Thursday, February 21, 2013

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்!



காதல் எத்தனையோ வருடங்களாக மனிதனை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கும் தேவதையின் பெயர். காதல்தேவதையின் றக்கைகளை வெட்டி வீழ்த்தாத மானுட நாகரீகங்களே இல்லை எனலாம். ஆயினும் அத்தேவதை ஆண்டாண்டு காலமாக மனிதர்கள் மீது பூச்சொரிந்து ஆசிர்வதிப்பதை நிறுத்தியபாடில்லை.

    என்னதான் இருக்கிறது இந்தக் காதலில்?! என்னதான், காதல் ஹார்மோன்களின் சித்து விளையாட்டு என விஞ்ஞானிகள் படம் போட்டு விளக்கினாலும்- காதல் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டதுதான். பசியில் வாடி வதங்கி இருப்பவனிடத்தில் பசி எந்த அமிலத்தால் உண்டாகிறது எனக்கூறுவதால் பசி தீர்ந்துவிடுமா?
   
     இளமையின் அற்புதம் காதல். முன்பின் தெரியாத ஒரு விழியின் தீட்சண்யத்தில் தன்னையே தொலைத்துவிடும் மேஜிக். காலையில் கண்ணாடியில் அவள் முகமோ அவன் முகம் தெரிவதில் தொடங்கி, முகத்தில் அறையும் காற்றில் அவள் கூந்தல் வாசம் தேடுவது வரை எத்தனையெத்தனை மாற்றங்கள்.

        எவ்வளவுதான் காதலின் அழகியல் குறித்து பேசினாலும், இன்றைய தமிழ்ச்சூழலில் அது மட்டும் சாத்தியமில்லை. தருமபுரி சம்பவத்தை தொடர்ந்து சென்ற காதலர் தினம் வரை காதலையும் ஜாதியையும் மையமிட்டு நிறைய அரசியல் நடந்தேறி வருகிறது. மின் இதழ்களிலும் கூட நிறைய பதிவர்கள், காதலையும் ஜாதியையும் முன்னிறுத்தி நிறைய விவாதங்கள் செய்து வருகிறார்கள். எனவே காதல் குறித்த ஒரு தெளிவான புரிதல் வேண்டி பயணிப்போம்.

  வரலாற்றின் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் காதல் அதில் வாழ்ந்து கொண்டேதானிருக்கும். ஜூலியஸ் சீசர் முதல் ஹிட்லர் வரை காதலிக்காத, காதல் வயப்படாத, காதலால் வசப்படுத்தப்படாத மனிதர்களே இல்லை எனலாம்.  எனவே, காதல் இயல்பானது. இன்னும் சற்று ஆழப்போனால், காதல் காமத்தை போல பழமையான உணர்வல்ல. ஆதி காலத்தில் யாரும் யாரையும் புணரலாம் என்று இருக்கையில் மனிதன் தன் துணையை காப்பாற்றிக்கொள்ள கண்டுபிடித்த ஒரு கில்லாடித்தனமான உத்திதான் திருமணம். அதன் பின் பெண்ணை ஈர்க்க ஆண் விதவிதமாக முயல, அதைக் கண்டு அவள் நகைக்க, காதல் பிறந்தது!

 உலகெங்கும் உள்ள சமூகங்கள் காதலை- திருமணத்திற்கு முன்பான அந்த காலத்தை ரசிக்கவும், போற்றவும் துவங்க.. சில நிலபரப்புகளில், இனக்குழுக்கள் மத்தியில் இருந்த பகை காரணமாக காதல் இனக்குழுக்குள் சுருங்கிப்போனது. இதன் பரிணாம வளர்ச்சிதான் இன்றைய காதல் மீதான நெருக்கடிகள் அதுவும் குறிப்பாக தமிழகத்தில்.

