு தெரிஞ்சா அவிங்கள சொந்த ஊர்ல, திருவிழால, கெடாவெட்டு, காதுகுத்துன்னு வந்தா பாத்துக்கணும். பெங்களூர் ட்ராஃபிக்ல ஒரு இடத்திலருந்து இன்னொரு இடம் போயி வர்றது கண்டம் விட்டு கண்டம் தாண்டுற மாதிரி.

8.   பல பேரு என்னப் போல தூங்கா நகரத்துலருந்து வந்துருப்பாய்ங்க... இங்க இவ்ளோ பெரிய பெங்களூரு நைட்டு 8மணிக்குத் தூங்கிரும், காலேல 6மணிக்குத்தான் எந்திரிக்கும்.

9.   மவனே பத்து மணிக்கு மேல மெஜெசிட்டிக் பஸ் ஸ்டாண்ட்ல மாட்டுன அம்புட்டுத்தான். பஸ்சே கிடைக்காது. கெடச்சாலும் கடைசி பஸ்ஸப் பிடிச்சுப் போறதுக்கு பஸ்ஸுக்கு 300பேர் வீதம் இருப்பாய்ங்க.

10. எங்க ஏரியாக்கு கடைசி பஸ்ஸ விட்டுட்டா தும்கூர் பஸ்ஸப் பிடிச்சு வழில இறங்கணும். அதெல்லாம் பெரிய காரியம். கண்டக்டர் மனசு வைக்கணும்.

11. அடுத்து ஆட்டோகாரய்ங்க. இதயம் பலவீனமானவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் யவரேனும் இருந்தால் ஆட்டோ பிடிக்கும் முன் மனதை திடப் படுத்திக்கொண்டு பேரம் பேச வேண்டும். ராத்திரி 11 மணிக்கு ஆட்டோக்காரய்ங்க கேக்குற விலையப் பாத்தா வீட்டுக்குப் போகத்தோணாது. ஐ‌சி‌சி‌யு.,க்குதான் போகணும். (மீட்டர் போட்டு கூட்டிச் செல்லும் மிகச் சில நல்லவர்களும் உண்டு.)

12. பெங்களூர் பெண்களூர்தான். பார்க்க, ரசிக்க. அவ்வளவே! பராமரிப்பு அதிகம்டோய். நமக்கு சொத்த வித்தாலும் அதுங்கள மேய்க்க முடியாது.

13. அம்மா வச்ச குழம்பு விளங்கலேன்னு சொல்லிட்டு வந்தவன இங்க ஹோட்டல் சாப்பாடெல்லாம், அம்மா விட்ட சாபமா வெப்பன் மாதிரி வந்து தாக்கும்.

14. நீங்க வேடிக்க மட்டுமே பாக்கணும்ன்னு கிளம்பினாலும் உங்க பர்ச வேட்டு வைக்க இங்க பல இடங்கள் இருக்கு.

15. இங்க வாங்குற சாலரி மட்டும் கேட்டுட்டு வாயப் பிளக்க வேண்டாம். செலவையும் சேர்த்து கேட்டுட்டுப் பேசுங்க.

16. ஒரு தரம் வீட்லருந்து அப்பா,அம்மா கிளம்பி வந்துட்டா நீங்க ஊர் சுத்தி காமிக்க பேங்க்ல லோன் அப்ளை பண்ண வேண்டிவரும். நம்மூர்ல சித்திரத் திருவிழா முழுசும் காமிச்சாலும் அம்புட்டு செலவு ஆகாது.

17. காச்சல், தலவலினா பாட்டி வைத்தியமோ, சித்த வைத்தியமோ, நாட்டுக்கட்ட வைத்தியமோ ஏதோ கைவசம் தெரிஞ்சு வச்சுக்கோங்க. நீங்க ஹாஸ்பிடல் போயி செலவழிச்சு வர்ற காசுக்கு ஊருக்குப் போயி நாலு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு திரும்ப வந்துறலாம்.

18. செல் - எப்போதும் கவனி. செல் திருடர்கள். என்னா ப்ரொஃபஷனலிசம்ப்பா. கண்டே புடிக்க முடியாது. நீங்க பெங்களூர்ல எங்க சுத்தினாலும் காஸ்ட்லியோ/சொத்தையோ செல் பேசி கவனம்.
(திங்கக்கிழமை அதிகமா செல்போன் திருட்டு போகும்.எதாச்சும் கொலசாமிக்கு வேண்டுதலான்னு தெரியல.. அன்னிக்கு மட்டும்  செல்போன் அடிச்சிட்டுபோக கும்பலா கட்டுச்சோறு கட்டிட்டு கெளம்பி வருவானுங்க..)

19. இங்க முக்குக்கு முக்கு கோவில் இருக்கோ இல்லையோ வைன் ஷாப் இருக்கு. ரேட் டாஸ்மாக்க விட அதிகம்தான்.

20. இங்க பைக் வாங்குறதுக்கு சைக்கிள் வாங்கிட்டுப் போயிறலாம், ட்ராஃபிக். அப்பிடியே பைக் வாங்கினாலும் நம்ம ஊரு ரிஜிஸ்டிரேசன் வண்டி ஒவ்வொரு சிக்னலுக்கும் ப்ரேக் அடிக்க வேண்டியிருக்கும். மைலேஜோட மணியும் குறையும்.

