Thursday, February 28, 2013

வாடிவாசல் -ஒரு வாசிப்பனுபவம்!

சமீப காலமாய்- சரியாகச் சொல்லப்போனால் எனக்கு திருமணம் நிச்சயம் ஆனபின் மனைவியுடன் மொபைலில் கடலை போட ஆரம்பித்ததிலிருந்து புத்தகங்களுக்கும், எனக்குமான பிணைப்புச் சங்கிலியில் எங்கோ ஒரு கண்ணி விடுபட்டது மாதிரியாதொரு கானல்தோற்றம்.  இவ்வருடம் புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் இரண்டு தவணையாய் வீட்டிற்குக் கொண்டுபோய் பதவிசாய் அலமாரியில் அடுக்கியும் வைத்தாயிற்று. இந்த பாழாய் போன படிப்பூக்கம்(?!!) மட்டும் திரும்ப வந்தபாடில்லை. சரி..வராத படிப்பை வா..வா.வென மல்லுக்கட்டினால் மூளைக் காய்ச்சல் வந்துவிடும் அபாயமிருப்பதால் நானும் வரும்போது வரட்டுமென இலவசமாய் விட்டு விட்டேன். 
 
சுண்டல் மடித்த காகிதம் முதற்கொண்டு பேருந்து நிலைய நவீன பொதுக்கழிப்பிடக்கதவு கில்மா தத்துவங்கள் வரை வகைதொகையில்லாமல் படித்துக் திரிந்து கொண்டிருந்த என் போன்றதொரு புத்தகப்பூச்சிக்கு இதைப்போலதொரு நிலைமை வந்தது பெருங்கொடுமை.
 
இம்முறை ஊரிலிருந்து கிளம்புகையில் எதற்கும் இருக்கட்டுமென்று இருப்பதிலேயே தனுஷ்தனமான இரண்டு புத்தகங்களை எடுத்து பையில் வைத்துக் கொண்டேன். அந்த இரண்டு- சி.சு. செல்லப்பா'வின் வாடிவாசல், சுஜாதாவின் நீர்க்குமிழிகள்.
 
உறங்கப் பிடிக்காத ஒரு முன்னிரவில், ஒரு புத்தகத்தை ரேண்டமாக விரித்து ஒன்றிரண்டு பக்கங்கள் படிக்கும்  எனது தொன்றுதொட்ட வழக்கத்தின் படி- வாடிவாசலை படிக்க ஆரம்பித்தவன் பாதியிலிருந்து முழுக்கதையையும் முடித்தபின்..  திரும்ப ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்து முழுக்க முடித்தேன்!


மேற்சொன்ன இரண்டு பத்திகளும் வாடிவாசல் என்கிற குறுநாவலை நான் வாசிக்க நேர்ந்ததற்கான முன்கதை சுருக்கம். இனி ஓவர் டூ வாடிவாசல்...
 

அதிகபட்சம் அறுபது பக்கங்களுடையதொரு குறுநாவலில்- ஒரு ஜல்லிக்கட்டு,  அதனூடாக வெளிப்படும் ஜீவ..மரண போராட்டங்கள், பழிவாங்கல்கள், குழி பறிப்புகள், அந்தஸ்து ஜபர்தஸ்துகள், காளைகள் குறித்த/காளைபிடி வீரர்கள் குறித்த நுட்ப விவரணைகள்.. இவையனைத்தையும் அசலான வட்டார மொழி வார்த்தைகளை வைத்து ஜல்லிக்கட்டு ஆடியிருக்கிறார் சி.சு. செல்லப்பா. நாவல் முழுதும் காளை பிடிப்பதை குறித்த "மாடு அணைதல்" என்கிற வட்டார பிரயோகமே நம்மை மயக்கி, காளை அணையும் காட்சிகளை கண்முன்னே ஓடவிடுகிறது.
 
பொதுவாக சொல்லப்படும்.. மெதுவாக ஆரம்பிக்கும் கதை பின் படிப்படியாக சூடு பிடித்து உச்சத்தை அடைகிறது என்கிற கதையெல்லாம் இக்கதையில் கிடையாது. எடுத்த எடுப்பில் முதல் எழுத்திலிருந்தே கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

கிழக்கத்தி சீமையிலிருந்து மாடணையவரும் பிச்சி, அவன் மச்சினன் மருதன், ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கும் ஒரு உள்ளூர் பெயரிலாக் கிழவனார், ஜமீன்தார், பிச்சியின் இறந்துபோன தகப்பனார் -என நாவலில் மொத்தம் ஐந்தே பிரதான பாத்திரங்கள்தாம். எனினும் பெரும் ஜனத்திரள் குழுமியிருக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்தின் ஓயாத இரைச்சல் நாவலை முடித்து வெகுநேரத்திற்கு பின்னரும் காதுகளில் ஒலித்துக்கொண்டியிருக்கிறது. வெறும் ஐந்து பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு இதை  வாசகனுக்கு உணரவைத்திருக்கும் சி.சு. செல்லப்பாவை சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை.
 