  ஜாதி குறித்த புரிதல் உள்ளவர்கள் கூட காதலால் ஜாதி ஒழியுமா என்று கேட்பதும், காதல் தேவையா எனக்கேட்பதும் விசித்திரமாகவும் வேதனையாகவும் உள்ளது. முதலில் காதல் ஜாதியை ஒழிக்குமா என்று கேட்டால், “இல்லை, ஜாதிக்கு எதிரான அரசியலே அதை ஒழிக்கும்” (வேட்பாளர் தேர்வு தொடங்கி ஜாதி உண்டு).
இது குறித்த எனது முந்தய கட்டுரை http://www.koothaadi.in/2012/12/Casteandlove.html

ஆனால், காதல் தேவையா என கேட்பது, “பசித்தால் சாப்பிடத்தான் வேண்டுமா?” என்பதை போல அபத்தமானது.
எந்த ஒரு பண்பட்ட சமூகமும் தனி மனிதனுக்கான சுதந்திரத்தை மதிக்க வேண்டும் (வழங்க வேண்டாம், அவனிடம் இருப்பதை பறிக்காமல் விட்டால் போதும்)
தனி மனித உரிமைகளில் முக்கியமானது துணை தேர்ந்தெடுத்தல் தான்.

   இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் அறிவு, தேர்ந்து எடுக்கும் திறன் ஆகியவை ஆராயப்படவேண்டியவைதான். அவர்கள் எல்லோருமே சரியாக தேர்ந்தெடுக்கும் நிலையை அடைந்து விட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அதற்கான விவாதம் நம் கல்வி முறையிலிருந்து தொடங்க வேண்டும். படி, பணம் செய், செட்டில் ஆகு என்னும் நம் கல்வி முறையின் சாபம்! இவர்களுக்கு சரியாய் தேர்ந்தெடுக்க தெரியாது என சொல்லாதீர்கள், அது உங்கள் தவறு. உங்கள் பிள்ளைகளுக்கு காதலிக்க கற்றுக்கொடுங்கள், துணை தேர்ந்தெடுக்க கற்றுக்கொடுங்கள். அதை விட்டு விட்டு எக்காரணம் கொண்டும், காதலை எந்த நோக்கில் எதிர்த்தாலும் அது காட்டுமிராண்டித்தனமானது, மனித பண்பாட்டு வளர்ச்சிக்கே எதிரானது!

-காதலுடன்,
ஷான் ஷைலேஷ் @Koothaadi
 

3 comments:

  1. சாதி ஒழிப்பு, காதல் தொடர்பான பதிவென்பதால் நடுத்தர மக்களிடையே நிலவும் காதல் பற்றிய கருத்தை இங்கே பதிய விரும்புகிறேன். என் அம்மாவுக்கும் எனக்குமிடையே நிகழ்ந்த ஓர் உரையாடலில் போகிறபோக்கில் ஜாலியாக என் தாய் உதிர்த்த கமெண்ட் : "நீ தாராளமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ. ஆனா நம்ம ஜாதிக்குள்ளையே". இந்த வார்த்தைகளுக்குள் அடைபட்டு கிடக்கிறது அத்தனைவிதமான அரசியலும் அறியாமையும்.

    இதுதான் இன்றைய பெற்றோர்களின் காதல் தொடர்பான மனநிலை. காதல் திருமணம் புரிந்த சில பெற்றோர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்பது வருத்தமான செய்தி.

    ReplyDelete
  2. /கல்வி முறையிலிருந்து தொடங்க வேண்டும் /

    பணம் சம்பாதிபதற்காகவே படிப்பு என்ற எண்ணம் இக்கால மாணவர்களிடத்தில் பள்ளிகளாலும், கல்லூரிகளாலும் புகுத்தப்படுகிறது.
    நிச்சயம் நம் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.

    ஜாதிகள் இல்லாத அடுத்த தலைமுறையை உருவாக்க நம் ஒவ்வொரு இடத்திலும் இருந்து ஆரம்பிப்போம் "மாற்றத்தை".

    ReplyDelete
  3. காதல் திருமணம் புரிந்த பெற்றோர்களே தங்களின் பிள்ளைகளின் காதலை எதிர்க்கும் சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். காதலை ஒரு நோய் போல் பெற்றோர்கள் பாவிக்கின்றனர். இதில் தனது பிள்ளைகள் சிக்கிவிட கூடாது என்றும் நினைக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக தான் சாதியை அவர்கள் நெருங்குகின்றனர். என்பது என் எண்ணம்.

    // பசியில் வாடி வதங்கி இருப்பவனிடத்தில் பசி எந்த அமிலத்தால் உண்டாகிறது எனக்கூறுவதால் பசி தீர்ந்துவிடுமா? # பசிக்காக உட்கொள்வதை விட இன்று ருசிக்காகவே அதிகம் உட்கொள்ளப்படுகிறது காதல்.

    நல்ல எழுத்து நடை தம்பி ஷைலேஷ். வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete