பூஜை போட்ட நாளிலிருந்தே என் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறவைத்து காத்திருக்க வைத்த படம். காத்திருந்ததற்கு விழிமேல் பலன் வெள்ளியன்று முதல்காட்சி. பார்த்தேன்..ரசித்தேன்..
கதையை நான் இங்கு சொல்லப்போவதில்லை. களவுக்கும், காவலுக்குமான சடுகுடு ஆட்டம் முதல்பாதி.
உயிர்ப்பலிக்கு எதிராய் உரத்து குரல் எழுப்ப முனைந்திருக்கும் இரண்டாம்பாதி.
இனிவரும் காலங்களில் தமிழ்சினிமாவின் மிக முக்கியமானதொரு பதிவாக இருக்கப்போகிறது அரவான். வசந்தபாலன் & படக்குழுவினரின் ராட்சச உழைப்பிற்கு ஒரு ராயல் சல்யூட்.
இவ்வருட முழுவதும் கிடைக்கப்போகும் பாராட்டுதல்களுக்கு கையையும், வரும் வருடம் முழுவதும் கிடைக்கப்போகும் விருதுகளுக்கு பையையும் தயாராய் வைத்திருங்கள் சாரே.
வசந்தபாலன்- என்னசொல்ல.?
சமகால தமிழ் சினிமாவில் என் ஆதர்ச இயக்குனர் நாற்காலியிலிருந்து பாலாவை இறக்கிவிட்டு அமர்த்தலாய் அதில் அமர்கிறார் இப்படம் மூலம்... குறைந்தபட்சம் பாலாவின் அடுத்தப்படம் வரும் வரைக்குமாவது.
இந்தக்களத்திற்கான இவரின் முனைப்பும், உழைப்பும் பிரம்மிக்க வைக்கிறது.
டைட்டிலில் தொடங்கி நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள், காடுகள், மாடுகள், குதிரைகள், துரத்தல்கள், மோதல்கள் என படர்ந்து விரிந்த பிரமாண்ட கற்பனையை நிஜமாக்கியது வரை ஒவ்வொரு பிரேமிலும் மிரட்டல்.
ஹேட்ஸ் ஆஃப் வசந்தபாலன்.
கடைசியில் ஆதியை சிலையாகிவிட்ட கடவுளாகக் காட்டி டைட்டில் கார்ட் போடுமிடத்தில் அசத்தலான டைரக்டர் டச்.
அதேபோல இரண்டாம்பாதியில் சரித்திர பின்னணியில் ஒரு துப்பறியும் சஸ்பென்ஸ் த்ரில்லரை சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை.
எனக்கு முதல்பாதியை விட இரண்டாம் பாதியே பிடித்திருந்தது.
களவுக்கான சின்னச்சின்ன, நுணுக்கமான டீடெயிலிங் தந்திருப்பதில் சு.வெங்கடேசனின் பங்களிப்பும் அளப்பரியது.
படம் பார்த்தபின்பு காவல் கோட்டம் மீதான காதலும், ஆவலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதப்படிக்கிற நல்லமனசுக்காரவுக யாராச்சும் புக்கு ஓசியில குடுத்தீங்கன்னா எட்டெட்டு ஜென்மத்துக்கும் தேங்க்ஸ் உடையவனா இருப்பேன்..
ஆதி- இனிமேலும் தன்னை "மிருகம்" ஆதி என்றே கூறிக்கொள்ளலாம்.
படம் நெடுகிலும் ஒரு காட்டு மிருகத்தின் உடல்மொழியை அனாசியமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவர் நல்ல இயக்குனர்களின் கையில் மாட்டி இதுபோல இன்னும் ஒன்றிரண்டு படங்களில் பட்டை தீட்டப்பட்டால் தமிழ் சினிமாவிற்கு இன்னொமொரு வைரம் தயார்.
பசுபதி- சும்மாவே இவர் அடித்து ஆடுவார். பவர்-ப்ளே கிடைத்தால் சும்மாவா இருப்பார்.? பின்னியிருக்கிறார் மனுஷன்.
தன்ஷிகா, அர்ச்சனா கவி, ஸ்வேதா மேனன், அஞ்சலி, சின்னராணியாக வருபவர் என படத்தில் அஞ்சு பஞ்சபாண்டவி அழகிகள்.