காற்றிலாடும் கிலுகிலுப்பை போல் ஓயாமல் சப்தமிட்டுக்கொண்டேயிருக்கும் பாட்டையாவின்  வார்த்தைகளினூடே வெளிப்படும் பாரம்பரிய பெருமிதங்கள், ஜல்லிக்கட்டு என்பது அம்மக்களின் ரத்தித்திலேயே இருப்பதை, அவர்களின் இயல்பாகவே ஆகிப்போனதை உணர்த்துகிறது.
 
பிச்சிக்கும், ஜமீன்தாருக்கும் ஓரிரு பார்வை பரிமாறல்கள்.. எண்ணிக்கையில் அடங்கக்கூடிய குறைவான வார்த்தைப் பிரயோகங்கள் -இதன்மூலம் மேட்டுக்குடி- தாழ்ந்தகுடி அடிமைத்தனம் மிக நுணுக்கமாக வெளிப்பட்டிருக்கிறது. அனிச்சையாய் முன்திருப்பி எழுதிய வருடத்தைப் பார்த்தேன்- 1959. இன்றளவிலும் இந்த வர்க்க வேறுபாட்டில் பெரிய மாற்றமில்லை என்பது நாம் பெருமைக்கொள்ளத்தக்க விஷயமல்ல.
 
இயல்பிலேயே ஹீரோயிச விரும்பியான நான், நாவல் முழுதும் பிச்சி கதாபாத்திரம் மூலம் வெளிப்படும் நாயகத்தனத்தை மிக கொண்டாட்டமாய் ரசித்தேன். அப்பனின் சத்தியத்தை நிறைவேற்றத் துடிக்கும் வைராக்கியம், அப்பனை கொன்ற மிருகத்தை பழிவாங்கத் துடிக்கும் மிருகவெறி, உள்ளூர்க்கார்களிடம் பிரச்சனை வேண்டாமென தவிர்க்கும் நாசூக்கு, தன் அப்பனையும், மண்ணையும் மற்றோர் புகழ்கையில் வெளிப்படுத்தும் பெருமிதம், தன் வித்தையை இகழ்ந்தவனை அந்த வித்தையாலேயே வெல்லும் கம்பீரம், தன் இரைக்காக கடைசிவரை காத்திருக்கும் தவம், இரையை வேட்டையாடிய பின் வெளிக்காட்டும் பணிவு.. வாவ்.. இந்த பாத்திரப் படைப்பு ஒரு அமர்த்தலான ஹீரோயிச மெட்டீரியல்.

ஜல்லிக்கட்டை வெறுமனேஒரு மாடு துரத்தும் விளையாட்டாய் நினைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் அவசியம் ஒருமுறை இந்நாவலை படித்துப் பார்க்கவேண்டும். ஜல்லிக்கட்டென்பது வெளியிலிருந்து வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர்களுக்குத்தான் விளையாட்டு; களத்தில் இறங்கிவிட்டால் அது உயிர் வாழ்வதற்கானதொரு போராட்டம்- மனிதர்களுக்கும் சரி.. மாடுகளுக்கும் சரி!!
 
பிரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))
 
நாவலுக்கு சம்பந்தமில்லாத பின்கதை சுருக்கம்1- சிலநூற்றாண்டுகளாகத் தடைப்பட்டிருந்த என் வாசிப்பு பழக்கத்தை எனெர்ஜி ட்ரிங்க் கொடுத்து மீண்டும் உற்சாகமாய் தட்டியெழுப்பியிருக்கிறது வாடிவாசல். அவ்வகையில் சி.சு.செல்லப்பா அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்!
 
பி.க.சு2- திடீரென எங்கிருந்து இந்த படிப்பூக்கம் பீறிட்டுக் கிளம்பியது என யோசித்துப் பார்த்தேன்- மொபைல் நெட்பேக் தீர்ந்ததை காரணமாய் சொல்லாதிருக்க மிக விரும்புகிறேன்! ஆனால்?!!

Thursday, February 21, 2013

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்!



காதல் எத்தனையோ வருடங்களாக மனிதனை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கும் தேவதையின் பெயர். காதல்தேவதையின் றக்கைகளை வெட்டி வீழ்த்தாத மானுட நாகரீகங்களே இல்லை எனலாம். ஆயினும் அத்தேவதை ஆண்டாண்டு காலமாக மனிதர்கள் மீது பூச்சொரிந்து ஆசிர்வதிப்பதை நிறுத்தியபாடில்லை.