21. வீடெல்லாம் காலி பண்ணினா நீங்க குடுத்திருந்த அட்வான்ஸ் வரும்ம்.. ஆனா வராது.

22. பக்கத்து வீட்டுக்காரன் செத்தாதான் அப்பிடி ஒருத்தன் இருந்தான்னே நமக்குத் தெரிய வரும்.

23. எதுத்த வீட்டுல கல்யாண விருந்துன்னாலும் கூட கூப்ட மாட்டாய்ங்க.

24. நீங்க கல்யாணமும் பண்ணி உங்க குழந்தைய ஸ்கூல் சேக்கணும்ன்னா. . . ஹய்யோ..ஹய்யோ ஒரே குய்யோ முய்யோதான்.

இதெல்லாம் சாம்பிள்தான். மெயின் பிக்சர் இங்க வந்தாத்தான் தெரியும். வாங்கடி வாங்க. யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருக. பெருநகரமாம் பெங்களூரு அன்புடன் வரவேற்கிறது.

அம்மாதான் ஆடு, மாடு தருதே. முடிஞ்சா நீங்க ஊர்லயே இருந்து மேயிங்க. இல்ல என்னட்டக் குடுங்க நான் வந்து மேக்கிறேன்.
இங்க ஒன்னும் முடியல சாமியோவ்...

கடோசியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லி முடிச்சிக்குறேன்- நாய்க்குத் தெரியாது பேயோட பாடு... பேய்க்கு விளங்காது நாயோட பாடு... அதனதன் கஷ்டம் அதனதனுக்கு.!!

தங்களன்புள்ள,

ஜெகன் ஜீவா @

Tuesday, May 22, 2012

பொறியி(யலி)ல் சிக்கிய மா(ணவ)ன்





 இதை உள்ளிட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நான் முன்னாள் மாணவன் ஆகிவிட்டிருக்கிறேன்-”ஈ.சீ.ஈ 2012 பாஸ்டு அவுட்”. நான்கு வருட பொறியியல் படிப்பின் இறுதியில் எழுதப்படும் இக்கட்டுரையில் “கல்லூரி-கண்ணீர்-நட்பு-புனிதம்-பிரிவு” என்று நான் பிக்காலித்தனமாக எழுதப்போவதாக யாரேனும் எதிர்பார்ப்பீர்களேயானால், இரண்டொரு கிளிசரினை விழுங்கிவிட்டு ஏதாவது ரியாலிட்டி-ஷோவை பார்த்தபடி பிழியப்பிழிய அழுதுகொள்ளுங்கள். நான் அவன் இல்லை. அடுத்தடுத்த பத்திகளில் வரும் நிகழ்வுகள் யாவும் இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்கள் வாழ்விலும் ஏற்பட்டிருக்கலாம். இது ‘ஷேர்-ஆட்டோ’பிக்சன் எனும் வகையின் பாற்பட்டது. உலக அளவில் இம்முறையில் ஒருவர்தான் எழுதுகிறார். அந்த 'ஒருவர்' நான்தான் என்பதைக்கூட, நானே என் வாயால்  சொல்லவேண்டியிருப்பதுதான்  கொடும்  தமிழ்ச்சூழலின் அவலநிலை.

     
இன்றிலிருந்து சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் ‘எலக்ட்ரானிக்ஸே என் உயிர்மூச்சு’ முழக்கமிட்டுக்கொண்டு, நெஞ்சம் நிறைந்த கனவுகளுடன், “வக்காளி!அடிச்சு தொவைச்சிடணும்ல” -என்றவாறுதான் இந்த மாய எதார்த்த உலகிற்குள் நுழைந்தேன்

“இஞ்சினியரிங்” எனப்படும் பொறியியலின் பொறியில் சிக்கிய மாணவன் முதன்முதலில் எதிர்பார்த்து ஏமாறுவது ஆசிரியர்களிடம்தான். கந்துவட்டி கணக்கு எழுதப்படும் ஒரு பிரம்மாண்டமான பேரேடு போன்ற நோட்டை எடுத்துக்கொண்டு முதல்நாள் வகுப்பறை செல்வான் நம் ‘பொ.சி.மா’. அவன் அறியாத ஓர் உண்மை அங்கு உண்டு. அறிவுப் பசியில் நோட்ஸ் எடுக்க ஓடோடி வந்த மாணாக்கர்களை ஏமாற்றி, இருக்கும் ஐந்து பாடங்களையும் கற்பிக்காமல் தவிர்க்க ஐந்நூறு காவாளித்தனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதுதான் அது. அசைன்மெண்ட், செமினார், செல்ஃப்-ஸ்டடி, கேஸ்-ஸ்டடி(இது வேற கேஸ்) என பல்வகை முறைமைகள், எடுத்துச்சென்ற நோட்டை நிரந்தரமான வெள்ளைத்தாள்களாகவே வைத்திருக்கும். அப்படியே பாடம் எடுத்தாலும் அவை யாவும் சப்-டைட்டில் இல்லாத சைனாப்படங்கள் போலத்தான்-“வசனமே புரியாது”

