எச்சரிக்கை: இது விஸ்வரூபம் விமர்சனமல்ல. படம்
பார்த்தபின் ஒரு கமல் ரசிகனாக என்னுள் எழுந்த
எண்ணங்கள்.. வெல்.. கருத்துக்கள் என்று சொன்னாலும் தப்பில்லை.. ஏனா'வுக்கு
ஏனா போட்டால் எடுப்பாக இருக்குமென்கிற எதுகைமோனையில் போட்டது என்றும்
வைத்துக் கொள்ளலாம். (இந்த இடத்தில் நீங்கள் அனைவரும் கோரஸாக எழுப்பும் கேள்வி எனக்கும் கேட்க்கிறது- யெஸ்ஸ்ஸ்.. இதாங்க என்னோட டக்கு )
முதலில்.. இப்படம் ஒரு தமிழ்பட ரசிகனாக, ஒரு மசாலாப்பட ரசிகனாக, ஒரு தமிழ்ப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் புதிய முயற்சிகளின் முதல் ஆதராவாளனாக, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கமல் ரசிகனாக- எவ்வகையிலும் என்னை திருப்திப்படுத்தவில்லை! #SorryKamal
ஹாலிவுட் முதல் மூத்திரச்சந்துவுட் வரை எல்லா வுட்'களிலும் அடித்துத் துவைத்து சாயம்போன கமர்சியல் கதைக்கு சர்வதேச தீவிரவாதம், ஆஃப்கன் ஜிஹாதிகள், டெக்னிக்கல் பூச்சுற்றல்கள், பிரமாண்டம் என பற்பல சாயங்களை பூசியிருக்கிறார்கள். அது வானவில்லாய் வரவேண்டியதற்கு பதில் வர்ணக்கடையில் மதயானை புகுந்தாற்போல் களேபர கலர் கலவையாய் கொட்டிக்கிடக்கிறது படம்நெடுக..
இப்படம் மூலம் ஆஸ்கர் கதவை மீண்டுமொருமுறை முட்டிப்பார்ப்பதுதான் கமலின் நோக்கமெனில் இதனை நேரடியாக ஆங்கிலத்தில்..அமெரிக்காவில் வெளியிட்டுருக்கலாம். இதில் வெளிப்பட்டிருக்கும் அமெரிக்க பக்கசார்பு காட்சியமைப்புகளுக்கு ஒன்றிரண்டு ஆஸ்கர்களும் கிடைத்திருக்கக்கூடும். அவருக்கும் இந்திய திரைக்கடலில் நீச்சலடித்து முந்தி.. பின் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப்படங்களுடன் ஒரேயொரு விருதுக்காக ஓடிப்பிடிக்கும் விளையாட்டாய் இல்லாமல், நின்று நிதானமாக பல்வேறுபட்ட பிரிவுகளிலும் பரிந்துரைத்திருக்க இலகுவாயிருந்திருக்கும். அவர்கள் பார்த்த லட்சத்தி சொச்ச தேசபக்தி ஆக்ஷன்-கமர்சியல் மசாலாவுடன்
இதுவும் ஒரு எச்சமாய் சேர்ந்திருக்கும் என்பது வேறு விஷயம்.
மாறாக கமலின் நோக்கம் ஆஃப்கன் ஜிஹாதிகளின் வாழ்வியலை, அவர்கள் உருவாகும் விதத்தை, அந்த மக்களின் வலியை திரையில் பதிவு செய்வது எனில்- கோட்டானு கோடி மன்னிப்புக்கள் ஏசப்பா. ஓஓ..இங்க அல்லா வரணும்ல? சரி..அல்லாப்பா. ஓங்கியொலிக்கும் அமெரிக்க ஆதரவு ஜால்ராவில் கமலின் அத்தனை மெல்லிசை மெனக்கெடல்களும் அமுங்கி விடுகின்றன.
மேற்சொன்ன இரண்டும் இல்லாமல்- ஹாலிவுட் டெக்னிக்கல் சங்கதிகளை கடைபரப்பி எங்களுக்கும் பிரமாண்டமாய் மிரட்டவரும் என மார்த்தட்டுவதாய் இருப்பின் அந்த முயற்சியில் கமல் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அப்படியிருக்க வாய்ப்பில்லை என்றே நம்புவோம்.