    என்னதான் இருக்கிறது இந்தக் காதலில்?! என்னதான், காதல் ஹார்மோன்களின் சித்து விளையாட்டு என விஞ்ஞானிகள் படம் போட்டு விளக்கினாலும்- காதல் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டதுதான். பசியில் வாடி வதங்கி இருப்பவனிடத்தில் பசி எந்த அமிலத்தால் உண்டாகிறது எனக்கூறுவதால் பசி தீர்ந்துவிடுமா?
   
     இளமையின் அற்புதம் காதல். முன்பின் தெரியாத ஒரு விழியின் தீட்சண்யத்தில் தன்னையே தொலைத்துவிடும் மேஜிக். காலையில் கண்ணாடியில் அவள் முகமோ அவன் முகம் தெரிவதில் தொடங்கி, முகத்தில் அறையும் காற்றில் அவள் கூந்தல் வாசம் தேடுவது வரை எத்தனையெத்தனை மாற்றங்கள்.

        எவ்வளவுதான் காதலின் அழகியல் குறித்து பேசினாலும், இன்றைய தமிழ்ச்சூழலில் அது மட்டும் சாத்தியமில்லை. தருமபுரி சம்பவத்தை தொடர்ந்து சென்ற காதலர் தினம் வரை காதலையும் ஜாதியையும் மையமிட்டு நிறைய அரசியல் நடந்தேறி வருகிறது. மின் இதழ்களிலும் கூட நிறைய பதிவர்கள், காதலையும் ஜாதியையும் முன்னிறுத்தி நிறைய விவாதங்கள் செய்து வருகிறார்கள். எனவே காதல் குறித்த ஒரு தெளிவான புரிதல் வேண்டி பயணிப்போம்.

  வரலாற்றின் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் காதல் அதில் வாழ்ந்து கொண்டேதானிருக்கும். ஜூலியஸ் சீசர் முதல் ஹிட்லர் வரை காதலிக்காத, காதல் வயப்படாத, காதலால் வசப்படுத்தப்படாத மனிதர்களே இல்லை எனலாம்.  எனவே, காதல் இயல்பானது. இன்னும் சற்று ஆழப்போனால், காதல் காமத்தை போல பழமையான உணர்வல்ல. ஆதி காலத்தில் யாரும் யாரையும் புணரலாம் என்று இருக்கையில் மனிதன் தன் துணையை காப்பாற்றிக்கொள்ள கண்டுபிடித்த ஒரு கில்லாடித்தனமான உத்திதான் திருமணம். அதன் பின் பெண்ணை ஈர்க்க ஆண் விதவிதமாக முயல, அதைக் கண்டு அவள் நகைக்க, காதல் பிறந்தது!

 உலகெங்கும் உள்ள சமூகங்கள் காதலை- திருமணத்திற்கு முன்பான அந்த காலத்தை ரசிக்கவும், போற்றவும் துவங்க.. சில நிலபரப்புகளில், இனக்குழுக்கள் மத்தியில் இருந்த பகை காரணமாக காதல் இனக்குழுக்குள் சுருங்கிப்போனது. இதன் பரிணாம வளர்ச்சிதான் இன்றைய காதல் மீதான நெருக்கடிகள் அதுவும் குறிப்பாக தமிழகத்தில்.

  ஜாதி குறித்த புரிதல் உள்ளவர்கள் கூட காதலால் ஜாதி ஒழியுமா என்று கேட்பதும், காதல் தேவையா எனக்கேட்பதும் விசித்திரமாகவும் வேதனையாகவும் உள்ளது. முதலில் காதல் ஜாதியை ஒழிக்குமா என்று கேட்டால், “இல்லை, ஜாதிக்கு எதிரான அரசியலே அதை ஒழிக்கும்” (வேட்பாளர் தேர்வு தொடங்கி ஜாதி உண்டு).
இது குறித்த எனது முந்தய கட்டுரை http://www.koothaadi.in/2012/12/Casteandlove.html

ஆனால், காதல் தேவையா என கேட்பது, “பசித்தால் சாப்பிடத்தான் வேண்டுமா?” என்பதை போல அபத்தமானது.
எந்த ஒரு பண்பட்ட சமூகமும் தனி மனிதனுக்கான சுதந்திரத்தை மதிக்க வேண்டும் (வழங்க வேண்டாம், அவனிடம் இருப்பதை பறிக்காமல் விட்டால் போதும்)
தனி மனித உரிமைகளில் முக்கியமானது துணை தேர்ந்தெடுத்தல் தான்.

   இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் அறிவு, தேர்ந்து எடுக்கும் திறன் ஆகியவை ஆராயப்படவேண்டியவைதான். அவர்கள் எல்லோருமே சரியாக தேர்ந்தெடுக்கும் நிலையை அடைந்து விட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அதற்கான விவாதம் நம் கல்வி முறையிலிருந்து தொடங்க வேண்டும். படி, பணம் செய், செட்டில் ஆகு என்னும் நம் கல்வி முறையின் சாபம்! இவர்களுக்கு சரியாய் தேர்ந்தெடுக்க தெரியாது என சொல்லாதீர்கள், அது உங்கள் தவறு. உங்கள் பிள்ளைகளுக்கு காதலிக்க கற்றுக்கொடுங்கள், துணை தேர்ந்தெடுக்க கற்றுக்கொடுங்கள். அதை விட்டு விட்டு எக்காரணம் கொண்டும், காதலை எந்த நோக்கில் எதிர்த்தாலும் அது காட்டுமிராண்டித்தனமானது, மனித பண்பாட்டு வளர்ச்சிக்கே எதிரானது!

-காதலுடன்,
ஷான் ஷைலேஷ் @Koothaadi
 

Saturday, February 9, 2013

விஸ்வரூபம்- உண்மையிலேயே கமலின் விஸ்வரூபமா.?



எச்சரிக்கை: இது விஸ்வரூபம் விமர்சனமல்ல. படம் பார்த்தபின் ஒரு கமல் ரசிகனாக என்னுள் எழுந்த எண்ணங்கள்.. வெல்.. கருத்துக்கள் என்று சொன்னாலும் தப்பில்லை.. ஏனா'வுக்கு ஏனா போட்டால் எடுப்பாக இருக்குமென்கிற எதுகைமோனையில் போட்டது என்றும் வைத்துக் கொள்ளலாம். (இந்த இடத்தில் நீங்கள் அனைவரும் கோரஸாக எழுப்பும் கேள்வி எனக்கும் கேட்க்கிறது- யெஸ்ஸ்ஸ்.. இதாங்க என்னோட டக்கு  )


முதலில்.. இப்படம் ஒரு தமிழ்பட ரசிகனாக, ஒரு மசாலாப்பட ரசிகனாக, ஒரு  தமிழ்ப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் புதிய முயற்சிகளின் முதல் ஆதராவாளனாக, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கமல் ரசிகனாக- எவ்வகையிலும் என்னை திருப்திப்படுத்தவில்லை! #SorryKamal

ஹாலிவுட் முதல் மூத்திரச்சந்துவுட் வரை எல்லா வுட்'களிலும்  அடித்துத் துவைத்து சாயம்போன  கமர்சியல் கதைக்கு சர்வதேச தீவிரவாதம், ஆஃப்கன் ஜிஹாதிகள், டெக்னிக்கல் பூச்சுற்றல்கள், பிரமாண்டம் என பற்பல சாயங்களை பூசியிருக்கிறார்கள். அது வானவில்லாய் வரவேண்டியதற்கு பதில் வர்ணக்கடையில் மதயானை புகுந்தாற்போல் களேபர கலர் கலவையாய் கொட்டிக்கிடக்கிறது படம்நெடுக..

இப்படம் மூலம் ஆஸ்கர் கதவை மீண்டுமொருமுறை முட்டிப்பார்ப்பதுதான் கமலின் நோக்கமெனில் இதனை நேரடியாக ஆங்கிலத்தில்..அமெரிக்காவில் வெளியிட்டுருக்கலாம். இதில் வெளிப்பட்டிருக்கும் அமெரிக்க பக்கசார்பு காட்சியமைப்புகளுக்கு ஒன்றிரண்டு ஆஸ்கர்களும் கிடைத்திருக்கக்கூடும். அவருக்கும் இந்திய திரைக்கடலில் நீச்சலடித்து முந்தி.. பின் நூற்றுக்கணக்கான  வெளிநாட்டுப்படங்களுடன் ஒரேயொரு விருதுக்காக ஓடிப்பிடிக்கும் விளையாட்டாய் இல்லாமல்,  நின்று நிதானமாக பல்வேறுபட்ட  பிரிவுகளிலும் பரிந்துரைத்திருக்க இலகுவாயிருந்திருக்கும். அவர்கள் பார்த்த லட்சத்தி சொச்ச தேசபக்தி ஆக்ஷன்-கமர்சியல் மசாலாவுடன்
இதுவும் ஒரு எச்சமாய் சேர்ந்திருக்கும் என்பது வேறு விஷயம்.