இருந்தும் மனத்தை தேற்றிக்கொண்டு, தானே படித்துக்கொள்ள ஓரிரு தலையணைப் புத்தகங்களை எடுத்து வருவான் ‘பொ.சி.மா’. அதை எழுதிய வெளிநாட்டு நிபுணரின்(Foreign Author) பெயர் படித்தாலே வாய் சுளுக்கிக்கொள்ளும். உள்ளடக்கம் பற்றி சொல்லவே தேவையில்லை. தமிழ் அகராதி இன்றி ஓரணுவும் அசையாது. இந்த லட்சணத்தில் வாரமிரு தேர்வுகளும் இலவச இணைப்பாக ஆய்வகக்கூத்துகளும் வேறு. இவை யாவும் சேர்ந்து நம் பொ.சி.மா-வை அகோரிபாபாவாக ஆக்கியிருக்கும். யாருடைய குரல்வளையைக் கடிக்கலாம் என தேடிக்கொண்டிருக்கும்போதுதான் “லோக்கலாதர்” என்ற மீட்பர் அறிமுகமாவார்.
  
இந்த லோக்கல் ஆதர்(Local Author) என்பவர் இப்படி ‘கல்விமுறையால் கைவிடப்பட்ட’ மாணவர்களை நம்பியே குடிசைத்தொழில் செய்பவர். எப்படிப்பட்ட புத்தகம் ஆயினும் கடின வார்த்தைகளை நீக்கிவிட்டு மிச்சமிருப்பவைகளை பட்லர் இங்கிலீஷில் எழுதிவிட்டால் தீர்ந்தது விஷயம். குரோன் ஹேக்கிங்க்ஸ், குமாரசாமியாக உருமாற்றம் பெற்றுவிடுவார். அதை உருப்போட்டு விடைத்தாளில் வாந்தியெடுத்துவிட வேண்டியதுதான். தேர்ச்சியடைந்து விடலாம். சரி!பாடத்தின் சாரம் பு .ரி .யு .மா? .. மூச். புரிவதற்கும் தேர்வதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை
  
இயல்பிலேயே வீரியமிக்கதோர் அமிலத்தை நீரூற்றி கரைசலாக்குவதுபோல், நம் நாட்டு கல்விமுறையும் அது தரும் ஆயாசமும் மாணவனின் தன்முனைப்பை நீர்த்துப்போகச்செய்கின்றன. தேர்வுகளை நினைத்து நித்தமும் நடுங்கிக்கொண்டிருந்த நம் பொ.சி.மா, நாளடைவில் “மச்சான் நாளைக்கு என்ன சப்ஜெக்டுடா?” என கேட்கும் நிலைக்கு ‘உயர்வான்’. இருக்கவே இருக்கிறார் நம்  குடிசைத்தொழில் குமாரசாமி. ஒருகட்டத்தில் சுய உந்துதல்கள் அனைத்தும் வடிந்து, பணம் கொடுத்துச்சேர்த்த பெற்றோர் ஆசைக்காக மட்டுமே படிப்பை முடிக்கவேண்டியிருக்கும். கல்லூரி தருகின்ற தொடர்ச்சியான அயர்ச்சியாலோ என்னவோ இலக்கியப் பரிச்சயமும் உன்னத சினிமா அறிமுகமும் ஏதுமற்ற ஓர் இளம் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.
  
இதற்கிடையில் நம் பொ.சி.மா-விடம் எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைக்க காதலின் தீபம் ஒன்று ஏற்றப்படும். செந்தமிழ்நாட்டில் ‘பொறியியல் மாணவிகள்’ எனுமோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமும் உண்டு. இன்றைய கல்லூரிகளில், எஸ்.ஏ.சி பட கதாநாயகிகளை விட கொடூரமாக கற்பழிக்கப்படும் வார்த்தை “காதல்” ஆகத்தான் இருக்கும். அதைப்பற்றி அதீத நுட்பம் ஏதுமின்றி எழுதினாலும் அநாயசமாக ஆறாயிரம் பக்கம் தொடும். தமிழகத்தின் அடுத்த மூன்று தலைமுறைகளுக்கும் ஒரே ஒரு ஜெயமோகன் போதுமானவர் என்பதாலும், போட்டியாக ‘குண்டுபுக்கு’ போட்டு அவர் குடி கெடுக்கும் உத்தேசம் எனக்கில்லை என்பதனாலும் இந்த தலைப்பை சாய்ஸில் விட்டுவிடுகிறேன்.
      
இறுதியாண்டுக்கு அடியெடுத்து வைக்கும்போது நம் பொ.சி.மா-வை “கேம்பஸ் இண்டர்வியூ தயாராக்கம்” எனும் அச்சுறுத்தல் தாக்கும். ஒரே வாரத்தில் பிள்ளை பெற்றுக்கொள்ள முயல்வது போல், ஆங்கிலம் கற்றுக்கொள்ள நாளிதழ்களையும், பேரகராதிகளையும் வாசிக்கும்படி பணிப்பர். ஆனால் ஆங்கில நாளிதழ் காட்டும் பல்மொழி நடிகைகளின் பல்வகைப்பட்ட ‘உள்ளாடை’களை அறிந்துகொண்டதுதான் ஒரே பயனாக இருக்கும். தனித்துவத்தை வளர்த்துக்கொள்ளாத நம் பொ.சி.மா, இறுதியாக மாநாட்டுக்கு ஆள்பிடிக்க வரும் மென்பொருள் மந்தை ஒன்றுக்கு வேலை கேட்டுச் செல்வான். அங்கு வீற்றிருக்கும் ‘முன்னாள் பொ.சி.மா’ ஒருவனால் தேர்ந்தெடுக்கப்பட்டும் விடுவான்.
  
