Saturday, July 14, 2012

சென்னை அரசு பொது மருத்துவமனை- ஒரு சாதாரணனின் பார்வையில்..

கடந்த வியாழனன்று உறவின நண்பரொருவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனை பெறுவதற்காக சென்னை சென்ட்ரல் எதிரேயுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. காலை எட்டு மணியிலிருந்து மதியம் மூன்று மணிவரை அங்கிருந்த அத்தனை நேரம்  முழுக்கவே கசப்பான அனுபவங்கள்.

முதலில் இவ்வளவு பெரிய மருத்துவமனையில் வெளியூரிலிருந்தோ, உள்ளூரி
லிருந்தோ வரும் பார்வையாளர்கள்/ நோயாளிகளுக்கு சரியான தகவல்களைத் தந்து வழிகாட்ட அங்கு ஒருவருமே இல்லை. சிறுநீரகவியல் துறையை தேடிப்பிடிக்க பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. வாசலிளிருந்த காவலரிடம், "கிட்னி சம்பந்தமான டிப்பார்மென்ட் எங்கேருக்கு'ண்ணே.. யாரை பார்க்கணும்.?"  "மேல போயி பாருங்க.." 
மேலே சென்று குங்குமம்- புதுசு கண்ணா புதுசு படித்துக் கொண்டிருந்த ஒரு நர்சிடம்.. "எக்ஸ்க்யூஸ்மீ சிஸ்டர்.. இந்த நெஃப்ராலாஜி.." புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல், "அவங்களைப் போய் பாருங்க.." கை மட்டும் இடது புறம் காட்டியது. கைகாட்டிய திசையில் சென்று, "சிஸ்டர்..நெஃப்ராலாஜி டிபார்ட்மென்ட் எங்கேருக்கு.?"  "எனக்குத் தெரியாதுங்க.."  சுத்தம்.. 
வேறு ஒரு மருத்துவமனை ஊழியரை அண்ணே என வழிமறித்து திரும்பவும் அதே பல்லவி.. "நீங்க கீழ ஒ.பி. வார்டுல போயி பாருங்க சார்.." 
 

-யோசித்துப்பாருங்கள்.. வெறுமனே தகவல்கள் பெற வந்த எங்களுக்கே இந்த நிலைமையெனில், சிகிச்சைக்காக தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து தினமும் கிளம்பி வரும் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் கதி.??

ஒரு வழியாக ஒ.பி வார்டை கண்டறிந்து அங்கு சென்றால்....  அவுட் பேஷன்ட் அட்மிஷனுக்கு அனாயசமாக நூறு ரூபாய், டோக்கன் க்யூவில் முந்திச்செல்ல எல்லோர் முன்னிலையிலும் சிறிதும் வெட்கமின்றி ஐம்பது ரூபாய் லஞ்சம்.. அடடா.. எங்கெங்கிலும் லஞ்சம் தலை, கை,கால் என அனைத்தையும் விரித்தாடுகிறது. போததற்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு முந்திச்செல்ல அனுமதித்ததை கேட்ட ஒன்றிரண்டு பேரை திமிருடன், தரக்குறைவாக பேசிய கொடுமையும் நடந்தது.


மருத்துவர்களின் அலப்பறை அதற்கும் மேல். விசிட்டிங் ஹவர் 10 AM - 1 PM. பணிக்கு வந்ததே பதினோரு மணிக்கு. சரியாக ஒரு மணியானதும், இன்னமும் க்யூவில் காத்திருக்கும் பல நோயாளிகள் பற்றிய கிஞ்சித்தும் கவலையுறாமல் கடையை சாத்திவிட்டு கிளம்பி விட்டனர். 


