Sunday, March 31, 2013

ஈழம் - புரிதலும் தேவையும்

ஈழம்- புரிதலும் தேவையும் (மாணவர் போராட்டத்துக்கு பின்)


 தமிழகத்தில் ஒரு சிறிய பிரளயம் நடந்து தணிந்து உள்ளது. மாணவர் போராட்டம் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய அளவில் ஒரு கவனத்தை ஈர்த்து இந்த போராட்டம் ஏன் இவ்வளவு காலம் மக்கள் மத்தியில் உயிரோடு இருக்கிறது என்ற தேவையையும் காட்டி உள்ளது.

 இன்னிலையில், தமிழர்கள் இந்த போராட்டத்தை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதை பார்த்தால், ஒரு விடயம் புலப்படும். தமிழர்கள் இரண்டாக பிரிந்து உள்ளனர். ஈழம் தேவை என்ற பார்வை உடையவர்கள். வேண்டாம் என தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமானவர்கள் (மிக குறைவே எனிலும்). இன்னொன்று ஈழம் தேவை என்பவர் மத்தியிலும் இரு உட்பிரிவு உள்ளனர். ஒன்று, பிரபாகரனையும் விடுதலை புலிகளையும் ஆதர்சமாக கருதுவோர். இன்னொன்று விடுதலை புலிகளை எதிர்ப்போர். தமிழக அரசியல் 1983-முதல் இதை சுற்றியே பின்னப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இதில் ஏதேனும் பிரிவை கொள்கைரீதியாக பின்பற்றுபவர்களே.
  1991-ல் ராஜீவ்காந்தி படுகொலைக்குப்பின் இந்த சூழல் மாறியது. ஈழம் தேவை என சொன்னவர்கள் கூட விடுதலை புலிகளை எதிராக கருதினர். அவர்களும் தங்களுக்கு உட்பட்ட பகுதியில் போல்பாட் அரசாங்கம் போல, பாசிச அணுகுமுறையோடு நடந்துகொண்டு முஸ்லிம், வெள்ளாளர்கள் ஆகியோரை வெளியேற்றினர். இந்த அணுகுமுறை தான் இன்று தெற்காசிய முஸ்லிம் நாடுகளை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பி உள்ளது எனக் கூட கருதலாம்.
  2002-க்கு பின் உலகமே தீவிரவாத அமைப்புகளை முடக்கும் நோக்கோடு செயல்பட்டு, அதில் விடுதலை புலிகளும் [போராளி அமைப்பனாலும்] சிக்கி கொண்டது. அதன் பிறகு அரசியல் ராஜாங்க ரீதியில் தவறான கொள்கையால் எந்த சூழலில் சிக்கி கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. 

    இப்பொழுது விடுதலை புலிகள் முற்றிலுமாக இல்லை. அவர்கள் இருந்தவரை அவர்கள் கொண்டதே ஈழம் குறித்த வரைமுறையாக இருந்தது. இப்பொழுது பல்வேறு மாற்று கருத்துகளும் வருவதால் அந்த கருத்தை மீள்வரைமுறை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு நாம் அங்கு மக்களுக்கு என்ன தேவை உள்ளது என புரிந்து கொள்ள வேண்டும்.
2009 போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆனப் பின் இன்னமும் எந்த மீட்பு பணியும் முழுவீச்சில் நடைபெறவில்லை, போதாக்குறைக்கு ராணுவ ஆதிக்கம் வேறு. அதை முதலில் படிப்படியாக குறைத்து அவர்களுக்கு வாழ்வுரிமை வழங்குவதே நம் முதல் கோரிக்கையாக இருக்கவேண்டும். அதுவே நாம் செய்ய வேண்டிய “முதல் உதவி”. பின்னர் பொதுவாக்கெடுப்பு, தனிநாடு கோரிக்கையை வைக்கலாம்.
தோழர் தியாகு சொன்னது போல நம் கோரிக்கையானது.   

    இராசபட்சேவின் சிங்கள அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு இழைத்த இனக் கொலை குறித்து தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு (Independent International Investigation) தேவை.