மாறாக கமலின்  நோக்கம் ஆஃப்கன் ஜிஹாதிகளின் வாழ்வியலை, அவர்கள் உருவாகும் விதத்தை, அந்த மக்களின் வலியை திரையில் பதிவு செய்வது எனில்- கோட்டானு கோடி மன்னிப்புக்கள் ஏசப்பா. ஓஓ..இங்க அல்லா வரணும்ல? சரி..அல்லாப்பா.  ஓங்கியொலிக்கும் அமெரிக்க ஆதரவு ஜால்ராவில் கமலின் அத்தனை மெல்லிசை மெனக்கெடல்களும் அமுங்கி விடுகின்றன.

மேற்சொன்ன இரண்டும் இல்லாமல்- ஹாலிவுட் டெக்னிக்கல் சங்கதிகளை கடைபரப்பி எங்களுக்கும் பிரமாண்டமாய் மிரட்டவரும் என மார்த்தட்டுவதாய் இருப்பின் அந்த முயற்சியில் கமல் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அப்படியிருக்க வாய்ப்பில்லை என்றே நம்புவோம்.


நிற்க- இதுவரை எழுதியதை  படித்துப் பார்க்கும்போது கமல் மீது எதற்கிந்த எக்ஸ்ட்ரா-மைல் காட்டம் என எனக்கே தோன்றுகிறது; ஆனால் சுமார் இருபதாண்டுகால கமல் ரசிகனாய் சற்று யோசித்துப் பார்க்கையில்- அவரின் மீதான உரிமையுள்ள கோபத்தின் வெளிப்பாடே இவ்வார்த்தைகள். முதலின் இதுபோன்ற ஹை-டெக் திரைமசாலாவை அரைக்க கமல் எதற்கு? கொஞ்சமே கொஞ்சம் திரைமொழி தெரிந்த டெக்னிகல் அறிவாளர்கள் போதும். 
என் இனிய கமலஹாசா.. நாங்கள் உன்னிடம் எதிர்பார்ப்பது அன்பே சிவத்தையும், ஹே ராமையும், தேவர் மகனையும், மகாநதியையும். மாறாக- விஸ்வரூபம், தசாவதாரம், மன்மதன் அம்பு போன்ற கமர்ஷியல் குப்பைகளை அல்ல.
தமிழ் சினிமாவுக்கும்- ஆஸ்கரை எட்ட எந்திரன், தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற சிங்கப் பாதையை விட வழக்கு எண், ஆரண்ய காண்டம் போன்ற பூப்பாதையே உகந்ததென நான் நினைக்கிறேன்.

58 வயதான கமல், இன்னும் தன்னுடைய கேரியரில் முதன்மை நாயகனாக அதிகப்பட்சம் பத்து படங்கள் தரலாம். அந்த பத்தில் நாங்கள் இருக்க வேண்டுமென விரும்புவது மருதநாயகம், மர்மயோகி போன்ற படைப்புக்களைத்தான்.

மற்றபடிக்கு கமலின் டெக்னிக்கல், மேக்கப் மெனக்கெடல்களைப் பற்றி புதிதாக சிலாகிப்பதற்கு ஒன்றுமில்லை. இதை அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் காலத்திலிருந்தே பார்த்து வருகிறோம். டெக்னிகல் அறிவு, மேக்கப் சங்கதிகள் போன்றவற்றில் விஸ்வரூபமெடுக்கும் கமலை விட இயக்குனராய், திரைக்கதையாளனாய் விஸ்வரூபமெடுக்கும் கமலைத்தான் மிக விரும்புகிறேன். இப்போதும் விஸ்வரூபத்தை தனித்தனி காட்சிகளாக பார்க்கும் போது- சின்னச்சின்ன நுணுக்கங்களில் வெளிப்படும் கமலின் புத்திசாலித்தனம் ஆச்சர்யம்தான்; அதற்கான ராக்ஷஸ உழைப்பு பிரமிப்புதான்; வசனங்களில் வெளிப்படும் இன்டலெக்சுவல்தனம் புருவ உயர்த்தல்தான்!!   இவையனைத்தும் திரைக்கதையில் ஒன்று சேர்கையில் சுவாராசியத்துக்கான  மையஇழை அறுபட்டு அவ்வபோது வாயையும் உயர்த்த வைக்கிறது- கொட்டாவிக்காக..