நிற்க- இதுவரை எழுதியதை படித்துப் பார்க்கும்போது கமல் மீது எதற்கிந்த எக்ஸ்ட்ரா-மைல் காட்டம் என எனக்கே தோன்றுகிறது; ஆனால் சுமார் இருபதாண்டுகால கமல் ரசிகனாய் சற்று யோசித்துப் பார்க்கையில்- அவரின் மீதான உரிமையுள்ள கோபத்தின் வெளிப்பாடே இவ்வார்த்தைகள். முதலின் இதுபோன்ற ஹை-டெக் திரைமசாலாவை அரைக்க கமல் எதற்கு? கொஞ்சமே கொஞ்சம் திரைமொழி தெரிந்த டெக்னிகல் அறிவாளர்கள் போதும்.
என்
இனிய கமலஹாசா.. நாங்கள் உன்னிடம் எதிர்பார்ப்பது அன்பே சிவத்தையும், ஹே
ராமையும், தேவர் மகனையும், மகாநதியையும். மாறாக- விஸ்வரூபம், தசாவதாரம், மன்மதன் அம்பு
போன்ற கமர்ஷியல் குப்பைகளை அல்ல.
தமிழ் சினிமாவுக்கும்- ஆஸ்கரை எட்ட
எந்திரன், தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற சிங்கப் பாதையை விட வழக்கு எண்,
ஆரண்ய காண்டம் போன்ற பூப்பாதையே உகந்ததென நான் நினைக்கிறேன்.
58 வயதான கமல், இன்னும் தன்னுடைய கேரியரில் முதன்மை நாயகனாக அதிகப்பட்சம் பத்து படங்கள் தரலாம். அந்த பத்தில் நாங்கள் இருக்க வேண்டுமென விரும்புவது மருதநாயகம், மர்மயோகி போன்ற படைப்புக்களைத்தான்.
மற்றபடிக்கு கமலின் டெக்னிக்கல், மேக்கப் மெனக்கெடல்களைப் பற்றி புதிதாக சிலாகிப்பதற்கு ஒன்றுமில்லை. இதை அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் காலத்திலிருந்தே பார்த்து வருகிறோம். டெக்னிகல் அறிவு, மேக்கப் சங்கதிகள் போன்றவற்றில் விஸ்வரூபமெடுக்கும் கமலை விட இயக்குனராய், திரைக்கதையாளனாய் விஸ்வரூபமெடுக்கும் கமலைத்தான் மிக விரும்புகிறேன். இப்போதும் விஸ்வரூபத்தை தனித்தனி காட்சிகளாக பார்க்கும் போது- சின்னச்சின்ன நுணுக்கங்களில் வெளிப்படும் கமலின் புத்திசாலித்தனம் ஆச்சர்யம்தான்; அதற்கான ராக்ஷஸ உழைப்பு பிரமிப்புதான்; வசனங்களில் வெளிப்படும் இன்டலெக்சுவல்தனம் புருவ உயர்த்தல்தான்!! இவையனைத்தும் திரைக்கதையில் ஒன்று சேர்கையில் சுவாராசியத்துக்கான மையஇழை அறுபட்டு அவ்வபோது வாயையும் உயர்த்த வைக்கிறது- கொட்டாவிக்காக..
படத்தில் பெரிதாக தூக்கிவைத்து கொண்டாடப்படும் ஆஃப்கன் காட்சியமைப்புகள் எனக்கு ஆயாச உணர்வையே தந்தன. க்ளைமாக்சிலும் முழுமையில்லை. ஹாலிவுட் ஆக்ஷன்-மசாலாப் படங்களில், இதுபோல ஆரம்பம் சுவாரசியமாய் அமைந்து.. நடுவில் கொட்டாவியை வரவழைத்தாலும் இறுதியில் ஒரு பிரமாதமான ஆக்ஷன் ப்ளாக்கோ, விசிலடிக்க வைக்கும் கிராபிக்ஸ் உத்திகளையோ வைத்து ஒட்டுப்போட்டு
ஒருவாறாக ஒட்டுமொத்த படத்தையுமே சமன்படுத்தி விடுவார்கள். ரசிகனும் கொடுத்த காசு க்ளைமாக்ஸ்'ஸிற்கே சரியாப்போச்சி என்கிற திருப்தியுடன் தியேட்டரை விட்டு வெளியே வருவான். விஸ்வரூபத்தில் இதுபோன்றதொரு உணர்வும் மிஸ்ஸிங். ஏதோ ஐந்து மணிநேர படத்தை மூன்று மணிநேரத்திலேயே நிறுத்தி, "போய்ட்டு வாங்க சாமிகளா.. மீதி அடுத்த பாகத்தில்.." என்கிறார்கள். காத்திருக்கிறேன்!!