நோயாளிகளை அட்டென்ட் செய்வது இன்னும் கொடுமை. அங்கிருந்தது  ஒரு சீனியர். மூன்று இளம் மருத்துவர்கள் உட்பட மொத்தம் ஆறு மருத்துவர்கள். பொதுவாக அங்கிருந்த இளம் மருத்துவர்களிடம் நோயாளிகளை கனிவாக அணுகும் முறை சிறிதும் காணோம். ஒரு மருத்துவர் கடுவன் பூனை கணக்காக எல்லா நோயாளிகளிடம் முகத்தை காட்டிக்கொண்டிருந்தது கடும் எரிச்சலைத் தந்தது. போதாத குறைக்கு அந்த மருத்துவர் ஐயா அவ்வபோது மொபைலில் ஃபேஸ்புக் வேறு செக் செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பெண் மருத்துவர் ஒரு பேஷண்டை பார்த்து முடித்ததும், சமயங்களில் பேஷண்டை அட்டென்ட் செய்து கொண்டிருக்குக்கையிலேயும் மொபைலில் யாருடனோ கடலை. மேலும் அந்த அறையில் சிக்னலே  கிடைக்கவில்லையென சலிப்பு வேறு. இன்னொமொரு இளம் மருத்துவர் கொஞ்சம் துடிப்புடன் நோயாளிகளை அட்டென்ட் செய்து கொண்டிருந்தார். ஆனால் நாருடன் சேர்ந்து பூவும் நாறிய கதையாக சிறிது நேரத்திலேயே ஃபேஸ்புக் டாக்டர் மற்றும் செல்ஃபோன் டாக்டருடன் அரட்டை ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்.


ISO தரச்சான்றிதழ் பெற்ற மருத்துவமனையில் சுத்தமென்பது மருந்துக்கும் இல்லை; மாத்திரைக்கும் இல்லை. பொதுவாக நம்மவர்கள் ஆசியாவிலேயே அணைத்து வசதிகளுடனும் கூடிய பெரிய மருத்துவமனை, தெற்காசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம், ஆசியாவிலேயே பெரிய நூலகம் என கட்டிடங்கள் கட்டி முடிப்பதில் மட்டுமே திருப்தியடைந்து விடுகிறார்களோ எனத் தோன்றுகிறது. அதற்கப்புறமான பராமரிப்பு என்பதை பரணில் ஏறக்கட்டி விடுகிறார்கள். கட்டி முடித்ததும் எல்லாக் கட்டிடங்களுமே சுத்தமாக, பளபளவெனத்தானய்யா இருக்கும்..?அதற்கெதற்கு தரச்சான்றிதழ்.?? இந்த ISO-காரர்களின் கடமை தரச்சான்றிதழ் கொடுப்பதுடன் முடிந்து விடுமா.? அதற்கப்புறம் தரத்தை கண்காணிக்க மாட்டார்களா.? அவ்வாறு இல்லையெனில் கொடுக்கப்பட்ட தரச்சான்றிதழை திரும்ப பெற்றுக் கொள்வார்கலெனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழகத்தில் அதுபோல எதுவும் நடப்பதாக தெரியவில்லை.!!


சரி நல்ல விஷயங்களே இல்லையா.? துரதிஷ்ட்டவசமாக "இல்லை" என்பதே என் பதில். ஒரு பதிவு முழுக்கவே நெகட்டிவ் விஷயங்களை பட்டியலிட்டு எழுத எனக்கே சற்று சங்கடம்தான். ஆனாலும் வேறு வழியில்லை. ரொம்ப யோசித்துப் பார்த்தல் நோயாளிகள் சொல்வதை கனிவுடன் காது கொடுத்து கேட்ட மூத்த மருத்துவர் ஒருவர் மட்டுமே சிறிது ஆறுதல். அப்புறம் சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு, நண்பன் ஒருவனுக்கு ரத்த தானம் செய்ய சென்றிருந்தபோது, அவர்களின் அணுகுமுறையும், அவ்விடத்தின் பராமரிப்பும், அந்த சூழலும் உண்மையிலேயே நன்றாக இருந்தது.அதுவும்  இப்போது என்ன லட்சணத்தில் இருக்கிறதென தெரியவில்லை. 


தமிழகத்தின் பிரதான தலைமை பொது மருத்துவமனையின் லட்சணமே இதுவெனில், கிராமப்புறங்களில் உள்ள மருத்துமனைகளின் தரத்தை நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது..