படத்தில் பெரிதாக தூக்கிவைத்து கொண்டாடப்படும் ஆஃப்கன் காட்சியமைப்புகள் எனக்கு ஆயாச உணர்வையே தந்தன. க்ளைமாக்சிலும் முழுமையில்லை. ஹாலிவுட் ஆக்ஷன்-மசாலாப் படங்களில், இதுபோல ஆரம்பம் சுவாரசியமாய் அமைந்து.. நடுவில் கொட்டாவியை வரவழைத்தாலும்  இறுதியில் ஒரு பிரமாதமான ஆக்ஷன் ப்ளாக்கோ, விசிலடிக்க வைக்கும் கிராபிக்ஸ்  உத்திகளையோ வைத்து ஒட்டுப்போட்டு
ஒருவாறாக ஒட்டுமொத்த படத்தையுமே சமன்படுத்தி விடுவார்கள். ரசிகனும் கொடுத்த காசு க்ளைமாக்ஸ்'ஸிற்கே சரியாப்போச்சி என்கிற திருப்தியுடன் தியேட்டரை  விட்டு வெளியே வருவான். விஸ்வரூபத்தில் இதுபோன்றதொரு உணர்வும் மிஸ்ஸிங். ஏதோ ஐந்து மணிநேர படத்தை மூன்று மணிநேரத்திலேயே நிறுத்தி, "போய்ட்டு வாங்க சாமிகளா.. மீதி அடுத்த பாகத்தில்.." என்கிறார்கள். காத்திருக்கிறேன்!!

இப்படைப்பை புரிந்துகொள்ள முடியாதவர்கள்தான் பிடிக்கவில்லை எனப் பிதற்றுகிறார்கள் என்கிற கருத்தையும் ஆங்காங்கே காண்கிறேன்! புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு இது ஒன்றும் பின்நவீனத்திய.. கிறிஸ்டோபர் நோலனிய.. நான்-லீனியரிய படம் கிடையாது. சாதாரண ஹை-டெக் கமர்ஷியல் மசாலா.அவ்வளவே!!

-இவ்வளவுக்குப் பிறகும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்காய் காத்திருக்கும் கடைக்கோடி கமல் ரசிகர்களில் ஒருவன் ,
குணா யோகச்செல்வன் :-)))

 
டிஸ்க்கி-  ஆரம்பத்திலிருந்து விஸ்வரூபத்திற்கு கரைச்சல் கொடுத்து
 தமிழ்சினிமாவை மீட்பிக்க வந்த அனாத ரட்சக ஆபத்பாந்தவ தியேட்டர் அதிபர்களுக்கும், தூங்கும்போதும் கூட சமூக அக்கறை மேலோங்கியபடி தூங்கும் 24 அமைப்புக்களுக்கும்,
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை காப்பதற்கென்றே பிறவி எடுத்திருக்கும் சமூகநீதி வீராங்கனை புரட்சித்தலைவி இதயதெய்வம் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர். அம்மா அவர்களுக்கும் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுகுடல், பெருங்குடல் இன்னமும் உடலிலுள்ள அத்தனை உறுப்புகளும் கனிந்த நன்றிகள்!
இவர்களின் மேலான எதிர்ப்பாதரவு இல்லாமல் இப்படம் சாதாரணமாக வெளியிடப்பட்டிருந்தால் போட்டகாசு பெயர்ந்திருக்காது.



Wednesday, February 6, 2013

இடஒதுக்கீடு- தேய்க்கப்படாமலிருக்கும் அற்புதவிளக்கு!!

இடஒதுக்கீடு குறித்தான என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களும், அதற்கான தீர்வுகளாக நான் கருதும் விஷயங்களையும் பற்றித்தான் இந்த பதிவு .

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இட ஒதுக்கீடு எனக்கெல்லாம்
இல்லையேங்குற மனவருத்தம் ரொம்ப இருந்தது. என் சில நெருங்கிய தோழிகளுக்கு மட்டும் சில சலுகைகள் கிடைக்குதே.. நமக்கு எதுவுமே இல்லையே.. நாம என்ன தப்பு பண்னோம்? ன்னு ரொம்பவே அடிக்கடி நினைப்பு வரும். ஆனா வெளில யார்ட்டயும் பெருசா சொல்லி அலட்டிக்கிட்டதில்லை.
கல்லூரிக்கு போனபோதும் இதுபோலத்தான். ஸ்காலர்ஷிப் கேட்கும்போது நமக்கில்லையேன்னு ஒரு வருத்தம் இருந்தது.

ஓரிரு வருடங்களில் நட்புகளிடம் கேட்டு கேட்டு நாவல்கள் மட்டும்
படிக்க ஆரம்பிச்சேன். இரண்டு வருடம் முழு நேரமும் நாவல்கள் படிக்கிற வேலை மட்டும் தான் .இதில்(நாவல்கள் வாசிப்பில்) ஒன்னும் பெருசா சமூக
விழிப்புணர்வெல்லாம் ஏற்படல... கொஞ்சம் வரலாற்றுச்  செய்திகளும் மு.வ
எழுத்தின் மூலம் பொதுவா வாழ்க்கையில் நடக்குற விஷயங்களை கூர்ந்து
கவனிக்கும் பழக்கமும் ஏற்பட்டது.