  • ஈழ மக்கள் மீது தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் இனக்கொலையைத் தடுத்து நிறுத்தப் பன்னாட்டுப் பாதுகாப்புப் பொறியமைவு (International Protective Mechanism) தேவை.
  • தமிழீழத்தின் இறைமையை (sovereignty) மீட்டெடுக்கும் வகையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு தேவை.

  இந்நிலையில் இலங்கை தூதர் கரியவாசம் மிக சாதுர்யமாக தமிழ்நாட்டை இந்தியாவை விட்டுத் தனிமைபடுத்தும் கருத்தை வெளியிட்டுள்ளார். இது ஏற்கனவே நம்மை ஏதோ வேண்டாதவர்கள் போலக் கருதும் வட இந்தியர்களுக்கு அவல் போல கிடைத்துள்ளது. எந்த கருத்தையும் பொது புத்தியில் அறைவதைப் போல சொன்னால் எளிதில் உரைக்கும்.அந்த உத்திதான் இது.



   நம் விதி எல்லாவற்றுக்கும் போரடவேண்டியதை போல் அமைந்துள்ளது. மலையாளிகளை, சிங்களவனை போல ராஜதந்திரதால் நாம் எதையும் அடையாத பொழுது நாம் எல்லாவற்றுக்கும் போராடத்தான் வேண்டும்.அதற்கு 2011-ல் நடைபெற்ற முல்லைபெரியாறு விவகாரம் அடிகோலினால், இந்த போராட்டமானது முழு வடிவத்தை காட்டி உள்ளது. இது தற்காலிக எழுச்சி ஆக இல்லாமல் நீண்ட கால செயல்திட்டதோடு செயல்பட்டால் இங்கும் ஒரு “மல்லிகை புரட்சி” நடைபெற்று ருவாண்டா, கொசோவா போல தனிநாடுபிறக்கும். இல்லையேல் காஷ்மீர், காவேரி போல “சிந்துபாத்” கதையாக நீளும்.
இரோம் ஷர்மிளா சொன்னது போல"ஒரு பெரிய போராட்டத்துக்கான தேவை... தீவிரம்உறுதிசுயநலமற்ற  நீடிப்புத்தன்மைநேர்மையான தொலைநோக்கு."
“சே குவேரா சொன்னது போல “போராட்டமானது மரத்தில் தானாக பழுத்து விழும் பழமல்ல.......அதை நாமாகத்தான் பறிக்க வேண்டும்”
மாற்றம் நம்மில்லிருந்து ஆரம்பமகட்டும்.

படித்துவிட்டு தங்கள்  மேலான பின்னூட்டங்களைப் பகிரவும்

-வி.தினேஷ் குமார் @dinesh_anat

Wednesday, March 6, 2013

சொர்கமே என்றாலும்...


    சொந்த ஊரு சிவகங்கை பக்கம் ஒரு சின்ன கிராமம். ஆனா பொறந்தது, வளந்தது எல்லாமே மதுரைல தானுங்க. ரொம்பநாளா மதுரைப் பத்தி எழுதணும்னு ஆசை. . சின்னவயசுல இருந்து நான் பாத்து ரசிச்ச மதுரையைப் பத்தி என்னோட பார்வையில் எழுதலாம்னு இருக்கேன். இந்த பதிவுல மீனாட்சி அம்மன் கோவிலும் என் அனுபவமும்!!!

