கமலின் விஸ்வரூபத்தை தியேட்டரில் மட்டும் ரிலீஸ் செய்யாமல் டிடிஎச்-ல்
ஒளிபரப்புவது சரியா என இங்கே ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. என்
கருத்து, ஒளிபரப்புவது சரியா என்பதைவிட நாம் தியேட்டரில் பார்க்க
போகிறோமா, டிடிஎச் மூலம் வீட்டிலா என்று விவாதிப்பதே சரியானதாக இருக்கும்
என்பதே.
சினிமா ஒரு ஊறுகாய் வியாபாரம் எனக்கொள்வோம். கமல் என்ற வியாபாரி தனது
ஊறுகாயை வழக்கமான அண்ணாச்சி கடையோடு சேர்த்து, டோர்டெலிவரி செய்யும்
அம்பானி கடையிலும் விற்க முயல்கிறார். அது வியாபாரியின் வசதி.
வீட்டைவிட்டு வெளியில் வந்து கடைகளில் வாங்க விரும்பாத மேல்தட்டு
கூட்டம் ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கும் தன் பொருள்
போய்சேர வேண்டும் என ஒரு வியாபாரி நினைப்பதில் தவறெதுவும் இருப்பதாக
தெரியவில்லை. இதனால் தெருமுக்கு அண்ணாச்சி கடைகளை மூட வேண்டியதுதான் என்பது
அபத்தம். அண்ணாச்சி கடையோ அம்பானி கடையோ மூடப்படுவதற்கு டோர்டெலிவரி
சேவை காரணமாக இருக்காது என்பதுதான் எல்லோரும் விளங்கவேண்டியது.
தொலைதூரக் கல்வி துவங்கியதால் ரெகுலர் கல்லூரிகள் மூடப்படவில்லை.
கல்லூரிசெல்ல முடியாதவர்களுக்கு துவங்கப் பட்டதுதான் தொலைதூரக் கல்வி.
இதுதான் வியாபாரியின் தரப்பிலான சிம்பிள் லாஜிக்.
சரி கடைக்காரர் தரப்பு? எந்த ஒரு தொழிலும் காலமாற்றத்திற்கேற்ப இழைந்து
கொடுத்தே நிலைத்திருக்கிறது. முன்பு தெருச்சுவற்றில் விளம்பரப் படம்
வரையும் அற்புதக் கலைஞர்களின் தற்போதைய நிலையென்ன? கொஞ்சம் புத்திசாலிகள்
கணினிவரைகலை கற்று பிளக்ஸ் பேனர் சுழலில் தப்பிப்பிழைக்கிறார்கள்.
அப்டேஷன் அவசியம் என்கிறேன். தரமான சேவை வழங்காவிட்டாலோ, கடைக்கு வெளியே
அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்றாலோ வாடிக்கையாளர்கள் திசைதிரும்புவது
இயல்புதானே. திரும்பும் திசை, திருட்டு ஊறுகாயாக இருப்பதுதான் தொழிலுக்கே
வினை.
எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இன்னும் இரண்டே வருடத்தில் இதை கமல் என்ற
உள்ளூர் வியாபாரி செய்யாவிட்டாலும் ஹாலிவுட் ஊரிலிருந்து வால்மார்ட் வகையறா
வியாபாரிகள் நம்ஊரில் தம் சரக்கை விற்கவருவர், இதே கடைக்காரர்கள் அப்போது
எழுப்ப குரலே இல்லாமல் நெரிக்கப்படலாம் (எஃப்டிஐ நினைவில் கொள்க).
உள்ளூர் வியாபாரிக்கு உடன்படா கடைமுதலாளிகள் உலக வியாபாரிக்கு கம்பளம்
விரிப்பர், வேண்டாவிருப்பாக!
நிற்க..
நுகர்வோராகிய நமது பார்வை எப்படி இருக்க வேண்டும்? ஊறுகாயில் மசாலா
குறைவு, உப்பு அதிகம் என விமர்சிக்கும் - விலக்கி வைக்கும் முழு உரிமை காசு
கொடுக்கும் நம் எல்லோர்க்கும் உண்டு. அதேபோல், தரமானதாக ஆரோக்யமானதாக
இருப்பின் கொண்டாடும் கடமையும்!
நமக்குமுன் இரண்டு தேர்வுகள் வைக்கப்பட்டிருக்கிறது: தியேட்டரா,
டிடிஎச்-ஆ. (இரண்டுமன்றி ஊறுகாய் டோர்டெலிவரி செய்யவருபவரை இடைமறித்து
தாக்கி பிடுங்கித் தின்னும் திருட்டுவிசிடி குணத்தினரை இங்கே விவாதிப்பது
வீண்) இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது முழுக்க முழுக்க நமது சௌகரியம்.
வியாபாரியோ, அவரின் தயாரிப்பை விரும்பும் ரசிக நுகர்வோரோ எதையும்
வற்புறுத்தி திணிக்கவில்லை.
கோடியில் ஒரு சாதாரண நுகர்வோனாகிய நான், அண்ணாச்சி கடைக்கு செல்ல
ஆகும் போக்குவரத்து செலவு, காத்திருப்பு நேரவிரயம் கணக்கில் கொண்டு
டோர்டெலிவரி சேவையை விரும்பலாம். அல்லது, கடைக்கு சென்றால் கிடைக்கும்
கொசுறு, pleasure of travel, outing சந்தோஷங்களுக்காக அதனை
தேர்ந்தெடுக்கலாம். அது எனது நேர - பண - குண வசதியைப் பொறுத்தது.
அதைவிடுத்து டிடிஎச் சரியா தவறா, பிழையா முறையா போன்ற கேள்விகளுக்கு இடமேயில்லை என்றே கருதுகிறேன்.
~ அசோகர்
@ashoker_UHKH