மீண்டும் நோயாளிகளின் மீதான அணுகுமுறைக்கே வருவோம். ஒரு மருத்துவர், நோயாளிக்கு என்ன பிரச்சனை என்பதை வாஞ்சையுடன் காது கொடுத்து கேட்டு, ஆறுதலாக, நம்பிக்கையளிக்கும் விதமாக பேசினாலே பாதி நோய் குணமாகி விடுமென கேள்விப்பட்டிருக்கிறேன்; அது உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையும் கூட. ஆனால் அங்கிருந்த இளம் மருத்துவர்கள் நோயாளிகளை பேசவே விடவில்லை; பேச எத்தனித்த ஒரு மூதாட்டியை கடுமையாக எச்சரித்து வாயை அடக்கிய ஃபேஸ்புக் டாக்டரின் செயல்பாடுகள் அராஜகத்தின் உச்சம். ஊக்குகளை விழுங்கி, அது சிறுநீரகத்தில் சிக்கிக்கொண்டு ஆலோசிக்க வந்திருந்த சுமார் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவனை அழைத்து வந்திருந்த ஒரு தாய்க்கும் இதே அணுகுமுறைதான். ஒரு கணம் ஷங்கர் பட நாயகனாய் மாறி, அவரை வதம் செய்யும் வெறிகூட வந்ததெனக்கு...


அங்கிருந்த பெரும்பாலான மருத்துவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஏதோ உலகத்தை ரட்சிக்க வந்த இரட்சகரின் அமர்த்தலான தொனியைக் கொண்டிருந்தது. அதே சமயம்- மருத்துவர்களை கடவுள்களாகக் கருதும் நம் மக்களின் கண்ணோட்டமும் இதற்கொரு காரணம் என்பதையும் மறுக்க முடியாது.. நாமும் கொஞ்சம் மாற வேண்டும்.


இனி வரும் காலங்களில்,  மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு முதலில் மருத்துவத்தை சொல்லித்தருவதைக் காட்டிலும் நோயாளிகளை அணுகும் முறை குறித்து சொல்லித்தருவதே சாலச்சிறந்ததாக இருக்குமென கருதுகிறேன்.!!



ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன்

Thursday, July 12, 2012

அடையாறு ட்வீட்டப்


ஜூலை 08 2012 அடையாறு – ட்வீட்டப் 



ஒரு நாள் கருப்பையா (@ikaruppiah) என்னை மொபைலில் அழைத்து ஜூலை 08 2012 ஒரு சந்திப்பு @tparavai  - பரணி  @ikrishs – கிருஷ்ணகுமார்  எல்லாம் சந்திக்கிறோம், அன்று என் பிறந்தநாளும்கூட வாங்களேன் என்றார். எனக்கு சற்று தயக்கம்தாம். இவர்கள் இருவரும் சந்தில் எனக்கு அத்தனை பழக்கமில்லாதவர்கள். சரி கருப்புவின் பிறந்தநாள் அப்படியே இவர்களையும் தெரிந்துகொள்ளலாம் என வருகிறேன் என்றேன்.

இடையில் கருப்புவின் லீவு சந்திப்பு இருக்கா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இடையில் திடீரென்று @pizaithiruthi  - கணேஷன் சந்தில் என்னை ட்வீட்டப் பற்றிய ஒரு ட்ரெயினில் ஏற்றியிருந்தார். ஓ அப்போ ட்வீட்டப் இருக்கு என முடிவு செய்து கருப்புவிற்கு போன் செய்தால் ஆமாம் தல என்கிறார். சரி புதியவர்களை சந்திக்கும் ஆர்வம் வழக்கம் போலவே அப்போதே தொற்றிக்கொண்ட்து. ஆதலால் வழக்கமான எங்கள் வீக் எண்ட் CC ட்வீட்டப் வெள்ளியன்று கங்கா ட்வீட்டப்பானது @ravan181 @sesenthilkumar @g4gunaa உடன்.

காட்சி மாறுகிறது. ஜூலை 08 2012 மதியம். கருப்பிற்கு போனில் அழைத்து கன்ஃபர்ம் செய்துகொண்டபின் அடையாறு வந்தடைந்தேன். நான் சீக்கிரம் வரக்கூடாது என நினைத்து கருப்பையா என்னை வேறு இடத்தில் "Rice Bowl Restaurant" இருக்கு என சொல்லி அலையவிட்டு பின்னர் அடையாறு பேருந்து நிறுத்ததிற்கு எதிரில் இருக்கு என சொல்லி வரச்சொன்னார். ஏன் என்னை தாமதப்படுத்தினார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். இதற்குள் ஒரு சின்ன ப்ளாஷ்பேக். காலையில் ட்வீட்டப் இருக்கான்னு சந்திற்கு வந்து பார்த்தால், @pizaithiruthi  அதே சந்தேகத்தோடு சந்தில் இருந்தார். எங்கே இருக்கீங்க என கேட்டால் வடபழனி என்கிறார். ஆனால் இன்னமும் பல்லுகூட விளக்கவில்லை ஆகவே பொறுமையாக சந்திக்கலாம் என கூறினார். சரி ட்வீட்டப்பிற்கு வரும்போது சந்திக்கலாம் என நானும் இருந்துவிட்டேன்.