ஆனால் எனக்குப் பிடித்தது களவாணி திருமுருகன் மனைவியாக வரும் கறுப்புக் காந்தலழகி. தென்மேற்குப் பருவக்காற்றில் நாயகனின் முறைப்பெண்ணாக கலைச்செல்வி கேரக்டரில் வருவரே.. அந்த களையான செல்விதான்.
கரிய பெரிய விழிகளால் ஆயிரம் கதைகள் சொல்கிறாள் இப்பெண்.
இவரையும் தமிழ்சினிமா பயன்படுத்திக்கொண்டால் அருமையான கேரக்டர் ஆர்டிஸ்டாக மிளிர்வார் என அவதானிக்கிறேன்.
அப்புறம் நம்ம அஞ்சலிக்குட்டிக்கு என்னாச்சி.?
அடுத்த நமீதா ஆவதற்கான ஆரம்பகட்ட சாத்தியகூறுகள் தெரிகின்றன. உடம்பை கவனிக்கணும் செல்லம்...
தவிரவும் படத்தில் பீக்-ஹவர் ட்விட்டர் சந்து போல எக்கச்சக்க நட்சத்திர பட்டாளம். ஆனாலும் ஒருவர் கூட தேவையின்றி படத்திலில்லை.
நகைச்சுவை கூட்ட சேர்க்கப்பட்டிருக்கும் சிங்கம்புலி கூட திரைக்கதையின் முக்கிய முடிச்சவிழ்க்க இரண்டு இடங்களில் பயன்பட்டிருக்கிறார்.
சித்தார்த்தின் காமிரா களவுக்காட்சிகளில் பூனை போல் பதுங்கிப் பின்தொடர்ந்தும், சண்டைக் காட்சிகளில் புலிபோல் பாய்ந்து ஆர்பரித்தும் தன் இருப்பை உறுத்தாமல் பதிவு செய்திருக்கிறது.
இசை கார்த்திக்- ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு சரித்தியப் பின்னணியிலான களம் என்பது குருவித்தலை பனங்காயல்ல; பரங்கிக்காய். தன்னாலான மட்டும் சிறப்பாகவே சுமந்திருக்கிறார். வாழ்த்துக்கள்.
தியேட்டரில் அப்ளாஸ் அள்ளிய காட்சிகள்- வீட்டுக்கார கிழவி வெற்றிலை இடிக்கும் டோனிலேயே பசுபதி அண்ட் கோ கஜானாப்பெட்டியை இடித்து பார்ப்பது;
தேவதாசி வெள்ளி அரைஞான்கயிற்றை வைத்து அது யாருடையது என கண்டறியும் ஐடியா. உண்மையிலேயே செம்ம சீன் அது..
படத்தில் எனக்குப் பிடித்த காட்சி- "தெறமும் தாட்டியமும் இருக்கவன் என்கூட வா..தெறம் கெட்டவன் தெசையத்தேடி ஓடிப்போ.." என்றுவிட்டு ஆதி ஆயிரம் எருதுகள் புடைசூழ பசுபதியை மீட்கச்செல்லும் காட்சி.
உண்மையில் அந்தகாட்சிக்கு படு அடாசான கிராஃபிக்ஸ் பல்லை இளித்துக்கொண்டு தெரிந்தாலும் அந்த முழு எபிசோடும் ஹீரோயிசத்தின் உச்சம். ஹீரோயிசம் என்றால் காமெராவை பார்த்து வசனம் பேசுவதுதான் என நினைத்துக்கொண்டு காட்சியமைப்பவர்களும், நடிப்பவர்களும் தினத்துக்கும் தூங்கப்போகும் முன் இந்த காட்சியை பார்த்துவிட்டு தூங்கச்செல்லுதல் அவர்களின் எதிர் காலத்துக்கும், தமிழ் சினிமாவின் எதிர் காலத்துக்கும் நன்மை பயக்கும்.
அப்புறம் பாடல்கள்- இதுபோன்றதொரு கதைக்களத்திற்கும் தேவைப்படும் டூயட்டுகள் தமிழ் சினிமாவை பிடித்திருக்கும் கமர்ஷியல் சாபத்தீடு.