இருத்தல் காரணங்களுக்காக மட்டுமே, மென்பொருள் அல்லாத துறையினன் அதில் வேலை செய்வதைப் போன்ற துரதிர்ஷ்டம் எதுவுமில்லை.குளத்தில் எறிந்த கல்லைப் போல், நம் கனவுகளும்  மனத்தின் அடியாழத்தில் சென்று நிசப்தத்தில் மூழ்கிக் கிடக்கும். அது உருவாக்கும் சிற்றலைகளை தலை சாய்ந்த ஒரு வறட்சியான புன்னகையுடன் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. (அடச்சே. . இப்படியெல்லாம் எழுதினால் பிரசுரிக்கமாட்டேன் என்று குணா எச்சரித்திருக்கிறார்.அப்ரோட்டாக நிறுத்திவிடுகிறேன்)

     இவ்வாறாக பொறியியல் படிப்பு முடித்து, ஞானம் ‘பார்த்த’ நித்தியைப் போல்.. மன்னிக்கவும் ஞானம் பெற்ற புத்தனைப் போல் உருமாறியிருக்கும் என் எதிரில் இன்று பவ்யமாக நின்றுகொண்டிருக்கிறான் "இவன்". அடுத்த மாதம் பொறியியல் சேரப்போகிறானாம். மின்னணுவியல்(ஈ.சி.ஈதான்) என்றால் பேரார்வமாம். ஆலோசனை கேட்கிறான். இவனுக்கு வயது குறைந்த அக்கா ஒருத்தியோ, வயதுக்கு வந்த தங்கை ஒருத்தியோ இருக்கலாம் என்ற நப்பாசையிலான என் கூற்று பின்வருமாறு அமைகிறது- “95 பர்சண்ட் எடுத்து கோர் ப்ளேஸ்மெண்ட் ஆகணும். இல்லாட்டி நீ எஞ்சினியரிங் படிக்கறதே வேஸ்ட்டு. பாடத்தை புரிஞ்சு படிக்கணும். எப்பேர்ப்பட்ட சந்தேகமா இருந்தாலும் என்னைக் கேளு.”

பின்குறிப்பு: இந்தக் கண்றாவி.. மன்னிக்கவும். இந்தக் கட்டுரை இந்த அளவிலேயே நிறைவுறுகிறது. என் மேதைமைதனை விதந்தோதியபடி சென்றுகொண்டிருந்த அந்த ‘வருங்கால பொ.சி.மா’ மீது, ”பாவம் யார் பெத்த புள்ளையோ” எனும் மெல்லிய பரிதாபம் என்னுள் விகசித்துக்கொண்டிருந்ததை நான் இங்கு எழுதப்போவதே இல்லை.! 

அளவிலா எரிச்சலுடன்,
வினோத்





Monday, May 21, 2012

மனிதன் மாறிவிட்டான் !

எனது அருமை நண்பர்களே... நண்பிகளே...

சூலமங்கலம் ராவணன் மயில் வாகனன் என்ற நான், தஞ்சை தரணியில் பிறந்து (தவழ்ந்தது சென்னை மாநகரத்தில்-வாழ்ந்தது வடக்கிலும், மேற்கிலும்) இப்போது இறுதியில் முடங்க வந்திருப்பது தமிழகத்தில். அயிலு கட்டை சந்தனமும் நுரை அள்ளி பூச்சொறிகி, அழகான காவிரியாள் அலுங்காமல் ஓடிவரும் எங்கள் கிராமத்தில் முப்போகம் அறுவடை செய்யும் திருமாம்பழ கட்டு என்ற திருப்பெயர் கொண்ட எங்கள் நிலத்தில் நெல்மணியை பயிர் செய்த என் முப்பாட்டன், பாட்டன் எனக்கு விட்டு சென்றதென்னவோ ஆறடி நிலம் மட்டும் தான் . நாக்கை நம்பி வாழ்ந்த அவர்களுக்கு தின்னு கெட்ட குடும்பம் என்றும் ஒரு சிறப்பு பெயர் உண்டு . மேலே சொன்ன அனைத்தும் வெறும் கேள்விஞானமே.

கல்விக்கும் எனக்கும் காத தூரம் என்று எனக்கு புரியவைக்க என் சிறு வயதிலேயே தன் உயிர் ஈந்த தியாகி என் தந்தை.  கூடபிறந்தவர்களின் படிப்பிற்காக இச்சை இருந்தும் படிப்பை துச்சமென நினைத்து பணியில்  அமர்ந்து சிறிதளவே பாடுபட்டேன், பெரிதளவு அதிர்ஷ்டமும், கடுகளவு மூளையும் இருந்ததால், இலை அசையும் காற்றினிலே  நான் கோபுரத்தின் உச்சிக்கு போய்விட்டேன் . பின் என்ன பறந்து பறந்து பணம்தேடி பாவ குளத்தில் நீராடி, 50 வயதிற்குள்ளேயே அனைத்து வசதிகளும் அளவிற்கு அதிகமாய் பெற்று அனுபவித்து இப்போது வெறுத்துப்போய் கிளம்பிய இடத்திற்கே வந்துவிட்டேன்.

