குறிப்பு :இளகிய மனமுடையவர்கள் இந்த பதிவில் உள்ள புகை படங்களை காண வேண்டாம்!!!!
பள்ளியிலிருந்து வருகையில் அப்பாவின் வண்டி நிற்கிறதா? என வீட்டு முற்றத்தை கண்கள் மேய்ந்து கொண்டன...
வண்டி நின்றிருந்தால் மனம் செல்வது அவர் கொண்டுவந்திருக்கும் பையின் மீதே.
ஒன்றுமில்லாவிடின் ஏமாற்றமும் இருப்பின் பெருமகிழ்ச்சியும் ஏனோ தானாய் ஒட்டிக்கொண்டன. சில சமயங்களில் ஏமாற்றத்தின் விளைவாய் விழியில் சில நேரம் தூறி ஓய்ந்து விடும் மழை போல நீர்க்கசிவுகளும், அதையொட்டிய சமாதானமும்.
மெதுவாய் சத்தமின்றி முதுகில் இருக்கும் சுமையினை இறக்கவும், அம்மா புத்தகங்களை கொண்டுவருமாறு குரல் கொடுக்கவும், கால்கள் மெதுவாக அவள் திசை தேடி நகரவும் என நிகழ்ச்சி நிரல் நிரம்பிய பருவம் அது .
அம்மாவைக் கண்டதும் புத்தகங்கள் முதலில் இங்கிருந்து அங்கும் பின் பாடங்கள் அங்கிருந்து இங்கும் அழகாய் இடம் மாறின. தேர்வு மதிப்பெண்கள் வரும் சமயங்களில் சில பல அடிகள் இடம் மாறுவதும் மறுக்க முடியாதது. பாடங்கள் முடிகையில் பெரிய முள் பன்னிரெண்டிலும் சிறிய முள் ஆறிலும் நின்றிருக்கும். மெதுவாய் வீட்டின் கதவுகள் மூடப்படும், கொஞ்ச நேரம் விளையாடலாம் என்ற ஆசையும் கூடவே. “ஏன்?” என்ற கேள்விக்கு புரியாத விடை ஒன்றே வாடிக்கையாய் கிடைத்துக் கொண்டிருந்தது பல நாட்களாய்.
பல நாட்கள் பள்ளி விரைவில் முடித்துக் கொள்ளப்படுவதும் வீட்டிற்கு வந்ததும் அம்மா குழியில் பதுங்கிக் கொள்ளச் செய்வதிலும் உள்ள பின்புலங்களை அறிய முடிந்திருக்கவில்லை அச்சிறு அறிவால். ஞாயிறு ஆனதும் குடும்பமாய்க் கோவிலுக்குச் செல்வதும், பின்னர் வீட்டிற்கு வந்ததும் அக்காவுடன் சண்டையிட்டு பின் தாயை அழைத்து நியாயம் கேட்பதும், அப்பாவிடம் அடம்பிடித்து அவருடன் வண்டியில் வயலுக்கு செல்வதும், அறியாமலே பசுமையிடம் காதல் கொள்வதும் என அழகான பல தருணங்கள் சில கசப்புகளை மறைத்தன.
வானிலிருந்து பெரிய சிவப்பு பூக்கள் விழுகின்றன என்று அம்மாவிடம் சொல்ல, சில நிமிடங்களில் அனைவரும் கொஞ்ச உடைகளுடனும் கையில் கிடைத்த சில பொருள்களுடனும் அவ்விடம் நீங்கியது நினைவு , அதுவே அங்கு கழியும் இறுதிக் கணங்கள் என மனம் அறியாமலே. எத்துனை “விடை கொடு எங்கள் நாடே” பாடல்களினாலும் வெளிக்கொணர முடியாத வலியுடனே நகர்ந்திருப்பார்கள் பெரியவர்கள். பின் தூரத்திலே வாழும் உறவினர் வீட்டில் சில நாள் தஞ்சம், அதில் பல நாள் அழுதே கழிந்தன கா’ரணம்’ புரியாமலே.
காண வந்த உறவினர் “எங்களை மறந்துவிடாதே” என்று ஏன் கூறுகிறார்கள் என கேட்டுக்கொண்டே இருக்கையில் அம்மா தயாராகச் சொல்லி ஒரு பெரிய கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லவும் பின்னர் ஓர் இருக்கையில் என்னை இருக்கச் சொல்லி ஒரு பெல்ட்டை போட்டு விடவும், நான் தூங்கவும் சரியாக இருந்தது.