படத்தின் முற்பாதி கொஞ்சம் நீளம்; பிறப்பாதி ரொம்பவே நீளம்- இதற்கு காரணம் பாடல்கள்.
அதிலும் யார் கொலையாளி என்கிற முடிச்சை நோக்கி செல்லும் பின்பாதியில் வரும் இரண்டு டூயட்டுகள் கதையோட்டத்துக்கு வேகத்தடை அல்ல;வேகமலை.
பாரபட்சமே பார்க்காமல் மூன்று பாடல்களை வெட்டி வீசினால் இன்னும் வசீகரிப்பான் அரவான்.
பொதுவாகவே பாடல் மேலாண்மையில் வசந்தபாலன் இன்னும் கற்றுத்தேற வேண்டும் என்கிற எனது கருத்து இப்படத்தில் இன்னமும் உறுதிப்பட்டிருக்கிறது. களவுடா பாட்டுக்கான பிளேஸ்மெண்ட் சொதப்பல். அதனை களவாட செல்லும்போதெல்லாம் தீம் சாங் போல பயன்படுத்தியிருக்க வேண்டும்.
போல ஊரே..ஊரே.. பாட்டுக்கான முழு காட்சியமைப்புக்களும் இன்னொரு மெகா சொதப்பல். இன்னமும் நம் கிராமங்களில் நெல்லை தெய்வமாக கும்பிடுவார்கள். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கும் கதையில் அந்தப்பாடல் முழுக்க நெல்லை காலில் மிதித்தும், கொண்டாட்டத்தில் அள்ளி வீசியும் ஆடிப்பாடுகிறார்கள். அதிலும் நெல் என்பது ஒரு அதிசயமாக கிடைதற்கரிய பொக்கிஷம் எனும் காலகட்டத்தில் இதுபோல ஒருபோதும் எவரும் செய்ய மாட்டார்கள்.. என்னதான் கொண்டாட்டமாக இருந்தபோதிலும்..
இனி சில குறைகள்- படத்தின் இறுதியில் மரணதண்டனைக்கு எதிராக போடப்படும் ஸ்லைட் படத்துடன் துளிகூட ஒட்டாமல் துருத்திக்கொண்டு நிற்கிறது. இயக்குனர் சொல்லவந்த கதைக்கரு உயிர்பலிக்கு எதிரானதெனில், படத்தின் ஆரம்பத்திலிருந்தே அதற்கான காட்சியமைப்புகளை வைத்திருக்க வேண்டும். உயிர்பலி என்கிற கான்செப்டே இரண்டாம்பாதியின் இரண்டாம்பாதியில்தான் வருகிறது.
படத்தில் வருபவர்கள் பேசும் மொழி- படத்தில் வரும் அனைவருமே தற்க்கால தமிழ் பேசுவது பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்கிற ஃபீலை பெருமளவிற்கு குறைக்கிறது. முழுக்க முழுக்க அந்த காலகட்டத்திய மொழியை கையாளவில்லை எனினும் ஓரளவிற்கேனும் அது குறித்து கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் இயக்குனர். அதிலும் தன்ஷிகா'விற்கு அவரே சொந்தக்குரல் டப்பிங் போலிருக்கிறது. ஒட்டவேயில்லை.
ஆதிக்கு பதிலாக வேறு ஒருவரை பலி கொடுத்த பின்னரும், ஊர் மொத்தமும் காலில் விழுந்து மன்னிப்புகேட்ட பின்னரும் அவர்கள் ஆதியை பலிகொடுக்க விடாமல் துரத்திக் கொண்டிருப்பது ஏன்.?
ராஜாவை யாருக்கும் தெரியாமல் அவர் அறையில் சென்று ஆதி சந்திப்பது வரை ஓகே.. அனால் அவரை கட்டி தூக்கிக்கொண்டு வரும்வரை காவலாளிகள் யாருமே பார்க்கவில்லையா.? ஏன் துரத்திக்கொண்டு வரவில்லை.?அதற்கப்புறமும் எதிர் கோஷ்டிதான் ஆதியை துரத்துகிறர்களே ஒழிய ராஜகுடும்பத்தினர் யாரும் அவரை கண்டுகொண்டதாகவே தெரியவில்லையே.?