ஒரு வழியாக இடத்தை கண்டுபிடித்து மேலே போனால் அதற்குள் கச்சேரி ஆரம்பித்திருந்தார்கள். அங்கே நான் முன்னமே சந்தித்திருந்த @ikaruppiah  -கருப்பையா, @nforneil -நீலமேகம்,  @_santhu -சந்தோஷ், @puthagappuzhu -வினோத்,  @4sn –செந்தில் நாதன், @isankars –சங்கர் இவர்களுடன் @tparavai  -பரணி @ikrishs -கிருஷ்ணகுமார் @ramkumar_n  -ராம்குமார் இவர்களும் இருந்தார்கள். வந்தவுடன் வழக்கமான அறிமுகத்திற்கு பின் கச்சேரி ஆரம்பித்தது. இதற்கிடையில் பிழைதிருத்தி போன் செய்தார். எங்கே வரனும் தல என்றார். அடையார் பேருந்து நிலையம் எதிரில் என்றேன். இல்லைங்க வடபழனியில் எங்கு வரட்டும். உங்களையும் அழைத்துக் கொண்டு போகிறேன் என்றார். சார் நான் இங்கு வந்துவிட்டேன் என்றேன். ஓ சரி நான் சிறிது நேரத்தில் அங்கு வந்துவிடுகிறேன் என்றார்.

சாப்பாட்டில் என்ன குறை இருக்கிறது என்பது தெரியக்கூடாது என்பதற்கோ அல்லது அடுத்த டேபிளில் யார் உட்கார்ந்து தண்னியடிக்கிறார்கள் என தெரியக்கூடாது என்றோ இது போன்ற ஹோட்டல்களில் வெளிச்சம் மிகவும் மந்தமாகவே இருக்கிறது. இங்கும் அப்படித்தான் டேபிளில் சரக்கு இருந்தாலும் இருட்டில் யார் யார் அதை குடித்தார்கள் என்பது தெரியவில்லை. எல்லோரிடமும் அறிமுகம் செய்து பின் நானும் செட்டில் ஆனேன். திரு.பறவை அவர்களுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். நான் யாரென்றார். சொன்னால், "ஓ..அப்படிங்களா... நான்கூட நீலமேகம்தான் அவருடைய அப்பாவையும் அழைத்து வந்துவிட்டாரோ என் நினைத்தேன்.." என என் வயதை கலாய்க்கிறாராம். சந்தை போலவே டேபிளும் கலை கட்டியது. கிருஷ் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஏனோ அவர் ஹோட்டலில் மிகவும் அமைதியாகவே இருந்தார். 

அன்றைய நாயகன் கருப்பும் மிகவும் அமைதியாகவே இருந்தார். டேபிளில் காத்திருந்த கேக்கை வெட்டினார். பாசத்துடன் பறவைக்கு அதை ஊட்டிவிட்டார். பாசம் என்று நினைத்து இல்லை அதில் ஏதுமில்லை என உறுதிசெய்துகொள்ளவே முதலில் அவருக்கு ஊட்டி விட்டதாய் பின்னர் தெரிவித்தார். கேக் அபிஷெகம் இரவு அறையில் நடந்து விட்டதால் இங்கு வேண்டாம் என கருப்பு கேட்டுக்கொண்டார். வினோத், நீலமேகம், சங்கர் போன்றோரும்  சாப்பிட கேக் இருக்காது என்பதால் அபிஷேகம் வேண்டாமென முடிவு செய்தனர். சாதாரணமாக ஆரம்பித்த உரையாடல்கள் மெல்ல அவரவர் ட்வீட்டும் ஸ்டைல் பற்றி மாறி பின்னர் இலக்கியம் பக்கம் திரும்பியது. புத்தகப்புழு சமீபத்தில் பிரபலமாக்கிய மாலதி டீச்சர் பற்றி எங்கள் டேபிள் மட்டுமல்ல அந்த ரெஸ்டாரண்டே அதிர விவாதம் நடந்தது. MIT முன்னாள் மாணவர்களான பறவையும் புத்தகப்புழுவும் மாலதி டீச்சரைவிட்டு வேறு யாரோ சிலரை பற்றியும் இந்த இலக்கிய விவாதத்தின் போது பேசிக் கொண்டார்கள். அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். விவரம் வேண்டுபவர்கள் அவர்களை தொடர்பு கொள்ளவும். இதில் நடுவே பறவையை “உனக்கு இவ்வளவு கேவலமான டேஸ்டாய்யா. உன்கூட சேரவே கூடாதுஎன புத்தகப்புழு கூறியது மட்டும் காதில் விழுந்தது. வழக்கமான சந்தை போலவே நிறைய பாறைகளும் கவுண்டர்களும் சரமாரியாக விழுந்தன. குறிப்பு எடுக்க முடியவில்லை. கலந்து கொண்டவர்களுக்கு நினைவில் இருப்பவை அதையெல்லாம் விரைவில் ட்வீட்டுகளாக வெளியிடுவார்கள் என நம்புவோமாக. இதில் பறவையும் கிருஷ்ணகுமாரும் பேசுவதே ட்வீட்டுவது போல நக்கலும் நையாண்டியுமாக்த்தான் இருக்கும் போல. “பேசுவதைத்தானே கீச்சுகிறேன்என பறவை சொன்னதும் இது பல RT பெற வல்ல கீச்சு என அங்கிருந்த அனைவ்ரும் அதை RT செய்தோம். 