இடையிலே திருமணம் என்ற கண்டத்தில் சிக்கிக்கொண்டு ஒரு மகள் ஒரு மகன் என்ற இரண்டு வெடி குண்டுகளுக்கு தந்தையாகி சிவன் கழுத்தில் இருக்கும் பாம்புக்கு எவ்வளவு பாதுகாப்போ அதுபோல் சிவனே என்று இருப்பதே எனக்கும் பாதுகாப்பு என்ற முடிவில் என் இறுதி பயணத்திற்கும் முன் பதிவு செய்துவிட்டு சிறிது  மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன் - என்னை பற்றிய சிதம்பர ரகசியம் இன்று  போட்டுடைக்கபட்டது.

35 ஆண்டு மணவாழ்க்கையில் மனைவியை பிடித்தாலும் (பிடித்தே ஆகவேண்டும் வேறு வழியில்லை) அவள் கைப்பக்குவம் என் நாவினை அடக்கி ஆளவில்லை . யானை தன் தலையில் தானே மண்ணை போட்டுக்கொள்வதுபோல் நானே எனக்கு பிடித்ததை சமைத்து கடந்த பத்து ஆண்டுகளாக உண்டு உயிர் வாழ்ந்து வருகிறேன். நேற்று எனக்கு சனி உச்சம் என்று நினைக்கிறேன் . மாலை உணவு தயார் செய்யாமல் (சோம்பல் அல்ல சில நண்பர்கள் வந்து விட்டதால்) அவர்களுடன் ராஜபவன் என்ற ஹோட்டலிற்கு சென்றோம். பர்சில் பணம் அதிகம் இருந்தாலும் அடிக்கடி அதை தொட்டு பார்த்துகொண்டேன். முதலில் இடியாப்பம் குர்மா சாபிட்டோம். அது பறக்காமல் இருக்க அதன் மேல் சில சிறிய கோப்பைகளை வைத்து அதில் சில பதார்த்தங்களை வைத்து இருந்தனர்.

அடுத்து வெங்காய ஊத்தப்பம் வந்தது. ஊத்தப்பம் என்றால் அது ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில் கதவுகளை போல் தடியாக இருக்கும் என்று நினைப்பு எனக்கு. வந்ததோ வெங்காய சருகு சேலையில் சிறுது வெங்காயத்தை தூவியது போல் இருந்தது. நான் பரிமாறியவரை அழைத்து ஐயா நான் கேட்டது ஊத்தப்பம் நீங்கள் தந்ததோ தோசை என்றேன்.
அதற்கு அவரோ அலட்சியமாக அதுதான் சார் ஊத்தப்பம் என்று பதில் சொன்னார்

நான் விடவில்லை. கரகாட்டக்காரன் கௌண்டமணி பாணியில் ஐயா வெங்காயம் இங்கே இருக்கு , பச்சை மிளகாய் இருக்கு தோசை இருக்கு ஊத்தப்பம் எங்கே என்றேன்.

யோவ் அதுதான்யா ஊத்தப்பம். நீ குடுக்கிற காசிற்கு இவ்வளவு தான் இதற்கு மேல் பேசினால் நமக்கு தான் அவமானம் என்று நினைத்து 1200 / ருபாய் அழுது விட்டு (ஆறு பேருக்கு) வீட்டிற்கு வந்து ஒரு லிட்டர் மாங்கோ மில்க் ஷேக் குடித்து விட்டு தூக்கம் வராமல் ஒரு தூக்கமாத்திரையை விழுங்கிவிட்டு இனி பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை ஹோட்டலிற்கு போவதில்லை என்று முடிவு செய்து இந்த பாடலை எழுதினேன்.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை
ஹோட்டல் மாறவில்லை
இட்லியும் தோசையும்
வடையும் பூரியும்
எதுவும் மாறவில்லை
சைஸை (Size) குறைத்து விட்டான்
ப்ரைஸை (Price) ஏற்றிவிட்டான்
ஹோ ஹோஹோ ஹோ ஹோஹோ

அரிசியை கண்டான்
இட்லியை படைத்தான்
கோதுமை மாவில்
ரொட்டியை சுட்டான்
எதனை கண்டான்
ரவா உப்புமாவை படைத்தான்
ஹோட்டல் மாறவில்லை
சைஸை (Size) குறைத்து விட்டான்
ப்ரைஸை (Price) ஏற்றிவிட்டான்
ஹோ ஹோஹோ ஹோஹோ

பிரியாணி என்பான் அது
கோந்தாய் ஒட்டும்
பரோட்டா என்பான் அது
பட்டுன்னு உடையும்
குலோபு ஜாமுனில்
கொலைவெறி வாசம்
குஸ்கா முழுவதும்
கூவத்தின் நாத்தம்
போதும் போதும் வேண்டவே வேண்டாம்
பொருத்தது போதும் பொங்கி எழு

எழுதியவர் : ராவணன் மயில் வாகனன்
ட்விட்டர் ஐடி : @ravan181

Wednesday, May 16, 2012

வொய் திஸ் கொலவெறி ஜெ.???




டாக்டர் .... மாண்புமிகு.... புரட்சிதலைவி... இதயதெய்வம்... முதல்வர்... அம்மா...

இப்படி தான் அமைச்சர் பெருமக்கள் பேசவேண்டும் என சட்டம் போலும்.. 23ம் புலிகேசி படத்தில் வருவது போல ஒரு பட்டத்தையும் விடாமல் பேசிதான் தங்கள் உரையையே ஆரம்பிக்கிறார்கள்....

அதிமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் இந்த ஆட்சி சாதித்தது என்ன? பார்ப்போம் ...

கடந்த திமுக ஆட்சியில்  மின்வெட்டு, நிலமோசடி, குடும்ப ஆதிக்கம் என பல பிரச்சனைகளால் நொந்து போன மக்கள், வழக்கம் போல சுழற்சி அடிப்படையில் அதிமுகவை அமோக ஆதரவுடன் வெற்றி பெற வைத்தனர். திமுக-வை விட அதிமுக அதிக இலவசங்களை தருவதாக வாக்குறுதி கொடுத்ததும் வெற்றிக்கு பாதையாக அமைந்தது.

ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கம் போல கடந்த ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டன. பல கோடி ரூபாய் செலவில் உருவான புதிய சட்டசபையை விட்டுவிட்டு பழைய சட்டசபையில் வாஸ்து பிரகாரம் குடி பெயர்ந்தார்... சமச்சீர் கல்வி ரத்து என நடந்த குளறுபடிகளை யாராலும்
மறக்க முடியாது. மாணவர்களின் கல்வியுடன் ஒரு மாதமாக விளையாடினார், கடைசியில் நீதிமன்றம் தலையிட்டு குட்டு வைத்தது.

அண்ணா நூலகத்தை மாற்றுகிறேன் என மறுபடியும் தவறான முடிவை எடுத்தார். மீண்டும் நீதிமன்றம் குறுக்கிட்டது... இந்த நூலகம் மாற்றும் விசயத்தில் அனைத்து தரப்பினரும் ஒரு சேர குரல் கொடுத்ததும் முட்டுக்கட்டை போட்டது.

எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் ஈழ ஆதரவாளர்களை கண்டாலே ஒவ்வாது ஜெ.வுக்கு. ஆனால் இந்த தடவை சிறு மாற்றம் தெரிகிறது. நல்லதும் செய்யவில்லை, கெட்டதும் செய்யவில்லை ஈழ பிரச்சனையில். அதே போல் தான் கூடங்குளம் பிரச்சனையிலும்...  மக்கள் நல பணியாளர்களை டிஸ்மிஸ்    செய்தது அனைவரையும் கோபமடைய செய்தாலும், அதனால் அரசுக்கு லாபமே... ஆனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதை முதல்வர் கவனிக்கவில்லை போலும்...

நிலமோசடி வழக்கில் பலர் வேகமாக கைதானாலும், அதே வேகத்தில் வெளியே வருகிறார்கள். இதனால் மக்களுக்கு என்ன லாபம் ???

ஜெ.- சசிகலா பிரிவு, சொத்து குவிப்பு வழக்கிற்காக நடத்தப்பட்ட நாடகமே என பலர் சொன்னாலும், அதனால் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம்
குறைந்திருப்பது மகிழ்ச்சியே.. இவர்களால் தான் அமைச்சரவையில் அடிக்கடி பல மாற்றங்கள் செய்யபட்டன...

இதையெல்லாம் தாண்டி பெரிய இடியாய் அமைந்தது பஸ் டிக்கெட், பால் விலை உயர்வு!! முக்கியமாக நடுத்தர மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கபட்டனர்... இந்த கட்டண உயர்வு மற்ற பொருள்களின் விலை உயர்வுக்கும் காரணமாய் அமைந்தது.




நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு பிரச்சனை உடனே சரிசெய்யப்படும் என வாக்குறுதியுடன் தான் அரியணை ஏறினார் முதல்வர்...ஆனால் ??? 5 முதல் 20 மணி நேரம் வரை மின்வெட்டினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம் ... கரண்டே இல்லாத ஊரில் மின் கட்டண உயர்வு வேறு...

பாராட்டு விழா, இசை வெளியீட்டு விழா, என சினிமா நிகழ்ச்சிகளில் முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை... சினிமா ஜால்ராக்களை தன் பக்கம் அனுமதிக்கவேயில்லை, கடந்த ஆட்சி போல சினிமா ஆதிக்கம் இல்லை.. வரவேற்க்கத்தக்கது.. சினேகா திருமணத்துக்கு கூட போவலைனா பார்த்துக்கோங்களேன்....

சில நல்ல விசயங்கள் செய்திருந்தாலும், அதை மேலோங்கி முதல்வரின்  தவறான முடிவுகளே தெரிகின்றன...

இந்த ஓராண்டு கால ஆட்சியை ஆனந்த விகடன் சினிமா விமர்சனம் போல மார்க் போட்டால், 27 மார்க் தரலாம்பா...

இதுல ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்துக்கு செய்த செலவு 25 கோடியாம்... ம்ம் என்னத்த சொல்ல???

-தலதளபதி

Tuesday, May 15, 2012

ஓடுங்க !! (பதிவு எழுத போகிறேன்)!!


அன்பான கீச்சுலக மக்களே!!