கிராஃபிக்ஸ் -நாம் என்னதான் தொழில் நுட்ப சங்கதிகளில் ஹாலிவுட்டிற்கு இணையாக முன்னேறி விட்டோம் என மார்தட்டிக் கொண்டாலும் இந்தப்பாதையில் நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய.. படத்தில் ஒருசில கிராஃபிக்ஸ் காட்சிகளே வருகின்றன. அனைத்துமே அப்பட்டமான அமெச்சூர்த்தனம்.
யாரெல்லாம் பார்க்கலாம்.?- நல்லப்படம் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வமுள்ள அனைவரும் பார்க்கலாம்.. குறிப்பா ஒலக சினிமா விமர்சகர்கள் தங்கள் அறிவிஜீவித்தனத்தை மறக்காமல் வீட்டிலேயே மறந்தாற்போல் வைத்துவிட்டு சென்றால் சிறப்பாக ரசிக்கலாம்.
ப்ரியங்களுடன்,
குணா யோகசெல்வன் :-)))
ஆஹா, இந்த விமர்சனம் படிச்சாலே படத்த மறுபடியும் பார்த்த திருப்தி கிடைக்குது. செம்ம விமர்சனம். :-))
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வளவு லென்ன்ன்த்த்த்த்த்தாவா இருக்கூதூ..?
Deleteஆங்க்!இன்னைக்கு 4மணி ஷோ புக் பன்னிருக்கன்!ஹ்ம்ம் பகல் காட்ச்சி புக் பன்னிருக்கலாம்னு தோணுது!சூப்பர் விமரிசணம்!படத்துல பரத் வர்றதா கேள்விபட்டன்!நீங்க அதபத்தி சொல்லல அஞ்சலிய பத்திமட்டும் சொல்லிருக்கீங்க!ஹீ ஹீ ஹீ ஹீ! -@Kosaaksi
ReplyDeleteபரத்தா..? நாலு சீன்ல பொணமா நடிச்சிருக்கான் ;-)))
ReplyDeleteநிறைய இடத்துல புள்ளற்சிடுச்சு மச்சி விமரசனத்தை படிச்சு.. அப்ப படம் பாக்கலாம் ..
ReplyDeleteகண்டிப்பா பாரு மச்சி..
Deleteஒகே மச்சி
Deleteஐ அம் ரசிச்சிங் பாலோவிங் டூ பாயிண்ட்ஸ் செம நக்கல்
ReplyDelete1)
ஹீரோயிசம் என்றால் காமெராவை பார்த்து வசனம் பேசுவதுதான் என நினைத்துக்கொண்டு காட்சியமைப்பவர்களும், நடிப்பவர்களும் தினத்துக்கும் தூங்கப்போகும் முன் இந்த காட்சியை பார்த்துவிட்டு தூங்கச்செல்லுதல் அவர்களின் எதிர் காலத்துக்கும், தமிழ் சினிமாவின் எதிர் காலத்துக்கும் நன்மை பயக்கும்.
2) குறிப்பா ஒலக சினிமா விமர்சகர்கள் தங்கள் அறிவிஜீவித்தனத்தை மறக்காமல் வீட்டிலேயே மறந்தாற்போல் வைத்துவிட்டு சென்றால் சிறப்பாக ரசிக்கலாம்.
ஹி..ஹி.. நன்றீஸ் மாப்பி..
Deleteநீங்க சொல்லிய குறைகள் அனைத்தும் எனக்கு மேலோங்கி தெரிந்ததால் படம் பிடிக்கவில்லை.. உங்க எழுத்துநடை நல்lla இருக்கு.. நிறைய எழுதுங்க குணா
ReplyDeleteநன்றிகள் பிரிட்டோ.. இனிமே நிறைய எழுத முயற்சிக்கறேன்..
Deleteகலக்கல் மச்சி., இன்றே படம் பார்த்து விட்டு உன்னோட ரசனைய நான் மதிப்பிடுகிறேன்
ReplyDelete- @snj_no1
ஓகே மச்சி.. பார்த்துட்டு சொல்லு..
Deleteஎனக்கும் படம் பார்க்க ஆசையாக உள்ளது
ReplyDeleteஇங்கு சி டி இன்னும் வரவில்லை.
ரவிசந்திரன்
படம் அங்க தியேட்டர்ல ரிலீஸ் ஆகலையா அண்ணா..?
Delete>>- நல்லப்படம் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வமுள்ள அனைவரும் பார்க்கலாம்.. குறிப்பா ஒலக சினிமா விமர்சகர்கள் தங்கள் அறிவிஜீவித்தனத்தை மறக்காமல் வீட்டிலேயே மறந்தாற்போல் வைத்துவிட்டு சென்றால் சிறப்பாக ரசிக்கலாம்.
ReplyDeleteசெம செம
வாவ்.. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் இல்லாட்டியும் சாதாரிஷி பட்டம் கிடைச்சிருக்கு.. நன்றிகள் தல :-)))
Deleteபடத்தின் கதையை அப்படியே எழுதிட்டிங்களே, உங்களுக்கு ரொம்ப ஞாபக சக்தி தான் ஜி. இப்படியே நீங்க பார்க்கிற எல்லா படத்துக்கும் எழுதுங்க.வாழ்த்துக்கள் ஜி.
ReplyDeleteஅவ்வ்வ்வ்.. கதையை நான் சொல்லவே இல்லியே..?
Deleteஜுப்பரு மாம்ஸ்....எழுத்து நடை அருமை.. தொடர்ந்து எழுது! :-) -சிவா
ReplyDeleteநன்றி மாப்பி..
Deleteபாட்டு எனக்கு புடிச்சு இருக்கு இத தவிர எல்லாமே சரியா இருக்கு மச்சி :-))
ReplyDelete@snj_no1
பாட்டு எனக்கும் புடிச்சிருந்தது மச்சி.. கேக்கவும், தனி வீடியோ சாங்கா கேக்கவும் நல்லாத்தானிருக்கும்..
Deleteஆனா படத்தோட ஒட்டி வரலைங்கறது என்னோட கருத்து..
பெரிய அப்பாட்டக்கர் விமர்சகர் யாரோ எழுதினாப்புலல இருக்கு ...ஆமா யார் எழுதினது ஹி ஹி ;-))) வாழ்த்துகள் அன்னோவ் கலக்கிட்ட (நான் சொல்லிக்குடுத்ததுன்னு சொல்ல வேணாம்ன்னு சொன்னதை நியாபகப்படுத்திக்கிறேன் இங்க )
ReplyDeleteஅவ்வ்வ்வ்.. எங்க அப்புச்சி சத்தியமா நாந்தேன் எழுதினேன்.. (தங்கச்சி சொல்லிக்குடுத்துதான் இது எழுதனுதுன்னு சத்தியமா சொல்ல மாட்டேன்.. அடிச்சிகூட கேட்டாலும் சொல்ல மாட்டேன்.. போதுமா..?)
Deleteவிமர்சனத்துக்கு கமென்ட் எழுதுனா, படத்துக்கு விமர்சனம் எழுதுற மாதிரி ஆய்டும், அதுனால நான் இங்க சொல்ல நிறைய இருக்கும் போதும் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
ReplyDeleteவிமர்சனம் - படத்தை பார்க்க தூண்டும் விதத்தில் இருக்கிறது, பார்த்துவிட்டு பிடிக்காதவன் கண்டிப்பா இங்க வந்து திட்டுவான்.
தமிழ் சினிமாவின் மிக அரிதான முயற்சி என்ற போதிலும், மிக சிறிந்த முயற்சி என்று கொண்டாட முடியாது என்னளவில்.
விடு மச்சி.. ஒவ்வொரு மன்ஷாளுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் :-)))
Delete///தமிழ் சினிமாவின் மிக அரிதான முயற்சி என்ற போதிலும், மிக சிறிந்த முயற்சி என்று கொண்டாட முடியாது என்னளவில்.///
Deleteமிகச் சிறந்த முயற்சியாக இல்லாவிட்டாலும் மிக அரிதான முயற்சி ஓரளவிற்கு சிறப்பாக வந்திருக்கிறது என்கிற வகையிலேயே இப்படத்தை கொண்டாடத் தோன்றுகிறது எனக்கு..