 சின்ன வயசுல, அடிக்கடி அம்மா மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கூட்டிட்டு போவாங்க. அம்மா கைய புடிச்சுட்டு, அங்க சுத்திவந்த காலம் இன்னும் ஞாபகம் இருக்கு.
கிழக்கு கோபுரம் வழியாத்தான் உள்ள கூட்டிட்டு போவாங்க எப்பவுமே. வாசல் கிட்ட, வர்ற பக்தர்கள செக் பண்ண மெட்டல் டிடக்டரோட 5 இல்ல 6 போலீஸ் நிப்பாங்க. அவங்கள கடந்து உள்ளே போனதுமே, பொற்றாமரை குளத்தை சுத்தி போயி, அங்க இருக்க விபூதி பிள்ளயார கும்பிட்டுதான் அடுத்த சாமிய பாக்க கூட்டிட்டு போவாங்க அம்மா. தெப்பத்த சுத்தும்போது, தெப்பத்துக்கு நடுவுல இருக்க தங்கத்தாமரைய ஆச்சரியமா பாத்தபடி நடந்து போவேன். எதுக்குன்னு தெரியாமலே விபூதி அள்ளி பிள்ளையார் மேல போட்டுட்டு, மூணு சுத்து சுத்திட்டு அடுத்த எடத்துக்கு அம்மா பின்னாடியே போவேன்.

 விபூதி பிள்ளையார் இருக்க எடத்துக்கு பக்கத்துல, யானை தந்தத்துல செஞ்ச மீனாட்சி அம்மன் கோவிலோட மாதிரிய, கண்ணாடிக்குள்ள வச்சுருப்பாங்க. அஞ்சு நிமிஷம் அங்க நின்னு, இப்ப எந்த எடத்துல  இருக்கோம்னு தேடுவேன். வேடிக்க பாத்தது போதும், கூட்டம் வந்துரும் சீக்கிரம் வா போலாம்’னு கைய புடிச்சு இழுத்துட்டு போவாங்க அம்மா. மீனாக்ஷி சன்னதிதான் அடுத்தது. உள்ள கூட்டம் அப்டி இருக்கும். அம்மா கைய இறுக்கி பிடிச்சுப்பாங்க ஒரு பயத்துல. சாமி சன்னதிக்கு பக்கத்துல போனதுமே ,கடமை கண்ணியம் கட்டுப்பாடு உள்ள போலீஸ் ,கும்பிட்டது போது கெளம்புன்னு வெரட்டுவாங்க. அப்படி இருந்தும் சாமி தெரியற வரைக்கும் கும்பிட்டுட்டே, என்னையும் ஒரு கையில புடிச்சுக்கிட்டு  வருவாங்க அம்மா.

 அடுத்து சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு நடப்போம் ,போற வழியில இருக்க முக்குறுணி விநாயகர் தான் அடுத்த டார்கெட். பெரிய தொப்பயோட பிரம்மாண்டமா உக்காந்துருப்பாரு. மாரியம்மன் தெப்பம் தோண்டும்போது, திருமலை நாயக்கர் கண்டெடுத்ததா வரலாறு சொல்ற பலகை ஒன்னு வச்சுருப்பாங்க அங்கனையே. முக்குறுணி விநாயகர் சன்னதிக்கு மேல ,சுழலும் லிங்கம் ஓவியம் இருக்கும். ”அது எப்படிம்மா சுழலும்"னு அம்மா கிட்ட ஒரு தடவ கேட்டேன். அம்மா சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க, “அது சுத்தாதுடா.. எந்த பக்கம் நின்னு பார்த்தாலும் லிங்கத்தோட பீடம் நம்மள நோக்கி இருக்க மாதிரி வரைஞ்சிருக்காங்க. அது தான் இந்த லிங்கத்தோட ஸ்பெஷாலிட்டி”னு புரிய வச்சாங்க.
சுந்தரேஸ்வரர் சன்னதிக்குள்ள போனதும், வலது கைப்பக்கம் வெள்ளி அம்பல நடராஜர் இருப்பார். பார்த்து கன்னத்துல போட்டுக்கிட்டு நகருவோம். மீனாட்சி சன்னதியில இருக்க அளவு கூட்டம் இங்க இருக்காது எப்பவுமே. சுந்தரேஸ்வரர் தரிசனம் முடிஞ்சதும், பிரகாரம் வருவோம். சுவாமி பிரகாரத்துல சிவபெருமானோட 6 திருவிளையாடல்களும் சுவர்கள்ல சித்திரமாவும்,சிலையாவும் இருக்கும். அத வேடிக்கை பார்த்துட்டே நடப்பேன். ஒரு சில கேள்விகள் கேட்டதுண்டு அம்மா கிட்ட திருவிளையாடல் சம்பந்தமா.அம்மா பொறுமையா கதை சொல்லிட்டு வருவாங்க. பிரகாரம் முடிஞ்சதும் கொடி மரத்துக்கு பக்கத்துல போயி விழுந்து கும்பிட்டுட்டு,அம்மாவ ஐஸ் வச்சு பிரசாத ஸ்டால்’ல பிரசாதம் வாங்கி சாப்டுட்டு,திரும்புறது.