             தலைப்பை பார்த்தால் எதோ எதிர்மறையாக உள்ளதே என என்ன வேண்டாம் கண்மணிகளே!!
ஒரு சென்டிமென்டாக இருக்கட்டுமே என்று இந்தத் தலைப்பை வைத்துள்ளேன்.
உங்களை எல்லாம் பொறுத்தவரை இந்த தலைப்பானது மிகச் சாதாரமாகத் தோன்றக்கூடும். ஆனால் முதல் முறையாக எழுத முடிவெடுத்திருக்கும் எனக்கு இந்த தலைப்பானது மிக பிரம்மிப்பாக தோன்றுவது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை. இந்த பதிவை வாசிப்பவர்களுக்கு நன்றி கூறி தொடர்கிறேன்.


           முதலில் என் வாசிப்பு அனுபவங்களைப் பற்றி சொல்லியாக வேண்டும்.  நான் சிறுவயது முதலே பாட புத்தகத்தை விட மற்ற எல்லா புத்தகங்களையும் (இலக்கிய புத்தகமா என்று கேட்காதீர்கள்) படிக்க ஆரம்பித்தேன்.  ஆனந்த விகடன் முதலான வார நாளிதழ்கள், உள்ளூர் நூலகத்தில் கிடைக்கும் சிறுவருக்கான புத்தகங்கள் படிப்பதில் ஆரம்பித்த என் வாசிப்பு ஒரு கட்டத்தில் விபூதி மடித்தத் துண்டு காகிதங்களில் (எப்பப் பார்த்தாலும் சுண்டல் மடித்த காகிதம்னா போரடிக்காதா?) கூட வாசிக்க தூண்டிக் கொண்டிருக்கும். படிக்க வேறு புத்தகம் கிடைக்காத போது என் தாத்தா வைத்திருந்த "சத்திய சோதனை" யைக் கூட விட்டு வைக்காமல் படித்துப் பார்த்தது.
ஆனால் எழுத வேண்டுமென்ற எண்ணம் துளிக்கூட துளிர்த்ததில்லை என் மனதில். நான் நிஜத்தில் வலைபாயுதே படித்து தான் கீச்சுலகிற்குள் நுழைந்தேன். ஆனால் இந்தளவு என்னைப் பதிவெல்லாம் எழுதத் தூண்டும் இந்த ட்விட்டர் என எதிர் பார்க்கவில்லை. சரி அது உங்கள் தலை விதி. நானென்ன செய்ய ?? 
இது நிச்சயமாக ஒரு பதிவின் முன்னோட்டம் மட்டுமே. அதனால் யாரும் பயப்படாமல் மேற்கொண்டு தொடரவும்.


         எனது அடுத்த பதிவு நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று என் மனம் யோசித்துக்கொண்டிருப்பதால், நாம் அதற்கான வழிகளைப் பட்டியலிட விரும்புகிறேன்.
படைப்புக்கள் வெற்றிபெற பெரும்பாலும் தத்துவம், கவிதை,  நகைச்சுவை  அல்லது சோகம் இழையூடியிருக்க  வேண்டும் என்று உணர்கிறேன். ஆகையினால் அடுத்த பதிவு நிச்சயம் இவைகளின் கலவையாக இருக்கலாம்.




அடுத்த பதிவில் பின்பற்றக் கூடிய விதிகள் பின்வருமாறு:


    1 . அனைத்து ஊர் மக்களின் ஆதரவு பெற விரும்புவதால், எல்லா ஊர்களின் பேச்சு வழக்கையும் கையாளத் திட்டமுள்ளது. ஒன்றும் பிரமாதமில்லை. "ஏனுங்க",  "ஏல" , "இன்னாபா" மற்றும்  "ஏன்ன சொல்லு யா"  என்றால் முறையே கோவை, திருநெல்வேலி, சென்னை  மற்றும் மதுரை பேச்சு வழக்கு எனக் கொள்க (தயை கூர்ந்து).

2 . நான் மிகவும் ரசித்த கவிதை எனக் குறிப்பிட்டு ஒரு கவிதையை சுட்டு (ட்விட்டேர்ல இருந்துதான்) பக்கங்களை நிரப்பலாம். 
எடுத்துக்காட்டு: 
 "ஏய் பல்லக்குத் தூக்கி!!
கொஞ்சம் நிறுத்து...
உட்கார்ந்து உட்கார்ந்து  
கால் வலிக்கிறது!! "
 - கவிதாயினி தாமரை. 
எத்தனை ஆழமான கவிதை இல்லையா?

3 . சமையல் துணுக்குகள் (துணுக்கு என்றால் சரியான விளக்கம் தெரியாது, மெய்யாகவே!)

4 . இளையராஜா இசையமைத்த பாடல் வரிகள்.

5 . நகைச்சுவைத் துணுக்குகள்

6 . வலை பாய்ந்த கீச்சுக்கள்

7. நான் பட்ட அவமானங்கள் (சோக ரசம்)

8 . கடவுள் துதி பாடல்கள் (ஆத்திகர்களை படிக்க வைக்க)

9 . புகைபிடிப்பதால், மது அருந்துவதால் ஏற்படக் கூடிய நோய்கள் ( மிரட்டல்)

10. பொது அறிவு சம்பந்தப்பட்டது (நமக்கு சம்பந்தமில்லாதது)
தலைப்புகளைச் சொல்லும்போதே தலை கிறுகிறுத்துப் போகிறதே?? நீங்க இதையெல்லாம் எப்படிப் படிக்கப் போகிறீர்களோ??
முடித்துக்கொள்கிறேன் !!!


நன்றி,

ரேணுகாரெய்ன் -  


டிஸ்கி:
கண்ணா இது வெறும் ட்ரைலர் தான்!! மெயின் பிக்சர சீக்கரம் ரிலீஸ் பன்றேன். 

மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்!



வாழ்வின் முதன் முதலாய்
நீ எனை அள்ளி அணைத்த கணம்
சுகந்திரம் விரும்பிய தியாகியாய்
உனை தூரவே உதறி எறிந்தேன்.........

கால்கள் தரை தட்டாமல்
நொண்டிக்குதிரையாடிய கணங்கள்
உன்னில் கோபம் கொண்டேன்......

உன் அருகாமை மெளனங்களில்
முத்தமிட்டு உனை நனைத்த வேளையிலே
நான் வயசுக்கு வந்த நாள் அறிந்தேன்.....

முப்பொழுதும் சொப்பனங்கள்
இண்டர்நெட்டில் அப்படங்கள்
கண் மூடி மையல் கொள்ளும்
கதிரவன் மறைந்த நேரம்
காரிருள் கரைபுரண்டோடும்
காரிகை காட்சி தெரியும்வேளை
உன் முத்தங்கள் என்னை யுத்தம் செய்யும்...........



அணைப்புகளில் திமிறினாலும்
ஆர்வங்களில் எகிறினாலும்
காமங்களில் விசிறினாலும்
கந்தர்வ காதலில் கூடுகையில்
உன்னை கன்னி கழித்திருக்கிறேன்........

நெரிசலான பேரூந்து பயணங்களில்
நீயே என கவசகுண்டலமாய்
திண்மையை திரைமறைப்பதில்
கிருஷ்ணனாகி மானம் காக்கிறாய்..........

அடங்கியிருந்த ஆர்ப்பலைகள்
ஆசைகொண்டு ஆர்ப்பரிக்கையில்
அடைமழையில் நீ நனைந்து
நீர்மட்டம் குறைக்கிறாய்..........

வெள்ளைப்பூக்கள் வெண்மை கொண்டு
நீ என்னை அலங்கரிக்கையில் 
மனதின்  கறுப்பான களங்கங்களும்
கழவிப்போய்விடுகிறாய்..........

விட்டுக்கொடுத்து வாழ்தலில் பிடிமானமும்
ஆர்வத்தை அடக்கி ஆளுதலில் நோயின்மையும்
வாழ்க்கையின் தத்துவமே நீயாகி 
மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலே நாறடிக்கும்! 

பொருத்தம் பார்த்து பொருந்திப்போனதும்
பிடித்துப்போனதும் உன்னில் உயர்சாதி
 உன்னில் உயர் சாதி ஜாக்கி!
உந்தன் ஒரே பெயர் ஜட்டி ஜட்டி ஜட்டி!




எழுதியது,

மன்மதகுஞ்சு என்கிற கீர்த்தி ... ---  






Monday, May 14, 2012

அபுதாபி ஆதினம்!!!






             நமது ” ஸ்ரீலஸ்ரீ கட்டதொரையானந்தாவை “ அபுதாபி ஆதினத்தின் 
மடாதிபதியாக
நியமிக்க இந்த சங்கம் முடிவு செய்துள்ளது. 

    அதற்கான வழிமொழி தீர்மானத்தை
நிறைவேற்றுவதற்காக அவரின் தகுதிகள் கீழே தரப்பட்டுள்ளது .


    தங்களது மேலான
கருத்துக்களை தருமாறு சங்கம் கேட்டுக்கொள்கிறது.


மடாதிபதியாவதற்கான தகுதிகள்:




1. பல்வேறு நாடுகளில் பல ஃபிராடுகள் இவரின் நண்பர்களாக
உள்ளார்கள். எனவே ஆதினத்தை அகில உலக அளவிற்கு முன்னேற்றுவார்.


2. நிறைய சித்தர் புத்தகங்களை படித்து சித்து வேலைகள் இவருக்கு அத்துப்படி.
3. ஆங்கில புலமை மற்றும் எதிராளிகளை தன் வசப்படுத்தும் திறமை அதிகம்.




4. சூடு, சொரனை அறவே கிடையாது. எனவே எந்த புகாருக்கும் அசர மாட்டார்.
5. பெண் பக்தர்கள் இவரின் சிறுவயதில் இருந்தே ஏராளம்.


6. எது சொன்னாலும் தலையாட்டும் அன்பு மனைவியை உடையவர்.
7. பிரச்சனைகளை தடுத்து, அடிவாங்கும் அளவுக்கு உடல் தகுதி உடையவர்.


8. போதைவஸ்துகள் உபயோகத்தில் நிபுனர் பட்டம் பெற்றவர்.
9. ஒலைச்சுவடிகளை ஒழித்து சாம்ஸ்ங்க ஸ்மார்ட் போனில் செய்திகளை
பறிமாறிக்கொள்ளும் அளவுக்கு மடத்தை முன்னேற்றுவார்.


10.அபுதாபி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை ஏற்கனவே ஏமாற்றிய அனுபவம்
உடையவர்.. அதனால் மடத்திற்கு எந்த உள்ளூர் பிரச்சனையும் வராது.
இதைப்போன்று இன்னும் பல தகுதிகள் இவருக்கு உண்டு...

எனவே சங்க
உறுப்பினர்கள் உடன் இவருக்கு தங்கள் ஆதரவை அளிக்குமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

அன்புடன்,

 கட்டதொர ...........