நல்லா படிக்கிறேனோ இல்லையோ வகுப்பில் ஆசிரியர்கள் கிட்ட துருவித்துருவி கேள்வி கேட்டு தெரிஞ்சிக்கிற பழக்கம் இருந்தது. தெரியாத பல விஷயங்களை நான் அறிவாளிங்கன்னு நினைக்கிறவங்க கிட்ட கூச்சப்படாம கேட்டு தெரிஞ்சிக்கிற ஒரே ஒரு நல்ல பழக்கம் இருந்தது.. இன்னமும் இருக்கு. . 
அப்படி தெரிந்த நண்பர்ட்ட பின்னொரு நாளில், "இடஒதுக்கீடு மூலம் எனக்கெல்லாம் எதுவும் கிடைக்கவே இல்லை. அவுங்க மட்டும் என்ன ஒசத்தியா..திறமைக்கு எந்த அங்கிகாரமும் இல்லையா?"ன்னு கேட்டப்புறம் நண்பர் பல வருடங்களா நடந்துட்டு வந்த தீண்டாமை கொடுமைகளைப் பற்றி சொன்னார். கொஞ்சம் புரிந்துக்கொள்ளும் திறன் (அட நெசமாத்தான் நம்புங்க) இருந்ததால் பெருசா அவர் விளக்கம் சொல்லாமலே இருக்குற நிலைமை புரிஞ்சது. 
அவர் சொன்னதும் எனக்கு என்ன தோணிச்சுன்னா, இந்த மாதிரி வரலாற்று நிகழ்வுகளையும், சமூக பிரச்சனைகளையும் பள்ளிகளும், கல்லூரிகளும் சரியா மாணவர்களுக்கு கொண்டு போய் சேர்க்குதான்னுதான். 
இப்படி புரியாம வளரும் இளைஞர்கள் தாம் இன்னமும் சாதி, மத பேதத்தை
பெருசா நம்பிட்டு சமூகத்துக்கு தொல்லையா இருக்காங்க.
எனக்குத் தெரிந்த பலரும் இப்பவும் அடிக்கடி சிலாகித்து பேசுற இரண்டு
விஷயங்கள்- ஒன்னு நல்லா படிக்கிறவனுக்கும்,திறமைக்கும் முக்கியத்துவம்
கொடுக்கனும். இரண்டு இஸ்லாமியர்கள் நாடு இதுவா? அவங்களுக்கு தான்
பாகிஸ்தான் தனியா கொடுத்தாச்சேன்னு சிறுபிள்ளைத்தனமா பேசுறாங்க.
அதுவும் வயதாவனர்களே இப்படி பேசும்போது எதிர்த்து எதுவுமே பேச முடியறதில்லை.

திறமை- அது வானத்துல இருந்து தானா குதிச்சி வருமா ?? ஒன்னு பரம்பரைப்
பரம்பரையா வரும். இல்லாட்டி திறமை வளர்த்துக்குற சூழல் ,வசதி ,நேரம்
இருந்தா வளர்த்துக்கலாம் .இப்போ ஒடுக்கப்பட்ட மக்கள் சூழ்நிலையை பற்றி
யோசிக்கலாம். பலநூறு வருஷமா மூணு வேளை சாப்பாட்டுக்கே போராடிட்டு
இருந்தவங்க (அப்படி போராடத் தள்ளப்பட்டவங்க ) உடலும், அவங்க மரபணுவும் எப்படி இருக்கும்?ஆரோக்கியமான மரபணு இருக்குமா?
(நான் ஒன்னும் ஜெனிட்டிக் இஞ்சினியர் இல்லை எனக்கே தோணுச்சு அவ்வ்வ்வ்)  இப்படி குறைந்தபட்ச உணவு கூட கிடைக்காமல் இருந்த மக்களுடைய சந்ததிகளுக்கு திறமை இயற்கையிலேயே
அமையுமா.? இல்லை பாலும்..தேனும்,நெய்யும்.. காய்கனிகளையும் சாப்பிட்டு இருந்த மக்களுடைய சந்ததிகள் திறமையா இருப்பாங்களா??