 இடமிருந்து வலமாக- @ikaruppiah @NforNeil @4SN @Pizhithiruthi @iSankarS @Senthilchn @Tparavai @puthagappuzhu @iKrishS @ramkumar_n குத்தவைத்து ஒக்காந்திருப்பவர் @vilambaram

இதற்கிடையே @vilambaram – சக்திவேல்  அழைத்தார். இடம் சொன்னார் கருப்பையா. வந்து சேர்ந்தார். இவருக்கு அப்படி என்னதான் என்மேல் பாசம்னு தெரியலை. என்னை அடிக்கடி நெகிழ வைத்துவிடுவார் அந்த வெள்ளை சிரிப்பால்.

சாப்பிட என்ன சொல்லியிருக்கீங்க என்றால், 5 சிக்கன் பிரியாணி என்றார்கள். சரி மேலும் இரண்டு ஆர்டர் செய்யுங்கள் என்றால். இல்லைங்க அவ்வளவுதான் இருக்கு என்றார்கள். சைனீஸ் ரெஸ்டாரண்டில் வந்து பிரியாணி சொன்னால் அப்படித்தான். அவர்கள் லிமிடெடாதான் செய்வார்கள் போலும். சரியென இருப்பதை பகிர்ந்து சாப்பிட்டோம். சரக்கு அடிக்கப்பட்ட்து. நடுநடுவே கீச்சுகள் பல உதிர்க்கப்பட்டன. எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன் கபாப் சொன்னேனே எங்கே காணவில்லை என தேடிக் கொண்டிருந்தார் சந்திப்பின் இணை நாயகன் திரு.பறவை. அவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது சந்திப்பின் மற்றுமொரு விசேஷம். பேசிக்கொண்டிருக்கையில் பிழைதிருத்தி வந்தார். ஆனால் அவர் வரும்போது கிட்டத்தட்ட எல்லோரும் சாப்பிட்டு முடித்திருந்தோம். அவருக்கு மிஞ்சியது கேக் துண்டுதான். அதைகூட சாப்பிட்டாரா இல்லையா என தெரியவில்லை. அவருடைய சினிமா இலவச மேகசின் பற்றி கூறினார். அந்த ப்ராஜக்ட் விஷயமாகத்தான் சென்னை வந்திருப்பதாக கூறினார். 

 4sn அமைதியாய் இருந்ததை பார்த்து இது செந்தில்தானா இல்லை அவரை போலவே இருக்கும் வேற ட்வீப்பா என சில நிமிடங்கள் யோசித்தேன்.
 பறவையும் மற்றவர்களும் கிரிஷ்ணகுமாரை பற்றி பேசுகையில் ஏதோ ஹமாம் ட்வீட் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல எனது மறதியால் எனக்கு என்னவென்று நினைவில் இல்லை. அவரவரின் அல்லது மற்றவர்களின் ட்வீட்டுகளை பற்றி பேசிக்கொண்டார்கள். என்னுடைய ட்வீட்டுகள பற்றி ஏதும் பேசப்படவில்லை என்பதில் சிறு ஏமாற்றம் இருந்தாலும் மகிழ்ச்சியும்தான். ராம்குமார் மட்டும் எனது கடலை மிட்டாய் ட்வீட்டை பார்த்துதான் என்னை பாலோ செய்ததாய் கூறியது சற்று ஆறுதலான விஷயம்.