 அடுத்து.. அம்மன் சன்னதி முன்னாடி இருக்க கொடி மரம். அங்க விழுந்து கும்பிட்டு எந்திருச்சு திரும்பினா, என்ன விட ஒசரமா ஒரு விளக்கு இருக்கும். நந்தா விளக்கு’னு பேர். எப்பவுமே அணையாம எரிஞ்சுட்டே இருக்கும். ஆச்சரியமா பார்த்துட்டு வந்ததுண்டு அந்த சின்ன வயசுல.அடுத்தது ஆயிரங்கால் மண்டபம். எப்பயாவது ஒரு தரவ உள்ள போயி பார்த்துட்டு வர்றது. ஆயிரம் கால்’னு பேர் மட்டும் தான், ஆனா இருக்கறது 985 தூண்கள் தான். உள்ள கலை நயத்தோட பல சிலைகளும்,ஓவியங்களும் உண்டு. பஞ்சசபை, இங்கதான் நடராஜர் கால்மாத்தி ஆடினது’னு அம்மா ஒருமுறை சொன்ன மாதிரி ஞாபகம். ஆயிரம் கால் மண்டபத்துக்குள்ள இசை தூண்கள் உண்டு. ஒவ்வொரு தூணையும் தட்டுனா ஒரு விதமான சத்தம் வரும். அதிசயமா இருக்கும்... அத தட்டி பார்க்கும் போதும்.. ஒவ்வொரு விதமான சத்தம் வரும்போதும். திருக்கல்யாண மண்டபத்துல இருக்க சிற்பங்களும், ஓவியங்களும் ரொம்பவே அழகா இருக்கும் பார்க்குறதுக்கு.அப்பறம் இன்னொன்னு, அம்மன் சன்னதி பிரகாரத்துலன்னு நெனைக்கிறேன்.. மேத்தா தட்சிணாமூர்த்தி இருப்பார். அவர வேண்டினா படிப்பு நல்லா வரும்னு சொல்வாங்க அம்மா. பரீட்சைக்கு முன்னாடி அங்க போயி ஒரு அர்ச்சனை மறக்காம செய்றது உண்டு.ஒரு வழியா தரிசனம் எல்லாம் முடிச்டிசுட்டு வெளிய வரும்போது, மறக்காம சில்லுனு ஒரு ஜிகர்தண்டா குடிச்சுட்டு கெளம்புறது வழக்கம்.

  மீனாட்சி அம்மன் கோவில்ல ,முதல்ல மீனாட்சிய வணங்கிட்டு அடுத்து தான் சுந்தரேஸ்வரர வணங்குறது வழக்கம். இது மாதிரி இன்னும் இந்த கோவிலுக்குள்ள பல ஆச்சரியம் இருக்கு. அந்த காலத்துல வாழ்ந்த அறிஞர்களையும், அவங்க கட்டடக்கலையையும் பாராட்டியே ஆகணும். இன்னும் எவ்வளவோ இருக்கு சொல்றதுக்கு. எனக்கு தெரிஞ்சதயும், கேள்விப்பட்டதையும் எழுதி இருக்கேன். உங்களுக்கு தெரிஞ்சதையும், இதுல ஏதும் தவறு இருந்தாலும் தெரியப்படுத்தலாம். மீண்டும் அடுத்து ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கிறேன். நன்றி!!

அன்புடன்,
கண்ணா @pisasukutti