முழிக்கையில் ஒரு புது வீட்டில், அம்மாவும் அப்பாவும் இங்கு தான் இருக்கப் போகிறோம் இனி எனச் சொல்லவும், சில நாட்களில் பள்ளிக்குச் செல்கையில், அதாவது அந்த வருடத்தின் ஐந்தாவது புதிய பள்ளிக்குக் செல்கையில் அனைவரும் புது விதமான தமிழ் கதைத்துக்கொண்டிருக்க ஒன்றும் விளங்கவில்லை,
எல்லாம் புரியத் தொடங்கவும் வருடங்கள் உருளவும் சரியாக இருந்திருக்கிறது. தாய்த் தமிழகம் என்னை வாரி அணைத்துக் கொண்டிருந்தது. அன்று அறியாப் பருவத்தில் எழுந்த பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்த போதும் இன்று எம்மக்கள் பலரது வாழ்க்கையோ முட்கம்பி வேலிகளுக்குள்.
எனது புரிதலுக்கு காரணமாய் இருந்த மின்னஞ்சலில் இருந்த படங்களையும், அவற்றால் மனதில் தோன்றிய கதறல்களையும் உங்களுடன் பகிரவே இந்தப் பதிவு.
சில கொடூரங்களை கொடூரம் என பார்வையில் இருந்து நாம் நீக்கியதால் அதை பயன்படுத்தி அவர்கள் இன்னும் பல ரணங்களை சேர்த்து அரங்கேற்றி விட்டார்கள். இருப்பினும் நீதி தேடும் பயணத்திலாவது அவை பயன்படட்டும்...
உன்னைத் தழுவ முயன்ற போது – நம்மிருவர்
உயிரையும் சேர்த்தே தழுவியது மரணம்
உடலமாயும் அணைக்க கை நீட்டி
மனதை இறுக்குகிறது இப்பிஞ்சு...
அன்னை முகம் பார்த்திருப்பானோ தெரியவில்லை -இப்பாலகன்
அன்னை இவன் முகம் பார்க்கமல் செய்து விட்டார்கள்
மொழியறியா வயதில் மொழிக்காய் தலை
துறந்த இக்குழந்தை செய்த பாவம் தான் என்னவோ?
ஓர் இனம் அழிந்தெரிகையில் – அவ்வெக்கையில்
குளிர் காய்ந்திருக்கிறது மற்றொரு இனம்
மனிதமும் சேர்த்தே எரிந்திருக்கிறது
காட்சிகளைக் காண்கையில்
எரிந்தழுகிறது மனமும் ...
எமனும் அழுதிருப்பான் – இவ்வுயிர்
சிதைவதைக் கண்டு
முளைக்கும் முன் கிள்ளப்பட்டு – உடல்
தளைக்கு முன் கொல்லப் பட்டுள்ளான்..
நான் அறியேன்,
அவன் அறியான்.
எவன் அறிவான்?? - அத்தாயின்
வயிற்றில் இருந்த சிசு என்ன தவறிழைத்தது என்று
இருவரது உடலும் இருக்கிறது
உயிர் தான் இல்லை – பறித்துப் பிரித்து விட்டார்கள்
பள்ளியில் கழிய வேண்டிய தருணங்கள்
குழிகளில் தொலைகின்றன
எங்கள் எதிர்காலத்துடன் சேர்ந்தே
பல நாளாய் நிலவிய இருளை அகற்ற
சிறு ஒளியாய் – ஐ.நா தீர்மானம்
தொலை தூர பேருந்து பயணத்தின்
முதல் நிறுத்தம்
கடக்க வேண்டிய தூரத்திற்காய்
நம்பிக்கை எனும் பொன்னாயுதம்
கொண்டு அமைதிப் போரில் வெல்வோம்!!
KillingFields குறிச்சொல்லில் கீச்சிய போது தோன்றிய எண்ணமே இந்தப் பதிவு. தமிழுணர்வை அதிகப் படுத்தியதில் என்னைத் தொடரும்/ நான் தொடரும் / தொடரா தமிழ் கீச்சர்களின் பங்கு அதிகம். அவர்களுக்கு நன்றி கூறி அந்நியப்படுத்த விரும்பவில்லை, கூறினும் வார்த்தையாகவே மடிந்துவிடும்.
-----வர்ஷன்
ட்விட்டர் ஹாண்டில் ---- @guruparann
No comments:
Post a Comment