மணி 3.00 எட்டியது. அந்த ரெஸ்டாரண்ட் 3.00 மணிக்கு மூடிவிடுவார்களாம். பில்லோடு வந்துவிட்டார் சர்வர். சரியென இடத்தை காலி செய்தோம். குரூப் போட்டோ எடுத்துகொண்டு கீழே வந்து அரட்டை ஆரம்பம். என்ன பேசினோம் என தெரியவில்லை. பறவையும் விளம்பரமும் கருப்பையாவின் பட்த்தை வரைந்து அவருக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தார்கள். சந்துக்கு ஏதோ அவசர வேலை இருப்பதாக கூறி கிளம்பிவிட்டார்.


 கருப்புவை வரைந்து கருப்புவுக்கே  பரிசளிக்கும் விளம்பரமும், பறவையும்..

12 பேரில் மீதமிருந்த 11 பேரும் கருப்பையாவின் வீட்டிற்கு சென்றோம். அங்கு சென்றும் வழக்கமான அரட்டைதான். கருப்பையாவின் வீடு அடையாறில் அமைதியான ஒரு சூழலில் இருக்கிறது. அவரது வீட்டிற்கு முன்னால் இருந்த ஒரு திண்ணையை பிழைதிருத்தி படமெடுத்தார். கேட்டால் இங்குதான் கருப்பு உட்கார்ந்து கவிதை எழுதியதாக வரலாறு கூறும் என்றார். எங்கள் எல்லோருக்கும் ஒரு சந்தேகம். கருப்பையாவின் வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. ஒரு பேச்சிலர் வீடு போலவே இல்லை. எங்களுக்கு எல்லாம் தெரியக்கூடாது என்பதால் திருமணம் ஆன விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எங்கள் பலருக்கு. நல்லா இருந்தா சரிதான்.

4sn  குஷ்பூவுடன் போட்ட சண்டை பற்றி கொஞ்சம் பேச்சு ஓடியது. பிறகு பறவை தான் இளையராசாவுக்காக எதுவும் செய்வேன் என்றார். நல்லவேளையாக யாரும் ரகுமான் ராசா சண்டையை அங்கு ஆரம்பிக்கவில்லை. இப்படியாக பேச்சு நீண்டுகொண்டே இருந்தது. காலையில் தவறவிட்ட திருமணத்தின் ரிசப்ஷன் 6.30மணிக்கு இருந்தது என் நினைவிற்கு வந்ததால் கிளம்பலாமா என நான் ஆரம்பித்தேன். சரியென எழுந்து வெளிவந்த பின் கருப்பையாவின் வீட்டைவிட்டு கிளம்ப அதற்கு பிறகு 30 நிமிடமாகியது தனிக்கதை.

Nforneil நாள் முழுதும் வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தது எல்லோருக்கும் ஆச்சர்யம். ஏன் இப்படி மாறிவிட்டார் என தெரியவில்லை. அங்கு பேசியதையெல்லாம் வைத்துக்கொண்டு சங்கர் சந்தில் என்ன புது பிரச்சனைகளை கிளப்ப போகிறார் என தெரியவில்லை.

g4gunaa – குணா யாரோ அவரது பள்ளி நண்பர்களை பார்க்க என்று சென்றவர் கடைசி வரையில் வரவேயில்லை. எனக்கு நம்பிக்கையேயில்லை. வேற யாரோ சென்னைக்கு வந்திருக்க வேண்டும் என்பது என் யூகம். 

@nchozhan இவரும் வருவதாய் கூறியிருந்தார். அவருக்கு ட்வீட்டப் நடக்கும் இடத்தையும் நேரத்தையும் சொல்ல மறந்துவிட்ட்தால் அவரையும் தவறவிட்டுவிட்டோம்.

ஆக இப்படியாக இந்த ட்வீட்டப் இனிதே முடிந்தது. 

அன்புடன்,
செந்தில் நாதன் @Senthilchn