இத பாத்து கண்ணுல தண்ணி விட்டுண்டேன்
Deleteஎன்னையும் மனுசன மதிச்சு ரெண்டு கமென்ட் போட்டு பதில் சொல்லியிருக்க,அடுத்து மீட் பண்ணும் போது ஒரு டீ வாங்கித் தாரேன்.
யோவ்வ்வ்.. நீ என்னையும் மதிச்சி இங்க வந்து இவ்ளோ லென்த்தா தம் கட்டி எழுதியிருக்க இல்ல.. அப்புறம் இதுகூட பண்ணாட்டி எப்படி.?
Deleteபடத்தை நன்கு அனுபவித்து எழுதப்பட்ட விமர்சனம்.”ஒலகசினிமாவியாதிகள்” போல் வேண்டுமென்றே நொட்டை,நொள்ளை சொல்லாமல் இருந்ததற்கு ஒரு நன்றி.உங்கள் விமர்சனத்துடன் அல்மோஸ்ட் ஒத்துப்போகிறேன்.என்ன..கொஞ்சம் லென்த்தா இருக்கு.கவனிச்சுக்கங்கண்ணே
ReplyDeleteபதிவின் நீளம் பற்றி நானும் உணர்ந்தேன்.. முதல் விமர்சனமாதலால் தவிர்க்க முடியவில்லை..
Deleteபதிவு நீளம் தான்../ பீக் அவர் ட்வீட்டர் போல .. :)) நல்ல சொல்லாடல் ! உங்க விமர்சனம் என்னோட கருத்துகளோட பெரும்பாலும் ஒத்துபோவதாலும், வழக்கமான விமர்சன நடை பெருமளவில் தவிர்க்கப்பட்டிருப்பதாலும் சுவாரஸ்யமாக வாசித்தேன்..
ReplyDeleteநன்றிகள் சகா :-)))
Deletenalla patam
Deleteமச்சி..அரவான் படம் பாக்கனும்னு இதுவரை எந்த விமர்சனமும் படிக்கலை. காண கிடைக்காத்தால இன்னிக்கு உன் விமர்சனம் படிச்சுட்டேன். பாரட்டுக்கள் மச்சி. உன்னோட முதல் விமர்சனமான்னு நம்பவே முடியலை. பட்த்த கவனமா உள்வாங்கிருந்தாதான் இப்டி எழுத முடியும். அருமை. ஒரு நல்ல விமர்சனத்துல எல்லா நல்ல விஷயங்களையும் கொண்டுவரனும், அதே சமயம் சரியில்லாத விஷயங்களையும் கட்டாயம் ஹைலைட் பன்ன்னும். அந்த வகையில உன் விமர்சனம் முழுமையா இருக்கு.
ReplyDeleteகவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்:
நீளம். இதை தவிற்க்க முடியலைன்னா..இடையில ஹீரோயின் ஃபோட்டவ கவர்ச்சியா போடனும். இல்லன்னா பட போஸ்டர் ஒரு நல்ல சாய்ஸ்.
ஒரு சர்க்கிள் மாதிரி இருக்கனும் , அங்க இங்க தொட்டுட்டு..ஆரம்பிச்ச பாயிண்ட சொல்லி ஃபினிஷ் பண்ணனும்.
விமர்சனம் முழுக்க இருக்குற எள்ளல் நல்லாயிருக்கு. அது ஜாஸ்தி ஆகாமலும் பாத்துக்கனும் (முழுக்க கிண்டல் விமர்சனம்னா..அதுவேற)
க்ராபிக்ஸ் ஓட்டய கண்டுபிடிக்கற் மாதிரி, ஃபோட்டொகிராபியும் கவனிச்சு எழுதனும். தேவை பட்டா பட்த்த ரெண்டு முறை பாக்கனும்
இது எல்லாம் கவனிச்சிகிட்டா..நாங்களும்..குணா எப்ப விமர்சனம் எப்பவரும்னு காத்துருந்து படிப்போம்.
நீ செய்வ மச்சி..எனக்கு நம்பிக்கை இருக்கு.
கலைதாகத்துடன், கட்டழகு கட்டதொர - அபுதாபியிலிருந்து
நன்றி மாமு.. அடுத்தமுறை எழுதும்போது நீ சொன்னதையும் கவனத்துல வெச்சிக்கறேன்...
Delete