இப்படைப்பை புரிந்துகொள்ள முடியாதவர்கள்தான் பிடிக்கவில்லை எனப் பிதற்றுகிறார்கள் என்கிற கருத்தையும் ஆங்காங்கே காண்கிறேன்! புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு இது ஒன்றும் பின்நவீனத்திய.. கிறிஸ்டோபர் நோலனிய.. நான்-லீனியரிய படம் கிடையாது. சாதாரண ஹை-டெக் கமர்ஷியல் மசாலா.அவ்வளவே!!
-இவ்வளவுக்குப் பிறகும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்காய் காத்திருக்கும் கடைக்கோடி கமல் ரசிகர்களில் ஒருவன் ,
குணா யோகச்செல்வன் :-)))
டிஸ்க்கி- ஆரம்பத்திலிருந்து விஸ்வரூபத்திற்கு கரைச்சல் கொடுத்து
தமிழ்சினிமாவை மீட்பிக்க வந்த அனாத ரட்சக ஆபத்பாந்தவ தியேட்டர் அதிபர்களுக்கும், தூங்கும்போதும் கூட சமூக அக்கறை மேலோங்கியபடி தூங்கும் 24 அமைப்புக்களுக்கும், தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை காப்பதற்கென்றே பிறவி எடுத்திருக்கும் சமூகநீதி வீராங்கனை புரட்சித்தலைவி இதயதெய்வம் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர். அம்மா அவர்களுக்கும் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுகுடல், பெருங்குடல் இன்னமும் உடலிலுள்ள அத்தனை உறுப்புகளும் கனிந்த நன்றிகள்!
இவர்களின் மேலான எதிர்ப்பாதரவு இல்லாமல் இப்படம் சாதாரணமாக வெளியிடப்பட்டிருந்தால் போட்டகாசு பெயர்ந்திருக்காது.
Exactly my sentiments :-)
ReplyDeleteamas32
நன்றிங்கம்மா :-)))
Deleteஅருமை குணா. உங்களை பார்க்கும்பொழுதெல்லாம், இவ்வளவு திறமைகளை வைத்துக்கொண்டு, ஒன்றுமே தெரியாத மாதிரி முகத்தைவைத்துக்கொண்டு ஒரு அப்பாவியா எப்படி இருக்க முடிகிறது என்று வியந்துள்ளேன். நீங்கள் படிப்படியாக ஒவ்வொரு கருத்தையும் வார்த்தை ஜாலங்களுடன் எடுத்துரைத்த பாங்கை பார்த்து அசந்து விட்டேன். யாராலும் மறுக்க முடியாத பாய்ண்டுகள். சமூகத்தில் உள்ள அணைத்து மக்களும் புரிந்து கொள்ளும்படியாக படம் எடுக்காமல் நகரத்து மக்கள், படித்தவர்கள் என்று ஒரு சாரார் மட்டுமே புரிந்து கொள்ளும்படியான படம் எடுத்தால், படம் வெற்றிப்படம் என்று சொல்லிக்கொள்ளலாம், ஆனால் எப்படி வியாபாரமாகும்? ஒரு நல்ல திறமைசாலி தன் உழைப்பை, பணத்தையும் திறமையையும் வீணடித்துக்கொண்டிருக்கிறார். வாழ்க வளர்க
ReplyDeleteமிக்க நன்றி சார் :-)))
Deleteஎனக்கு கொஞ்சமே கொஞ்சம் மாற்றுக்கருத்து இருந்தாலும் (குறிப்பாக குவாலிடி விஷயத்தில் கமல் நிஜமாகவே பிரயத்தன்னப்பட்டிருக்கிறார்), இப்பத்தியோடு அப்படியே ஒத்துப்போறேன்ப்பா..
ReplyDelete//இப்படைப்பை புரிந்துகொள்ள முடியாதவர்கள்தான் பிடிக்கவில்லை எனப் பிதற்றுகிறார்கள் என்கிற கருத்தையும் ஆங்காங்கே காண்கிறேன்! புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு இது ஒன்றும் பின்நவீனத்திய.. கிறிஸ்டோபர் நோலனிய.. நான்-லீனியரிய படம் கிடையாது. சாதாரண ஹை-டெக் கமர்ஷியல் மசாலா.அவ்வளவே!!//