எல்லாத்துக்கும் மேல அப்பா அம்மா மற்றும் பரம்பரை பரம்பரையா படிப்பறிவு
உள்ளவர்கள் எப்படியோ தன் பிள்ளைகளுக்கு ஒரு வழி காட்டிக்கொடுத்துட்றாங்க. ஆனா ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன தெரியும்.? அவன் எப்படி தன் பிள்ளைக்கு படிக்க சொல்லி கொடுப்பான்? இல்ல ஒரு நல்ல வழியை காட்டிக் கொடுப்பான்?
வறுமையும் பசியையும் பற்றி மட்டுமே கவலைப்படவே 24 மணிநேரம் அவர்களுக்கு போதுமானதாய் இருந்திருக்காது. 
இதுல பெண்களுடைய (ஹிஹிஹி எப்படி பெண் தலைப்புக்கு வந்தோம்ல) நிலை எப்படி இருக்கும்ன்னு யோசிக்கவே முடியல. படித்த மேல் தட்டு மக்கள் வீட்டு பெண்களுக்கே முழு சுதந்திரம் இன்னமும் எட்டாக்கனிதான்.
இதுல பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டா உடனே ஒரு கும்பல்
திறமைக்கே மதிப்பு கொடுக்கனும்ன்னும் பெண்கள் இட ஒதுக்கீட்டின் மூலம்
உயர்சாதி பெண்கள் மட்டுமே சலுகைகள் அனுபவிப்பாங்கன்னும்
சொல்றாங்க. என்னளவில் நம்ம நாட்டைப் பொருத்தவரை எல்லா பெண்களும் ஒடுக்கப்பட்டவர்கள்தான். (இதுக்கு எவ்ளோ பேர் முட்டைத் தக்காளியோட வருவாங்களோ ஏசப்பா) அப்படியே இதை ஒழுங்கு படுத்தனும்ன்னா இதுலயும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு தனியா இடஒதுக்கீடு கொடுக்கட்டுமே.
சரி இப்படி சக நண்பர்களே குருட்டுத்தனமா இட ஒதுக்கீடு தேவை இல்லைன்னு சொல்லும்போது எப்படி சமூகத்துல இடஒதுக்கீடு மூலம் பயனடைந்த மக்கள் வெளில சொல்லிக்குவாங்க.? இல்லை வெளியில் சொன்னாலும் ஏளனமா, "ரிசர்வேஷன்ல வந்தவனா.. அதான் சீக்கிரம் சீட்டு/வேலை கிடச்சிருச்சு"ன்னு பேசுவாங்க. இவங்கள்ல
எவ்வளவு பேர் வாழ்க்கை பூரா தான் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன்
என்பதை மறைச்சிட்டு வாழறாங்க???
சக ஜனங்களுக்குஇட ஒதுக்கீட்டின் அவசியம் புரியாதவரை என்னதான்
படித்து வசதி ஏற்பட்டாலும் ஏளனபார்வை இவர்கள் மீதிருந்து அகலாது.
இடஒதுக்கீட்டின் அவசியம் குறிந்து ஏன் பெருசா பள்ளி பாடத்துல சேர்க்காம
இருக்காங்கன்னு புரியவே இல்லை. தீண்டாமை பாவம் தவறுன்னு சொன்னா
போதுமா? தீண்டாமை தப்புன்னு தெரிந்த எவ்வளவு பேருக்கு இடஒதுக்கீடு எதுக்கு ஏற்படுத்தினாங்க.. அதற்கான அவசியம் என்னன்னு தெரியும்?
இப்பவே இட ஒதுக்கீட்டின் அவசியம் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படலைன்னா இன்னமும் குழப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும். ஏன் ஒரு கட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வெறுப்பு கூட ஏற்ப்பட வாய்ப்புண்டு . இது சென்சிடிவ் டாப்பிக் அப்படிங்கறதால இதன் அவசியம் தெரிந்தவர்கள் கூட அவ்வளவா இத பத்தி பேசுறதில்லை. இதை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து தீவிரமா அரசு பரிசீலிக்கனும்.

அடுத்து இஸ்லாமிய நண்பர்கள் பற்றி சொல்லப்படும் விஷயங்கள்-
அதாவது அவங்க நாடு இதுவான்னு கேக்குறது. அப்போ நேபால் கூடத்தான் ஹிந்துதத்துவ நாடு . ஹிந்துக்கள் எல்லாம் அங்க போக வேண்டியதுதானேன்னு சொல்ல முடியுமா?
இந்தியா ஓர் மதச்சார்பின்மையான நாடு என்ற ஒரு சின்ன விஷயம் கூட தெரியாம எவ்வளவு மக்கள் இருக்காங்க?
இப்படிப்பட்ட சமூக பிரச்சனைகளும் வரலாற்று நிகழ்வுகளும் தெரியாம
கோபப்படுற மக்களால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுது? இவங்களை மாற்ற
முடியும்னெல்லாம் துளி கூட எனக்கு நம்பிக்கை இல்லை .இனி வரும்
தலைமுறையினராவது இப்படி வளரக்கூடாதுன்னு தான் தோணுது. பள்ளிகளும், கல்லூரிகளும், பெற்றோரும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும்  நினைத்தால் கொஞ்சம் சீக்கிரம் சாதிக்கலாம்.
-இயலாமையுடன் சோனியா  @rajakumaari